வீடு கட்டும்போது இல்லத்தரசிகள் கவனிக்க வேண்டியவை
|பூமி பூஜை போடுவது முதல் வீடு கட்டி முடித்து கிரகப்பிரவேசம் செய்வது வரை, அடிக்கடி நேரில் சென்று, வீடு படிப்படியாக கட்டப்படும் விதத்தை தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
'சொந்த வீடு கட்ட வேண்டும்' என்பது இல்லத்தரசிகள் பலரின் கனவாக இருக்கும். அவ்வாறு உங்களுக்கான இல்லத்தை கட்டுவதற்கு முன்பு, பல்வேறு விஷயங்களை ஆலோசித்து முடிவு செய்வது அவசியமானது.
குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, வீட்டில் எத்தனை அறைகள் இருக்க வேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் பெறும்போது, அந்தத் தொகையை வட்டியோடு சரியான நேரத்தில் திரும்பச் செலுத்துவது குறித்து யோசிப்பது முக்கியம். இதை அனைத்து குடும்ப உறுப் பினர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். உங்கள் சக்திக்கு மீறிய தொகையை கடனாக வாங்கக்கூடாது.
அனுபவம் உள்ள பொறியாளர் மற்றும் ஆர்கிடெக்ட் உதவியோடு வீடு கட்டத் தொடங்க வேண்டும். பூமி பூஜை போடுவது முதல் வீடு கட்டி முடித்து கிரகப்பிரவேசம் செய்வது வரை, அடிக்கடி நேரில் சென்று, வீடு படிப்படியாக கட்டப்படும் விதத்தை தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
எல்லோரிடமும் வீடு கட்டுவது பற்றி ஆலோசனை கேட்கக் கூடாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கூறி உங்களை குழப்பிவிடக்கூடும்.
வீடு மற்றும் அறைகள் எவ்வாறு இருக்க வேண்டும், எத்தனை ஜன்னல்கள் அமைக்க வேண்டும், குறிப்பாக சமையல் அறையில் உங்களுக்கு எத்தகைய வசதிகள் இருக்க வேண்டும், சமையல் மேடை, அலமாரிகள் போன்றவை எந்த விதத்தில் அமைய வேண்டும்? என்பது போன்ற விஷயங்களை முன்னரே பொறியாளருடன் ஆலோசித்து தெளிவாக முடிவு செய்ய வேண்டும்.
எல்லாவற்றையும் முடிவு செய்த பிறகு, வீட்டை விரைவாக கட்டி முடிக்க வேண்டும். கட்டுமானப் பொருட்களின் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டு இருப்பதால், தாமதமாகும் நேரம் பட்ஜெட்டை அதிகப்படுத்தக்கூடும். அதற்காக தனியாக பணத்தை ஏற்பாடு செய்யவேண்டிய நிலை ஏற்படலாம்.
வாஸ்து மற்றும் இதர நிபுணர்களின் ஆலோசனைகளையும் முன்னரே பெற்றுவிட வேண்டும். வீட்டை கட்டியபின்பு அதில் மாற்றங்கள் செய்வது தேவையற்ற செலவுகளை அதிகப்படுத்தும்.
சமையல் அறைக்கு அடுத்தபடியாக, இல்லத்தரசிகள் மிகவும் விரும்புவது பூஜை அறை. எனவே இதற்கு உரிய சரியான இடத்தை முடிவு செய்வது முக்கியம்.
அனைத்துக்கும் மேலாக அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வீட்டைக் கட்டுவது சிறந்தது. வாகன நிறுத்தத்துக்கும் வீட்டுக்குள்ளேயே இடம் அமைப்பது அவசியம்.
எதிர்கால தேவை குறித்து திட்டமிட்டு வீட்டின் தரைத்தளத்தை முதலில் கட்டுங்கள். சில காலத்துக்குப் பிறகு ஒவ்வொரு அடுக்காக எழுப்புங்கள். இதற்கு இடைப்பட்டக் காலத்தில் வீட்டைக் கட்டுவதற்காக வாங்கிய கடன்களை அடைப்பதில் கவனம் செலுத்தலாம்.