< Back
மற்றவை
இப்படிக்கு தேவதை
மற்றவை

இப்படிக்கு தேவதை

தினத்தந்தி
|
6 Aug 2023 1:30 AM GMT

நெருக்கமான உறவுகளில் உங்கள் எல்லைகள் தெளிவாக இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். உங்கள் தந்தையும், கணவரும் எங்கே தவறு செய்தார்கள் என்பதைப் பார்க்க நடுநிலையாக இருந்து ஆராயுங்கள். உங்கள் தந்தையும் தவறு செய்தார் என்று நீங்கள் உணர்ந்தால், அதை அவருக்குத் தெரியப்படுத்துங்கள்.

1. நான் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே எங்கள் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒரு வாலிபரை காதலித்து வருகிறேன். அவர் பள்ளிப் படிப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார். இதுவரை அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. சமீபகாலமாக அடிக்கடி மது அருந்துகிறார். நான் கண்டிக்கும் போதெல்லாம் 'இனி மது குடிக்கமாட்டேன்' என்று சொல்கிறார். ஆனால், சில நாட்களிலேயே மீண்டும் மது அருந்த ஆரம்பித்து விடுகிறார். என் காதலரை எவ்வாறு திருத்துவது?

அன்பு நிறைந்த, ஆரோக்கியமான திருமண வாழ்வுக்கு கல்வி ஒரு அளவுகோல் கிடையாது. இருந்தாலும், உங்கள் உறவில் கவனிக்க வேண்டிய சில எதிர்மறையான விஷயங்களும் இருக்கின்றன. அவர் வேலைக்கு செல்லவில்லை, மது அருந்துகிறார். இந்த சூழ்நிலையில் நீங்கள் அவருக்கு பொருளாதார ரீதியில் ஆதரவு அளிக்கும் நிர்பந்தம் ஏற்படும். காலப்போக்கில் இதுவே அவருக்கு வசதியாகி, வேலைக்கு செல்லும் எண்ணமே வராமல் போகலாம். தாழ்வு மனப்பான்மை அதிகரித்து, உங்களை அவர் தவறாக நடத்த நேரிடலாம். அவர் மாறுவதற்கு 6 மாத கால அவகாசம் கொடுங்கள். அந்த காலகட்டத்தில் உங்கள் காதலர், தனக்கென ஒரு வேலையை தேடிக் கொண்டு குடிப்பழக்கத்தை கைவிட்டால், அவர் உங்கள் உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று அர்த்தமாகும். இல்லையெனில், உங்களுக்கு முன்னுரிமை அளிக்காத உறவில் இருப்பது மதிப்புக்குரியது அல்ல. அதில் இருந்து விலகி விடுவதே நல்லது.

2. எனக்கு திருமணம் நடந்து 1 வருடம் ஆகிறது. பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு வந்திருக்கிறேன். சில வாரங்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்தது. திருமணம் நடந்த சில மாதங்களிலேயே கணவரின் உறவினர்களால், எனது பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் எனது கணவரும், எனது தந்தையும் பேசிக்கொள்வது இல்லை. என்னுடைய கணவர், எனது தாய் வீட்டுக்கு வருவது இல்லை. குழந்தையை பார்ப்பதற்குக்கூட அவரோ, அவரது குடும்பத்தினரோ வரவில்லை. என்னால் தந்தையையும் விட்டுக்கொடுக்க முடியாது. கணவரையும் இழக்க முடியாது. இருவரில் யார் பக்கம் நான் நிற்க வேண்டும் என்று தெரியவில்லை. எனக்கு வழிகாட்டுங்கள்.

நெருக்கமான உறவுகளில் உங்கள் எல்லைகள் தெளிவாக இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். உங்கள் தந்தையும், கணவரும் எங்கே தவறு செய்தார்கள் என்பதைப் பார்க்க நடுநிலையாக இருந்து ஆராயுங்கள். உங்கள் தந்தையும் தவறு செய்தார் என்று நீங்கள் உணர்ந்தால், அதை அவருக்குத் தெரியப்படுத்துங்கள். அவரது சார்பாக உங்கள் கணவரிடம் மன்னிப்பு கேளுங்கள். இப்போது நீங்கள் வாழ்க்கையின் முக்கியமான கட்டத்திற்குள் நுழைந்து இருக்கிறீர்கள். இந்த நேரத்தில் கணவரைப் பிரிந்து இருந்தால், பின்னாளில் அவரின் ஆதரவுக்காக ஏங்குவீர்கள். நீங்கள் இருவரும் ஒன்று என்பதை உணருங்கள். பெற்றோர் உட்பட யாராக இருந்தாலும், அவர்களுக்கு முன்பாக நீங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஆரோக்கியமான பெற்றோராக இருக்க முடியும்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

மேலும் செய்திகள்