கார்ட்போர்டு கிப்ட் பாக்ஸ்
|கார்ட்போர்ட்டை பயன்படுத்தி அழகிய கிப்ட் பாக்ஸ் செய்வது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கார்ட்போர்டு
அளவுகோல்
கத்தரிக்கோல்
பசை
அலங்காரப் பொருட்கள்
செய்முறை:
முதலில் கார்ட்போர்டில் 8 செ.மீ. ஆர அளவில் மேல் மற்றும் அடிப்பகுதிக்கு வட்டவடிவில் குறித்துக்கொள்ளவும்.
பக்கவாட்டுப் பகுதிகளுக்கு 10 செ.மீ. நீளம், 48 செ.மீ. அகலம் கொண்ட பெரிய செவ்வக வடிவத்தையும், 2 செ.மீ. நீளம், 48.5 செ.மீ. அகலம் கொண்ட சிறிய செவ்வக வடிவிலான அளவுகளையும் குறித்துக் கொள்ளவும்.
அளவுகளுக்கு ஏற்றபடி கார்ட்போர்டை வெட்டவும். மேல் பகுதிக்கு இரண்டு, அடிப்பகுதிக்கு இரண்டு என்ற விகிதத்தில் நான்கு வட்டங்களை வெட்டிக்கொள்ளவும்.
இப்போது இரண்டு வட்ட வடிவ கார்ட்போர்டுக்கு இடையில் பசை தடவி ஒன்றாக ஒட்டவும். அதேபோல் மற்ற இரண்டு வட்ட வடிவ காட்போர்டையும் ஒட்டவும்.
பெரிய செவ்வக வடிவ பகுதிகளின் பக்கவாட்டில் பசை தடவி கார்ட்போர்டை சற்று வளைத்து ஒட்டவும். இதேபோல் சிறிய செவ்வக வடிவ பகுதியையும் ஒட்டவும்.
பின்னர் அடிப்பகுதிக்கான வட்ட வடிவ கார்ட் போர்ட்டின் பக்கவாட்டில் சுற்றிலும் பசை தடவி, பெரிய செவ்வக வடிவ கார்ட்போர்டு கொண்டு அதைச் சுற்றி ஒட்டவும்.
இதேபோல் மேல் பகுதிக்கான வட்ட வடிவ கார்ட்போர்டின் பக்கவாட்டில் சுற்றிலும் பசை தடவி சிறிய செவ்வக வடிவ கார்ட்போர்ட்டை அதைச் சுற்றி ஒட்ட வேண்டும். இப்போது மேல் மற்றும் அடிப்பகுதியை ஒன்றாக இணைத்தால் பாக்ஸ் வடிவம் கிடைக்கும்.
இறுதியில், அலங்காரப் பொருட்கள் கொண்டு உங்களின் கற்பனைத்திறனுக்கு ஏற்றபடி அலங்காரம் செய்யவும். அழகான 'கார்ட்போர்டு கிப்ட் பாக்ஸ்' தயார்.