டிரெண்டிங்கில் உள்ள கொண்டை வகைகள்
|டாப் பன் கொண்டை அலங்காரம் பார்ட்டிகள், திருமண வரவேற்புகள் மற்றும் மேற்கத்திய பின்னணி கொண்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது அலங்கரித்துக்கொள்ள சரியான தேர்வாகும். நீளமான முடி கொண்ட பெண்களுக்கு இந்த வகை கொண்டை அழகுக்கு அழகு சேர்க்கும்.
ஆடை அணிகலன்களோடு பெண்களின் அழகிற்கு அழகு சேர்ப்பதில் சிகை அலங்காரமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. எத்தனையோ வகையான சிகை அலங்காரங்கள் இருந்தபோதும், சில தலைமுறைகளுக்கு முன்னால் பிரபலமாக இருந்த கொண்டை அலங்காரங்களுக்கு இன்றும் மவுசு அதிகம். அவற்றோடு சேர்ந்து இன்றைய டிரெண்டிங்கில் உள்ள கொண்டை வகைகளில் சில...
நவீன இந்திய கொண்டை:
குட்டையான மற்றும் அடர்த்தியான முடி உள்ள பெண்களுக்கு இந்த வகையான கொண்டை பொருத்தமாக இருக்கும். பண்டிகைகள் மற்றும் பொதுவான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது அலங்கரித்துக்கொள்ள இது சரியான தேர்வாகும். கவுன்கள் மற்றும் முழங்கால் வரையிலான ஆடைகள் அணியும்போது இந்த வகையான சிகை அலங்காரம் கூடுதல் அழகு சேர்க்கும். ஓவல், வட்டம் மற்றும் வைர வடிவ முகத்தோற்றம் கொண்ட பெண்கள் நவீன இந்திய கொண்டை அலங்காரத்தை தேர்வு செய்யலாம்.
பன் கொண்டை:
எல்லா வயது பெண்களுக்கும் பொருந்தக்கூடிய எளிமையான கொண்டை வகை இது. பார்ட்டிகளுக்கும், பயணங்களுக்கும், அலுவலக நிகழ்ச்சிகளுக்கும் இந்த வகை கொண்டை அலங்காரம் ஏற்றதாக இருக்கும். திருமண நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது பன் கொண்டையில் பூக்கள் மற்றும் அணிகலன்கள் கொண்டு அலங்கரித்தால் பார்ப்பவர்களின் கண்களைக் கவரும்.
டாப் பன் கொண்டை:
டாப் பன் கொண்டை அலங்காரம் பார்ட்டிகள், திருமண வரவேற்புகள் மற்றும் மேற்கத்திய பின்னணி கொண்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது அலங்கரித்துக்கொள்ள சரியான தேர்வாகும். நீளமான முடி கொண்ட பெண்களுக்கு இந்த வகை கொண்டை அழகுக்கு அழகு சேர்க்கும்.
அரை பன் கொண்டை:
ஆப் பன் கொண்டை எனப்படும் இந்த கொண்டை அலங்காரம், இன்றைய இளம் பெண்களிடம் பிரபலமாக உள்ளது. விருந்துகளில் கலந்துகொள்பவர்களுக்கும், பயணம் செய்பவர்களுக்கும் இது சிறந்த தேர்வாகும். குட்டையான அல்லது நடுத்தரமான நீளம் கொண்ட கூந்தல் உள்ள பெண்களுக்கு இந்த வகை கொண்டை மிகவும் பொருத்தமாக இருக்கும்.
சைடு பன் கொண்டை:
பக்கவாட்டு கொண்டை எனப்படும் இந்த கொண்டை அலங்காரம் நேர்த்தியான மற்றும் அழகான தோற்றம் அளிக்கும். இந்த வகை சிகை அலங்காரம் விருந்துகள், திருமணங்கள், குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது அலங்கரித்துக்கொள்ள ஏற்றது.
லோ பன் கொண்டை:
கனமான அலங்காரப் பொருட்கள் இல்லாமல் எளிமையாக செய்யப்படும் இந்த வகை கொண்டை அலங்காரம், திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் அல்லது சாதாரண, பண்டிகை நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு ஏற்றது.
மெஸ்ஸி டாப் பன் கொண்டை:
நேரமில்லாமல் அவசரமாக கிளம்பக்கூடிய நிகழ்வுகளுக்கு ஏற்ற கொண்டை அலங்காரம் இது. சில நொடிகளில் செய்யக்கூடிய இந்த வகை சிகை அலங்காரம், எளிமையாக இருந்தாலும் உங்களுக்கு வசீகரமான தோற்றத்தை கொடுக்கக்கூடியது.