சுற்றுச்சூழலை பாதுகாக்கும் 'விதை விநாயகர்'
|ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் உருவாக்கப்படுகின்றன. களிமண்ணால் செய்யப்பட்டு வந்த சிலைகள், இப்போது பெரும்பாலும் ரசாயனக் கலவைகள் மூலம் உருவாக்கப்படுகின்றன.
'விநாயகர் சதுர்த்தியை பசுமை நினைவாகவும், அனைவருக்கும் பயனுள்ள வகையிலும் கொண்டாடலாம்' என்கிறார் கோவையைச் சேர்ந்த ஹரிணி. இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத வகையில் 'விதை விநாயகர்' என்ற பெயரில் விநாயகர் சிலைகளை தயாரித்துள்ளார். அவரது பேட்டி…
"சிறு வயதில் இருந்தே இயற்கை மீதும், அதைச் சார்ந்த பொருட்களின் மீதும் எனக்கு ஈடுபாடு உண்டு. ரசாயனங்களைத் தவிர்த்து, குளியல் பொடி, சீயக்காய் பொடி என்று வீட்டிலேயே அம்மா தயாரித்துக் கொடுக்கும் இயற்கையான பொருட்களையே பயன்படுத்தி வருகிறேன்.
தற்போது நாகரிகம் என்ற பெயரில் ரசாயனப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. அது நமது வாழ்வியல் முறைகளிலும் பிரதிபலித்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் உருவாக்கப்படுகின்றன. களிமண்ணால் செய்யப்பட்டு வந்த சிலைகள், இப்போது பெரும்பாலும் ரசாயனக் கலவைகள் மூலம் உருவாக்கப்படுகின்றன. அவை நீர்நிலைகளில் கரைக்கப்படும்போது சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
அதை மாற்றும் முயற்சிதான் 'விதை விநாயகர்'. அதன்படி விநாயகர் சிலை செய்து அதன் வயிற்றுப்பகுதியில் விதையை வைத்து விடுவோம். மூன்று நாட்கள் பூஜை முடிந்து, அதை தண்ணீரில் கரைத்ததும் விதையில் இருந்து செடி முளைக்க ஆரம்பிக்கும். வீட்டில் இடமில்லையே என்று நினைக்காமல், பூந்தொட்டியில் அந்த சிலையை வைத்து மண்ணை நிரப்பி வளர்க்கலாம்.
தனியாகத் தோட்டம் வைத்திருப்பவர்கள் மரங்களின் விதைகள் உள்ள விநாயகரை வாங்கலாம். பூஜை முடிந்தபின்பு தோட்டத்தில் நட்டுவைத்து மரம் வளர்க்கலாம். அந்த மரத்தை, செடியைப் பார்க்கும் போதெல்லாம் நாம் பூஜை செய்தது, கொழுக்கட்டை தயாரித்தது, உறவினர்களுடன் விநாயகர் சதுர்த்தி உணவுகளைப் பகிர்ந்து கொண்டது என நம் மனதில் நீங்காத நினைவுகளாக பசுமையாக இருக்கும்" என்ற ஹரிணி, டெரக்கோட்டா நகைகள், கிளாஸ் பெயிண்டிங், கொலு பொம்மைகள் போன்ற கைவேலைப்பாடு களையும் செய்து வருகிறார்.
"வீடு, படிப்பு, வேலை என இருந்த எனது வாழ்க்கையில் நான் செய்த கலைப் பொருட்கள் மன அழுத்தத்தைக் குறைக்கவும், வருமானம் ஈட்டவும் உதவியாக இருந்தது" என்றவர், தற்போது குப்பைமேனி, பொன்னாவாரம், சங்குபுஷ்பம், புன்னை, வேம்பு, கருமஞ்சள், பன்னீர் ரோஜா, ஆவாரம், முருங்கை, வெட்டிவேர், கரிசலாங்கண்ணி, புற்று மண், களிமண், வில்வம், சதுரக்கள்ளி என பல
மூலிகைப் பொருட்களைக் கொண்டு சோப்பு, ஷாம்பு, பேஸ் வாஷ், குளியல் பவுடர், கண் மை போன்ற அழகு சாதன பொருட்களைத் தயாரித்து வருகிறார். ஆர்வமுள்ள பெண்களுக்கு ஆன்லைன் மூலம் தயாரிப்பு முறைகளைக் கற்றுக் கொடுக்கிறார்.
பாரதி கண்ட புதுமைப் பெண், வெண்புறா, சிறந்த பெண் தொழிலதிபர் உள்ளிட்ட விருதுகளை பெற்றது மட்டுமில்லாமல், முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார்.