பாதுகாப்பான துணி பொம்மைகள் தயாரிப்பு
|கொஞ்சம் கற்பனைத்திறனும், பொறுமையும் இருந்தால் போதும். அழகான துணி பொம்மைகளை விதவிதமாக தைத்து வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம்.
குழந்தைகள் விளையாடுவதற்கு பாதுகாப்பானவை துணியால் ஆன பொம்மைகள். இவற்றால் குழந்தைகளுக்கு காயம் ஏற்படாது. அழுக்கானாலும் துணி பொம்மைகளை எளிதாக துவைத்து விடலாம். தடிமனான பருத்தித் துணிகள் கொண்டு நாமே இவ்வகை பொம்மைகளைத் தயாரிக்க முடியும். வீட்டில் தையல் இயந்திரம் இல்லாதவர்களுக்கு, கைத்தையல் தெரிந்தால் போதும்.
உங்கள் பகுதியில் இருக்கும் தையல் கடையில் வீணாகத் தூக்கி எறியப்படும் கழிவுத்துணிகளை இதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம். குழந்தைகளின் கண்ணைக் கவரும் நிறங்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். கொஞ்சம் கற்பனைத்திறனும், பொறுமையும் இருந்தால் போதும். அழகான துணி பொம்மைகளை விதவிதமாக தைத்து வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம்.
நீங்கள் தைக்க விரும்பும் பொம்மையின் 'கட்டிங் பேட்டர்ன்' முக்கியமானது. இணையத்தில் இலவசமாக நிறைய பேட்டர்ன்கள் கிடைக்கின்றன. இங்கு நாம் கடல் குதிரை பொம்மையை தயாரிப்பது பற்றி பார்க்கலாம்.
இதே கட்டிங்கை வைத்து பெல்ட் (Felt) அல்லது பர் (Fur) வகை பொம்மைகளையும் தயாரிக்க முடியும்.
தேவையான பொருட்கள்:
ரோஸ் நிற துணி - 30 X 20 செ.மீ
மஞ்சள் நிற துணி - 20 X 20 செ.மீ
நூல் - ஆரஞ்சு நிறம்
ஊசி - 1
கத்தரிக்கோல் - 1
பொம்மைகளுக்கு ஸ்டப் செய்யும் பஞ்சு - தேவைக்கேற்ப
சார்ட் அட்டை - 1
செய்முறை:
அட்டையில் தேவையான வடிவங்களை படத்தில் உள்ளவாறு வரைந்து வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அதனை அந்தந்த நிறத்துணி மீது வைத்து அளவு மாறாமல் வெட்டிக் கொள்ளுங்கள்.
துடுப்புப் பகுதியின் (மஞ்சள் நிற துணி) மீது, ஆரஞ்சு நிற நூல் கொண்டு மேலே அலங்காரத்திற்காக இரண்டு வரிசையில் தையல் போடுங்கள்.
பின்னர் வயிற்றுப்பகுதியை (மஞ்சள் நிற துணி), உடல் பகுதியுடன் (ரோஸ் நிற துணி) இணைத்து தையல் போடுங்கள். மேலே அலங்காரத்திற்காக வரிசையாகத் தையலிடுங்கள்.
இப்போது வெள்ளையும், கருப்பும் சேர்ந்த கண் பகுதியை வைத்து தையுங்கள்.
இதேபோல மற்றொரு பக்கத்தையும் தயார் செய்தால் முன் பகுதியும், பின் பகுதியும் தயாராகிவிடும். இந்த இரண்டு பக்கத்தையும், தலைப் பகுதியின் மஞ்சள் நிறக் கொண்டை போன்ற பாகத்தையும் சேர்த்து தையல் போட்டு இணையுங்கள்.
படத்தில் காட்டியவாறு துடுப்புப்பகுதி வரை தையலிட்டு, ஒரு சிறிய இடைவெளி விட வேண்டும். அதன் வழியாக உள்ளே பஞ்சை சிறிது சிறிதாக அடைக்க வேண்டும். பின்னர், அந்த இடைவெளியை தையல் போட்டு மூடிவிட்டால் அழகான கடல் குதிரை பொம்மை தயார்.
சந்தைப்படுத்துதல்:
முதலில் சில பொம்மைகளை தைத்துப் பழகினால், விரைவிலேயே கச்சிதமான வடிவத்தில் தயாரிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். அதிலுள்ள நுணுக்கங்களையும் தெரிந்துகொள்வீர்கள்.
இவ்வாறு விதவிதமான பொம்மைகள் தயாரித்து நீங்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் பொம்மைக் கடைகள், சூப்பர் மார்க்கெட், குழந்தைகளுக்கான பொருட்கள் விற்கும் கடைகள், பிளே ஸ்கூல் போன்றவற்றை அணுகி விற்பனை செய்யலாம்.
உங்கள் நட்பு வட்டத்தில், பிறந்தநாள் போன்ற நிகழ்வுகள் நடைபெறும்போது நீங்கள் தயாரித்த பொம்மைகளைப் பரிசாக அளிக்கலாம். இதன் மூலம் உங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள்.