< Back
மற்றவை
இப்படிக்கு தேவதை
மற்றவை

இப்படிக்கு தேவதை

தினத்தந்தி
|
30 July 2023 7:00 AM IST

உங்கள் குடும்பத்தினரிடம் உங்கள் திருமணத்தைப் பற்றிய உண்மைகளை சொல்லுங்கள். அதன் விளைவுகளை எதிர்கொள்வது உங்களுக்கு கடினமான போராட்டமாக இருக்கலாம். ஆனால், இந்த முடிவு உங்களுக்கும், உங்கள் துணைவருக்கும், ஒருவர் மற்றவருக்கு ஆதரவாக இருப்பதற்கு உதவக்கூடும்.

1. ன்னுடன் பணிபுரிபவரை 5 ஆண்டுகளாக காதலித்து வருகிறேன். நாங்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவரது வீட்டில் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். பாதுகாப்பு கருதி இருவரும் சில மாதங்களுக்கு முன்பு பதிவுத் திருமணம் செய்துகொண்டோம். அது அவரது வீட்டில் தெரிந்து பலத்த எதிர்ப்பு எழுந்ததால், வீட்டை விட்டு வெளியேறி தனியாக அறை எடுத்து தங்கியுள்ளார். நான் எங்கள் வீட்டில் இதுவரை என்னுடைய காதலைப் பற்றி சொல்லவில்லை. எதுவும் அறியாத அவர்கள் எனக்கு வரன் பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் எனது காதல் கணவர் என்னை அவருடன் வந்துவிடுமாறு அழைக்கிறார். நான் இரு வீட்டாரின் சம்மதத்துடன் எங்கள் வாழ்க்கையை தொடங்கவே விரும்புகிறேன். இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்?

இரண்டு குடும்பத்தினரின் சம்மதத்தோடு உங்கள் வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவது நல்லது. அதே சமயம், நிலைமை கட்டுப்பாட்டை மீறியதாகத் தெரிகிறது. இப்போது உங்கள் கணவர் தனது குடும்பத்தினரை பிரிந்து தனியாக இருக்கிறார். ஆனால், உங்கள் உறவைப் பற்றி நீங்கள் இன்னும் உங்களுடைய குடும்பத்தினருடன் பேசவில்லை என்று கூறி இருக்கிறீர்கள். இது உங்கள் உறவில் நீங்கள் ஒருதலைபட்சமாக இருப்பதைக் காட்டுகிறது. பதிவுத் திருமணம் செய்த பின்பு கூட, உங்கள் உறவைப் பற்றி வெளிப்படையாக தெரிவிக்காதது ஏன்? நீங்கள் விஷயங்களை சிக்கலாக்குவதாக தெரிகிறது. இத்தகைய போக்கை பின்பற்றினால், உங்களால் உங்களுடைய திருமண வாழ்வை வெற்றிகரமானதாக மாற்ற முடியாது. உங்கள் குடும்பத்தினரிடம் உங்கள் திருமணத்தைப் பற்றிய உண்மைகளை சொல்லுங்கள். அதன் விளைவுகளை எதிர்கொள்வது உங்களுக்கு கடினமான போராட்டமாக இருக்கலாம். ஆனால், இந்த முடிவு உங்களுக்கும், உங்கள் துணைவருக்கும், ஒருவர் மற்றவருக்கு ஆதரவாக இருப்பதற்கு உதவக்கூடும்.

2. எனக்கு 45 வயது ஆகிறது. குழந்தை இல்லாத காரணத்தால் நானும், எனது கணவரும் இரண்டு கிளிகளை எங்களுடைய குழந்தைகள் போலவே பாதுகாத்து வந்தோம். இந்த நிலையில், கிளிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது. அதனால் கிளிகளை ஒப்படைத்து விட்டோம். அன்று முதல் நாங்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி இருக்கிறோம். குழந்தைகளை பறிகொடுத்த சோகம் போல அது எங்களை வாட்டுகிறது. இந்த துயரத்தை எவ்வாறு கடந்து வருவது?

நீங்கள் உங்கள் கிளிகளை அன்போடும், பாசத்தோடும் வளர்த்திருக்கலாம். ஆனால் சட்டத்திற்கு மாறாக எந்தவொரு பறவை அல்லது விலங்கையும் வளர்ப்பது நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்படாது. கிளிகளை வனத்துறையிடம் ஒப்படைத்ததால், நீங்கள் மிகவும் மனச்சோர்வு அடைந்துள்ளீர்கள். சட்டம் அனுமதிக்கும் ஒரு புதிய செல்லப் பிராணியின் மீது உங்கள் அன்பையும், பாசத்தையும் செலுத்துங்கள். நீங்கள் அன்பாக வளர்த்த பறவைகளை இழந்து தவிக்கிறீர்கள். இந்த இழப்பு உங்களுக்கு அதிக வேதனையை தரக்கூடும். இருந்தாலும் அதில் இருந்து உடனே வெளிவர முயற்சி செய்யாதீர்கள். அந்த வலியை அனுபவிக்காமல், சகித்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். அப்போது அதில் இருந்து விரைவாக மீண்டு வருவீர்கள்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

மேலும் செய்திகள்