< Back
கைவினை கலை
கலைநயமிக்க பொம்மைகள் உருவாக்கும் லட்சுமி நம்பி
கைவினை கலை

கலைநயமிக்க பொம்மைகள் உருவாக்கும் லட்சுமி நம்பி

தினத்தந்தி
|
9 Oct 2022 7:00 AM IST

பல மணி நேரம் செலவழித்து, பொம்மைகளை நுணுக்கமாக, கலைநயத்துடன் செய்வேன். பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், அதை உருவாக்குவதற்கு பின்னால் பெரிய உழைப்பு இருக்கிறது.

டை பயில கற்றறியும் ஒரு வயது பருவத்தில், போலியோ நோயின் தாக்கத்தால் துவண்டு போனார் லட்சுமி நம்பி. இரண்டு கால்களும், இடது கையில் மூன்று விரல்களும் செயல் இழந்தது.

சிறுமியாக வளர்ந்த பின்னர், தனது குறைகளை நினைத்து தினமும் மனம் கலங்கினார். அதைப் பார்த்த அவரது அப்பா நம்பி மற்றும் அம்மா மதுரவல்லி, மகளின் மனதில் நம்பிக்கையை விதைக்கவும், அவளது வருங்காலத்துக்கு வழிகாட்டவும் முடிவு செய்தனர். தையல் பயிற்சி ஆசிரியரை தினமும் வீட்டுக்கு வரவழைத்து, லட்சுமிக்கு பயிற்சி அளித்தனர். ஆர்வத்தோடு தையற்கலை முழுவதையும் கற்று தேர்ந்தார்.

தனது 8 வயதில் உடைகள் தைக்க ஆரம்பித்தவர், இன்று 70 வயதிலும் தொடர்ந்து தைத்து வருகிறார். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான உடைகள் தைப்பது மட்டுமில்லாமல், மனதை மயக்கும் பொம்மைகள் தயார் செய்வதிலும் கைதேர்ந்தவர் லட்சுமி. இதுமட்டுமில்லாமல் குவில்லிங் காகிதத்தை கொண்டு சிலைகள் செய்வது, ஓவியம் வரைவது, கலைப் பொருட்கள் தயாரிப்பது என்று தனது நேரத்தை பயனுள்ளதாக மாற்றி இருக்கிறார்.

தான் கற்றதை மற்ற பெண்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறார். ஏழைப் பெண்களுக்கு இலவசமாகக் கற்றுக்கொடுத்து, அவர்கள் பொருளாதார ரீதியில் உயர்வதற்கு வழிகாட்டுகிறார்.

மதுரை விஸ்வநாதபுரத்தில் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வரும் லட்சுமி நம்பியை சந்தித்தோம். புன்னகையோடு வரவேற்று உபசரித்தவர் தனது கலைப் படைப்புகள் பற்றி பகிர்ந்து கொண்டவை இங்கே…

பொம்மைகள் தயாரிப்பதைப் பற்றி சொல்லுங்கள்?

பல மணி நேரம் செலவழித்து, பொம்மைகளை நுணுக்கமாக, கலைநயத்துடன் செய்வேன். பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், அதை உருவாக்குவதற்கு பின்னால் பெரிய உழைப்பு இருக்கிறது.

முதலில், ஸ்டாண்டில் கம்பி, துணி ஆகியவற்றைக்கொண்டு பொம்மையின் கால்களை செய்ய வேண்டும். பிறகு, முகம் மற்றும் கைகள் செய்ததும், பொருத்தமான உடை தயாரித்து அணிவிக்க வேண்டும். நான் தயாரிக்கும் பொம்மைகளை, பொறுமையாக மனதை ஒருமுகப்படுத்தி செய்து முடிப்பேன்.

ஒவ்வொரு பொம்மையையும், ஒவ்வொரு மாடலில் செய்வேன். அதில் என் கற்பனை மற்றும் கலைத்திறனைக் காட்டுவேன். வாடிக்கையாளர்கள் கேட்பதற்கு ஏற்ப செய்து தருகிறேன்.

பொம்மைகள் செய்து முடிப்பதற்குள் என் கைவிரல்களில் கடுமையான வலி உண்டாகும். ஆனால் நான் நினைத்தவாறு அவற்றை அழகாகச் செய்து முடித்து, எனக்கு முழுத் திருப்தி வரும்போது அந்த வலியும், வேதனையும் அகன்றுவிடும்.


நீங்கள் செய்யும் காகித வேலைப்பாடுகள் பற்றிக் கூறுங்கள்?

ஆரம்பத்தில் பல்வேறு அளவுகள் மற்றும் வண்ணங்களில் கிடைக்கும் காகிதங்களை குவில்லிங் முறையில் வடிவமைத்து தோடுகள், ஜிமிக்கிகள் செய்தேன். அதன் பிறகு என் கற்பனைத்திறனைப் பயன்படுத்தி தோடுகள், ஜிமிக்கிகளை ஒன்றிணைத்து வெங்கடாஜலபதி, தாயார், ஆண்டாள், ரங்கநாதர் சயனக்கோலம், அத்திவரதர், அஷ்டலட்சுமி ஆகிய தெய்வங்களின் சிலைகளை செய்து வருகிறேன்.

இதுமட்டுமில்லாமல், அலுமினிய கம்பி கொண்டு கிருஷ்ணர், விநாயகர், பசுவுடன் கிருஷ்ணர், கீதா உபதேசம் போன்றவைகளை செய்கிறேன். அப்ளிக் ஒர்க் மற்றும் கோல்டன் ட்ரீ எனும் கற்பகவிருட்சம் செய்கிறேன்.

அந்தந்த மாநில பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை கேட்டறிந்து அதற்கு ஏற்ப உடைகள், நகைகளுடன் பொம்மைகள் செய்கிறேன். செயற்கை நகைகள் செய்வதும் தெரியும் என்பதால், பொம்மைகளுக்கான நகைகள் தயாரிப்பது எளிதாக இருக்கிறது.

அனைத்து தரப்பு மக்களும் தங்கள் வரவேற்பு அறை ஷோகேசில் வைத்து மகிழ எனது கலைப் படைப்புகளை தேர்ந்தெடுக்கிறார்கள். சுற்றுலா வரும் வெளிநாட்டினரும் நான் செய்த பொம்மைகளில் உள்ள வேலைப்பாடுகளைப் பார்த்து வாங்குகிறார்கள்.

குடும்பத்தினரின் ஆதரவு எவ்வாறு உள்ளது?

என் உடன் பிறந்த சகோதரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் என்னை ஊக்குவித்து வருகிறார்கள். கலைப்பொருட்கள் தயாரிப்பதற்கு தேவையான அனைத்தையும் வாங்கித்தருவார்கள். அதனால் கவலை இன்றி எனது கலைப்பணியை இந்த வயதிலும் தளராமல் செய்து வருகிறேன்.

எனது கற்பனை மற்றும் கலைத்திறனை தொடர்ந்து மெருகேற்றி வருகிறேன். என் வாழ்நாள் முழுவதும் புதிது புதிதாக கலைப் படைப்புகள் செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம்.

மேலும் செய்திகள்