< Back
மற்றவை
வீணாகும் முட்டை ஓடுகளிலும் வருமானம் பெறலாம்
மற்றவை

வீணாகும் முட்டை ஓடுகளிலும் வருமானம் பெறலாம்

தினத்தந்தி
|
10 July 2022 7:00 AM IST

ஒரு தொழில் தொடங்கும் முன்பு, அதனால் என்ன பயன், எங்கு பயன்படும், அதற்கான செலவு, அதில் இருந்து எவ்வளவு வருமானம் வரும்? என்பது போன்ற தகவல்களை முன்கூட்டியே மதிப்பிட வேண்டும். முட்டை ஓட்டைப் பொறுத்தவரை மருத்துவம், உரம் மற்றும் ஆய்வுகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

ற்போதைய காலகட்டத்தில் சுயதொழில் செய்வது கட்டாயமான ஒன்றாக மாறி வருகிறது. அதில் ஏற்கனவே இருக்கும் அல்லது பயன்படுத்தப்பட்டு வரும் தொழில் முறைகளைக் காட்டிலும், புதிய முயற்சிகளுக்கும், யோசனைகளுக்கும், அதிக வரவேற்பும், வருமானமும் கிடைக்கிறது. அதிலும் வீணாகும் பொருட்களை கொண்டு புதிதாக செய்யப்படும் பொருட்களை வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில் 'தேவையற்றது' என நாம் தூக்கிப்போடும் பொருளான முட்டை ஓட்டை வைத்து வருமானம் ஈட்டும் வழியை இங்கு பார்க்கலாம்.

ஒரு தொழில் தொடங்கும் முன்பு, அதனால் என்ன பயன், எங்கு பயன்படும், அதற்கான செலவு, அதில் இருந்து எவ்வளவு வருமானம் வரும்? என்பது போன்ற தகவல்களை முன்கூட்டியே மதிப்பிட வேண்டும்.

முட்டை ஓட்டைப் பொறுத்தவரை மருத்துவம், உரம் மற்றும் ஆய்வுகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. காரணம் இதில் அதிக அளவு கால்சியம் இருக்கிறது. முட்டை ஓடு கொண்டு கால்சியம் மாத்திரைகள், சருமத்துக்கான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் விவசாயத்துக்கான உரம் தயாரிக்கப்படுகிறது. முட்டை ஓட்டில் உள்ள கால்சியம், எலும்பின் அடர்த்தியை அதிகரிப்பதுடன், உடலில் கால்சியம் பற்றாக்குறையை போக்கவும் உதவுகிறது. இதுபோன்ற மூலப் பொருட்களின் அறிவியல் தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இந்த தகவல்கள் உங்களின் வியாபாரத்தைப் பெருக்க உதவியாக இருக்கும். முட்டை ஓட்டின் தேவை என்பது அழகு, ஆரோக்கியம் மற்றும் வாழ்வியலில் இணைந்து இருப்பதால், இதன் விற்பனை எப்போதும் இருக்கும் என்ற வியாபார நுணுக்கத்தை கவனத்தில் கொள்ளவும்.

முட்டை ஓடு தொழிலைப் பொறுத்தவரை முதலீடு என்பது குறைந்த பணம், அதிக நேரம் மற்றும் பொறுமைதான். வீணாகும் முட்டை ஓட்டை தண்ணீரில் நன்றாகக் கழுவி, அகலமான மற்றும் அடி கனமான பாத்திரத்தில் முட்டை ஓடு மூழ்கும் வரையிலான அளவு தண்ணீரில் போட்டு, பத்து நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். நன்றாகக் கொதிக்கும்போது நீரின் மேற்பரப்பில் ஒரு படலம் போன்று வரும். அதை நீக்கி விட வேண்டும். இப்போது வேகவைத்த முட்டை ஓட்டை வெயிலில் அல்லது சூரிய ஒளி படும் காற்றோட்டம் அதிகம் இருக்கும் இடத்தில் உலர வைக்கலாம்.

உஷ்ணமான சூழல் மற்றும் பருவ நிலை இருக்கும் இடங்களில் ஒன்றரை நாட்கள் வரையும், காற்றில் ஈரப்பதம் அதிகம் உள்ள மற்றும் குளிர்ந்த பருவ நிலை உள்ள இடங்களில் 2 நாட்கள் வரையும் உலர வைக்கலாம். ஓவன் வைத்திருப்பவர்கள் 225 பாரன் ஹீட்டில் 20 நிமிடங்கள் வரை வைத்து உலர்த்தலாம். பின் இந்த முட்டை ஓடுகளைப் பொடியாக்கி காற்றுப்புகாத பை அல்லது டப்பாக்களில் சேகரித்து வைக்கலாம்.

முட்டை ஓட்டின் பொடியை இணையம் அல்லது உங்களுக்குத் தெரிந்த உரம், அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிலையங்களில் மொத்த விலைக்கு விற்பனை செய்யலாம்.

மேலும் செய்திகள்