< Back
மற்றவை
இப்படிக்கு தேவதை
மற்றவை

இப்படிக்கு தேவதை

தினத்தந்தி
|
9 July 2023 7:00 AM IST

கணவன்-மனைவி இருவருக்கும் பொருந்தும் வகையான காரணம் இருந்தால் மட்டுமே, கருத்தரித்தலை தள்ளிப்போடுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது.

1. எனக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. நான் புகுந்த வீட்டிற்கு ஒரே மருமகள். என்னுடைய அக்காவுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. அவருக்கு முன்னால் நான் குழந்தைப் பெற்றுக் கொண்டால், எனது அக்கா மற்றவர்களின் ஏச்சுப் பேச்சுகளை சந்திக்க நேரிடுமே என்று கவலைப்படுகிறேன். என்னுடைய உணர்வுகளை புரிந்துகொண்ட கணவர் எனக்கு ஆதரவாக இருக்கிறார். எனினும் சுற்றியுள்ளவர்களின் கேள்விகள் என்னை மன அழுத்தத்துக்கு உள்ளாக்குகிறது. இதை நான் எப்படி சமாளிப்பது?

கருத்தரித்தல், பிரசவம் போன்ற உங்களின் தனிப்பட்ட விஷயங்களுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் இடையே தெளிவான எல்லைகளை வகுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் கணவர் உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு ஆதரிக்கிறார் என்ற வகையில் நீங்கள் அதிர்ஷ்டசாலி. ஆனால், அவருடைய ஆதரவை நீங்கள் எதற்கு பெற வேண்டும் என்பதில் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். உங்கள் சகோதரிக்கு குழந்தை பிறந்த பிறகு நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்கும்போது, ஒருவேளை துரதிருஷ்டவசமாக உங்களால் கருத்தரிக்க முடியாமல் போனால் என்ன செய்வீர்கள்? கணவன்-மனைவி இருவருக்கும் பொருந்தும் வகையான காரணம் இருந்தால் மட்டுமே, கருத்தரித்தலை தள்ளிப்போடுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது. உங்களுக்கு ஒரு குழந்தை இருந்தால், உங்கள் தாய்மையைப் பார்த்து உங்கள் சகோதரி தாய்மை நிலையை அனுபவித்தால், அது அவரை மேலும் ஆசுவாசப்படுத்தும். கருத்தரிப்பைத் தூண்டும் நேர்மறையான பாதையில் அவரை அழைத்துச் செல்லும். உங்கள் கர்ப்பத்தை தள்ளிப்போடுவதன் மூலம் உங்கள் சகோதரியை குற்ற உணர்வுக்கு உள்ளாக்காதீர்கள்.

2. எனக்கு திருமண வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அவள் குழந்தையாக இருக்கும்போதே எனது கணவர் இறந்துவிட்டார். தாய்-மகள் என்பதை தாண்டி நானும், அவளும் தோழிகள் போன்று பழகி வருகிறோம். என் மகளுடன் படித்த தோழிகள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அவர்கள் என் மகளிடம், தங்களுடைய திருமண வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவங்களையும், தங்கள் கணவர் குடும்பத்தினரையும் பற்றி எதிர்மறையான விஷயங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்கள். அதைக் கேட்ட எனது மகள், எத்தனை நல்ல வரன் பார்த்தாலும் 'தனக்கு திருமணமே வேண்டாம்' என்று மறுத்து வருகிறாள். அவள் மனதை எப்படி மாற்றுவது?

அவளுடைய தோழிகள் அவளிடம் பகிர்ந்து கொள்ளும் விஷயங்கள், முழுமையான யதார்த்தத்தை உள்ளடக்கியவை அல்ல என்பதை அவளுக்கு தெரியப்படுத்துங்கள். கணவன்-மனைவி இணைந்த திருமண வாழ்க்கை நல்ல அம்சங்களையும், நேசத்துக்குரிய தருணங்களையும் கொண்டது. அதை அவளிடம் யாரும் பகிர்ந்து கொள்ளாததால், அவற்றை அவளால் எண்ணி பார்க்க முடியவில்லை. மேலும் சிறுவயதில் இருந்தே அவள் உங்களை தனிமையிலேயே பார்த்திருக்கிறாள். தன்னுடைய பெற்றோரின் மகிழ்ச்சியான திருமண வாழ்வை அவள் கண்டது இல்லை. அதனால் கணவன்-மனைவி உறவு எவ்வாறு இருக்கும் என்பதை அவள் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். திருமணமான பிறகு அவள் உங்களை தனியாக விட்டுவிட விரும்பாததும் இதற்குக் காரணமாக இருக்கலாம். அவளிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவளுக்கு நல்ல துணையாக இருக்கும் ஒருவரைக் கண்டுபிடிக்க உதவுங்கள். உங்களையும் உள்ளடக்கிய ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தை உருவாக்க அவளுக்கு உங்கள் ஆதரவை அளியுங்கள்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக்கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

மேலும் செய்திகள்