இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு பயப்படுகிறீர்களா?
|‘மோட்டார்போபியா’ பிரச்சினை உள்ளவர்கள் வாகனத்தை ஓட்டுவதற்கு முன்னும், ஓட்டிய பின்னும் சுவாசப் பயிற்சி மேற்கொள்வது, மனம் மற்றும் உடல் தளர்வு நுட்பங்களை மேற்கொள்வது, வாகனங்கள் தொடர்பான திரைப்படங்கள் அல்லது வீடியோக்களை பார்த்து ஒவ்வொரு சூழலையும் கணிக்க முயற்சி செய்வது போன்ற பயிற்சிகளை செய்யலாம்.
ஷாப்பிங் செல்வது, குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது, கல்லூரி மற்றும் அலுவலகத்துக்கு செல்வது என பெண்களின் அன்றாட போக்குவரத்துக்கு அதிகமாக உதவுபவை இருசக்கர வாகனங்கள். அதில் ஏறி உட்கார்ந்ததும் சிட்டாக பறக்கும் பெண்களும் இருக்கிறார்கள். அதேநேரம், பல பெண்கள் சற்று பயந்த நிலையிலேயே இருசக்கர வாகனம் ஓட்டுவதையும் பார்க்க முடிகிறது. பல ஆண்டுகளாக வாகனம் ஓட்டிவந்தாலும் இந்த பய உணர்வு அவர்களுக்கு தொடர்கதையாகவே இருக்கும். உளவியல் ரீதியான இந்த பிரச்சினைக்கு 'மோட்டார்போபியா' என்று பெயர். தொடர் முயற்சிகள் மூலம் இதை குணப்படுத்த முடியும்.
தற்போதைய காலத்தில், இருசக்கர வாகனங்களை ஓட்டும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருந்தபோதும், பல பெண்கள் ஒருவித பயத்துடனும், பதற்றத்துடனுமே வாகனத்தை ஓட்டுகிறார்கள். 'மோட்டார்போபியா' உள்ளவர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான பாதையையே போக்குவரத்துக்காக பயன்படுத்துகிறார்கள்.
தனக்கு அல்லது தான் அதிகமாக நேசித்தவருக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட விபத்து அல்லது காயம், இறப்பு போன்றவற்றால் ஏற்பட்ட மனஉளைச்சல், பரம்பரையாக உண்டாகும் மரபணு மாற்றம், வாகனம் ஓட்டுவது பற்றிய எதிர்மறையான தகவல்களை அதிகமாக கேட்டறிந்தது போன்ற பல்வேறு காரணங்களால் 'மோட்டார்போபியா' ஏற்படலாம்.
இந்த பிரச்சினை உள்ளவர்களுக்கு வாகனம் ஓட்டும்போதும், மற்றவருடன் வாகனத்தில் சவாரி செய்யும்போதும், பதற்றம் மற்றும் பய உணர்வு அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில் அதிகப்படியாக வியர்த்து உடல் குளிர்ந்துபோவது, தலைச்சுற்றல், மயக்கம், இதயத்துடிப்பு அதிகரிப்பது, குமட்டல், மூச்சுத் திணறல், நடுக்கம், வயிற்று வலி மற்றும் செரிமானக்கோளாறு போன்ற அறிகுறிகள் உண்டாகும்.
'மோட்டார்போபியா' பிரச்சினை உள்ளவர்கள் வாகனத்தை ஓட்டுவதற்கு முன்னும், ஓட்டிய பின்னும் சுவாசப் பயிற்சி மேற்கொள்வது, மனம் மற்றும் உடல் தளர்வு நுட்பங்களை மேற்கொள்வது, வாகனங்கள் தொடர்பான திரைப்படங்கள் அல்லது வீடியோக்களை பார்த்து ஒவ்வொரு சூழலையும் கணிக்க முயற்சி செய்வது போன்ற பயிற்சிகளை செய்யலாம்.
முதலில் ஒரு வாகனத்தில் பயணம் செய்து பழகிய பின்னர், அந்த வாகனத்தை ஓட்ட முயற்சிக்கலாம். தொடக்கத்தில் அருகில் உள்ள இடங்களுக்கு மட்டும் பயணித்து பயத்தை போக்கிக்கொண்ட பின்பு, நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளலாம்.
'மோட்டார்போபியா' பிரச்சினையால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் அறிவாற்றல் நடத்தை சிகிச்சை, விர்ச்சுவல் ரியாலிட்டி எக்ஸ்போஷர் தெரபி மற்றும் பதற்றத்துக்கான எதிர்ப்பு மருந்துகளை உளவியல் நிபுணரின் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்ளலாம்.