இப்படிக்கு தேவதை
|உளவியல் பிரச்சினைகளுக்கு வல்லுநர் வழங்கும் தீர்வுகளை காணலாம்.
1. நான் பள்ளி இறுதியாண்டு படித்து வருகிறேன். இயல்பிலேயே கூச்ச சுபாவம் காரணமாக யாரோடும் அவ்வளவாக பேச மாட்டேன். மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வருகிறேன். அவ்வப்போது அருகில் இருக்கும் கோவிலுக்குச் செல்வேன்.
போகும் வழியில் எதேச்சையாக பார்த்த ஒருவரை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அவரும் நானும் இதுவரை பேசியது இல்லை. அவர் என்னை பார்த்ததும் இல்லை. ஆனால், எனக்கு அவரை தினமும் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. தொடர்ந்து அவர் நினைவிலேயே இருக்கிறேன். படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. சில நேரங்களில் இது தவறு என்று யோசிக்கிறேன். ஆனாலும் இதில் இருந்து வெளிவர முடியவில்லை. எனக்கு வழிகாட்டுங்கள்.
இந்த வயதில் இத்தகைய தடுமாற்றங்கள் அனைவருக்கும் வரக்கூடியதுதான். உங்கள் எண்ணங்களுக்காக, வருத்தமோ அல்லது குற்ற உணர்வோ கொள்ளவேண்டாம். உங்கள் வயதில், எதிர் பாலினத்தவரால் நீங்கள் கவரப்படும்போது, உங்கள் உடலில் ஆக்ஸிடோசின், டோபமைன் மற்றும் பைனிலெதிலமைன் எனப்படும் ரசாயனங்கள் சுரக்கும். இவற்றின் தாக்கத்தால்தான், நீங்கள் தொடர்ந்து அந்த நபரைப் பற்றி சிந்திக்கிறீர்கள். இது காதல் அல்ல.
இத்தகைய உணர்வில் இருக்கும்போது, அதனால் ஏற்படக்கூடிய எதிர்மறை விளைவுகளைப் பற்றி சிந்திக்க முடியாது. உங்கள் முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்படும். எனவே இதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு, வாழ்வில் முன்னேறுவதற்கான அடுத்த கட்டத்தை நோக்கி மனதை செலுத்துங்கள். படிப்பைத் தவிர, உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் நேர்மறையான செயல்களிலும் ஈடுபடுங்கள். இதனால் உங்கள் மனம் ஒருமுகப்படும். உங்கள் விருப்பப்படி நீங்கள் மருத்துவராவதற்கு வாழ்த்துக்கள்.
2. எனக்கு திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். நான் குடும்பத்தை கவனித்து வருகிறேன். கடவுள் பக்தி அதிகம் கொண்டவள். தினமும் பூஜை செய்வது வழக்கம். என்றாவது ஒரு நாள், ஏதோ ஒரு காரணத்தால் பூஜை செய்யவில்லை என்றாலோ அல்லது நான் பூஜை செய்வதற்கு முன்பு அக்கம் பக்கத்தினர் வீட்டில் பூஜை செய்யும் மணியோசை கேட்டாலோ, 'நான் பக்தியோடு இல்லையோ?' என்ற குற்ற உணர்வு தோன்றுகிறது. அன்று முழுவதும் என்னால் எனது வேலைகளை சரியாக செய்ய முடிவதில்லை.
தொடர்ந்து அதையே நினைத்து கவலை கொள்கிறேன். இது இயல்பானதா? இல்லை எனக்கு ஏதாவது மனநோய் இருக்கிறதா? தயவு செய்து ஆலோசனை தாருங்கள்.
தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவதன் காரணம் என்ன? வழிபாட்டு சடங்குகள் நமக்கு ஒழுக்க உணர்வைத் தருகின்றன. ஆனால், அதுவே உங்கள் அன்றாட செயல்பாட்டைப் பாதிக்கிறது என்றால், சரியான
காரணங்களுக்காக நீங்கள் அதில் ஈடுபடவில்லை என்று அர்த்தமாகும்.
நீங்கள் உங்கள் அண்டை வீட்டாருடன் போட்டியிடுகிறீர்களா? அல்லது நீங்கள் மிகவும் பக்தியுள்ளவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிக்க முயற்சிக்கிறீர்களா? காரணங்களைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். வழிபாட்டு முறைகளில் ஈடுபடுவதற்கான உங்கள் நோக்கம் என்ன? என்று உங்களுக்குள் சிந்தித்துப் பாருங்கள். இந்தக் கேள்விக்கான சரியான பதில் உங்களிடம் இருந்தால், உங்களுக்குள் தெளிவு பிறக்கும். நீங்கள் குற்ற உணர்வு கொள்ள மாட்டீர்கள்.
வாசகிகள் உங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',
தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.
மின்னஞ்சல்: devathai@dt.co.in
டாக்டர் சங்கீதா மகேஷ்,
உளவியல் நிபுணர்.