< Back
மற்றவை
மற்றவை

இப்படிக்கு தேவதை

தினத்தந்தி
|
12 Jun 2022 1:30 AM GMT

எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகத் தோன்றுகிறது. அவற்றை எவ்வாறு கையாள்வது என்று வழிகாட்டுங்கள்.

1. எனக்கு 60 வயது ஆகிறது. என் கணவர் 40 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். எனது ஒரே மகள் சில ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்று என்னுடன் வசித்து வருகிறாள். அவளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. எனக்கு உறவினர்கள், நண்பர்கள் என யாருடைய ஆதரவும் இல்லை. சமீப காலமாக எனக்குள் பயம், பதற்றம் அதிகரித்து வருகிறது. எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகத் தோன்றுகிறது. அவற்றை எவ்வாறு கையாள்வது என்று வழிகாட்டுங்கள்.

உங்கள் வயது மற்றும் நீங்கள் கடந்து வந்த உங்கள் வாழ்க்கை நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டால், நீங்கள் உணர்ச்சி ரீதியில் தாழ்வாக உணர்கிறீர்கள் என்பது புரிகிறது. உடல் ரீதியிலான உபாதைகள், உங்களுடைய மனநிலை மாற்றங்கள், பதற்றம் மற்றும் எதிர்மறை எண்ணங்களுக்கு காரண மாக இருக்கலாம்.

இளமையிலேயே கணவரை இழந்த நீங்கள் ஒரே மகளை போராடி வளர்த்திருக்கிறீர்கள். நல்ல முறையில் திருமணம் செய்து வைத்திருக்கிறீர்கள். இது எவ்வளவு பெரிய சாதனை!

கடந்த காலத்தை நினைத்து வருந்தாதீர்கள். எதிர்காலத்தை நினைத்து பதற்றமடையாதீர்கள். நிகழ்காலத்தில் கவனம் செலுத்துங்கள்.

நிகழ்காலத்தில் இருக்கும் நேர்மறையான விஷயங்களைப் பாருங்கள். உங்கள் மகள் மற்றும் பேரக்குழந்தையுடன் உங்கள் வாழ்நாள் முழுவதையும் மகிழ்ச்சியுடன் செலவிடுங்கள். நீங்கள் இந்த உலகத்தை விட்டு வெளியேறிய பிறகும், அவர்கள் கொண்டாட விரும்பும் நபராக இருங்கள்.

2. காதல் திருமணம் செய்த எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். கணவர் என் மீதும் குழந்தைகள் மீதும் மிகவும் அன்பு வைத்திருக்கிறார். ஆனால் வாரத்தில் 4 நாட்கள் நண்பர்களோடு சேர்ந்து குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார். அந்த நேரத்தில் என்னோடும், தனது பெற்றோரோடும் சண்டை போடுகிறார். மற்ற நேரங்களில் அன்பாக நடந்துகொள்ளும் அவர் குடியின் காரணமாக இவ்வாறு நடந்துகொள்வது எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது. இதை அவரிடம் நேரடியாக தெரிவித்தேன். மருத்துவரிடம் சென்று குடியை நிறுத்தலாம் என்று கூப்பிடாலும் வர மறுக்கிறார். என் கணவரின் குடிப்பழக்கத்தை

மாற்றுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

மதுவுக்கு அடிமையாவது என்பது பழக்கம் அல்ல, அது ஒரு நோய். எனவே ஒருவர் குணமாக சிகிச்சை பெற வேண்டும். ஆனால், உங்கள் கணவர் சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை என்கிறீர்கள். அவர் குடிக்காமல் இருக்கும் நேரங்களில் உங்களுடனும், குழந்தைகளுடனும் அன்பாக இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இதை கவனத்தில் கொள்ளும்போது, அவரும் குடிப்பதை நிறுத்துவதற்கு வழிகளைத் தேடிக்கொண்டிருக்கலாம்.

அவர் குடிபோதையில் இல்லாத தருணங்களில் குடும்பத்தில் உள்ள பெரியோர்கள் முன்னிலையில் இது குறித்து ஆரோக்கியமான உரையாடலை மேற்கொள்ளுங்கள்.

திருமணத்துக்கு முந்தைய மகிழ்ச்சியான காதல் வாழ்க்கையை தொடர்ந்து அவரோடு வாழ விரும்புவதை அவருக்கு தெரியப்படுத்துங்கள். நிபந்தனையற்ற அன்பை அவருக்கு கொடுங்கள். அன்பின் மொழியை நிச்சயம் புரிந்துகொள்வார். பின்பு போதையின் பிடியில் சிக்கியவர்களை மீட்கும் ஆலோசனை குழுக்களிடம் அவரை கூட்டிச் செல்லுங்கள். அவர்கள் எளிதாக அவரை குடி நோயில் இருந்து மீட்டு வருவார்கள்.

வாசகிகள் உங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

டாக்டர் சங்கீதா மகேஷ்,

உளவியல் நிபுணர்.

மேலும் செய்திகள்