ஆடைகளின் கழுத்து டிசைனுக்கு ஏற்ற ஆபரணங்கள்
|அழகான ஆடைகளும், அவற்றுக்கு ஏற்ற அணிகலன்களும் உங்கள் தோற்றத்தை மெருகேற்றிக்காட்டும். குறிப்பாக நீங்கள் அணியும் ஆடையின் நிறத்துக்கும், அதன் கழுத்துப்பகுதி அமைப்புக்கும் ஏற்றவாறு காதணி, நெக்லஸ், செயின் ஆகியவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.
திருமணம், குடும்ப நிகழ்ச்சிகள், பண்டிகைகள் போன்ற விசேஷங்களில் கலந்துகொள்ளும்போது, ஆடைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அவற்றுக்கு பொருத்தமான ஆபரணங்களை தேர்ந்தெடுப்பதற்கும் கொடுக்க வேண்டும். அழகான ஆடைகளும், அவற்றுக்கு ஏற்ற அணிகலன்களும் உங்கள் தோற்றத்தை மெருகேற்றிக்காட்டும். குறிப்பாக நீங்கள் அணியும் ஆடையின் நிறத்துக்கும், அதன் கழுத்துப்பகுதி அமைப்புக்கும் ஏற்றவாறு காதணி, நெக்லஸ், செயின் ஆகியவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஆடைகளில் வட்ட கழுத்து, ஆங்கில எழுத்து 'V' மற்றும் 'U' வடிவ கழுத்து, சதுர கழுத்து, காலர் கழுத்து என்று பலவிதமான கழுத்து டிசைன்கள் உள்ளன. அவற்றுக்கு பொருத்தமான அணிகலன்களை தேர்ந்தெடுப்பதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.
ஹை ரவுண்டு கழுத்து:
கழுத்தை ஒட்டியதுபோல ஹை நெக் ரவிக்கை அணியும்போது, கழுத்தில் ஆபரணம் அணியாவிட்டாலும் அது அழகாகவே இருக்கும். அதனை ஈடுசெய்யும் விதமாக காதில் பெரிய அளவிலான காதணி அணிந்தால் பொருத்தமாக இருக்கும். டிசைன்கள் எதுவும் இல்லாத சாதாரண ரவிக்கை அணியும்போது, நீளமான செயின்கள் அணிவது ஏற்றதாக இருக்கும்.
அகன்ற கழுத்து:
உங்கள் கழுத்துப்பகுதி முழுவதுமாக வெளியே தெரியும்படி இருக்கும் உடை அணியும்போது, பெரிய நெக்லஸ் வகை கழுத்தணி அணிந்தால் அழகுக்கு அழகு சேர்க்கும்.
வட்டக் கழுத்து:
வட்டக் கழுத்து கொண்ட பிளவுஸ் டிசைன்களுக்கு 'சோக்கர்ஸ்' என்று அழைக்கப்படும் கழுத்தை ஒட்டிய நெக்லஸ்கள் பொருத்தமாக இருக்கும். அதற்கு மேட்சிங்காக காதுடன் ஒட்டியதுபோன்ற சிறிய அளவு காதணிகள் அணிவது அழகாக இருக்கும்.
V மற்றும் U வடிவ கழுத்து:
கழுத்தை ஒட்டியவாறு அணியும் சோக்கர் மாடல் நெக்லஸ்கள் V மற்றும் U வடிவ கழுத்து கொண்ட ஆடைகளுக்கு பொருத்தமாக இருக்கும். 'லேயர்டு ஜூவல்லரி' எனும் அடுக்கடுக்கான நகைகளும் உங்கள் தோற்றத்துக்கு அழகு சேர்க்கும்.
காலர் கழுத்து:
நீண்ட ஆரம் போன்ற கழுத்தணி, இந்த வகை கழுத்து மாடலுக்கு பொருத்தமாக இருக்கும். காலர் கழுத்து கொண்ட ஆடைகள், அதை அணிபவருக்கு நவீன தோற்றம் தரும். பார்ப்பவர்களின் கவனத்தை எளிதாக ஈர்க்கும்.
சதுர கழுத்து:
சதுர வடிவ கழுத்து டிசைன் கொண்ட ஆடைகளுக்கு, கனமான கழுத்தணிகள் அணிவது பொருத்தமாக இருக்கும்.