< Back
சாதனையாளர்
அடிமைத்தனத்தை அழித்த பெண்மணி
சாதனையாளர்

அடிமைத்தனத்தை அழித்த பெண்மணி

தினத்தந்தி
|
30 May 2022 11:44 AM GMT

ஒவ்வொரு முயற்சியின்போதும் அவருடைய தன்னம்பிக்கையும், மன உறுதியும் அதிகரித்தது. இவ்வாறு 11 வருடங்களில் எழுபது பேரை விடுவித்தார். ஒவ்வொரு விடுதலைப் பயணமும் சிக்கல் நிறைந்ததாக இருந்தது. அவை எல்லாவற்றையும் தாண்டித்தான் இந்தச் சாதனையை நிகழ்த்தினார் ஹேரியட்.

ஹேரியட் டப்மன் (1822 - 1913) அமெரிக்காவில் நிலவிய அடிமைத்தளையை ஒழிக்க பாடுபட்ட ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண்மணி. அவரது தாய்வழிப் பாட்டி ஆப்பிரிக்காவில் இருந்து கப்பல் மூலம் அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்பட்ட அடிமைகளுள் ஒருவர். குழந்தைப் பருவம் முதலே அடிமையாகப் பணியாற்றிய ஹேரியட் தனது எஜமானர்களால் பல கொடுமைகளுக்கு ஆளானார்.

ஹேரியட்டின் உடன்பிறந்தவர்கள் ஒன்பது பேர். அப்போது இருந்த வழக்கப்படி எஜமானருக்குத் தனது அடிமைகளை விற்பதற்கு உரிமை உண்டு. ஹேரியட்டின் சகோதரிகள் மூன்று பேரை விற்ற பின்பு, அவரது தம்பியையும் விற்பதற்கு எஜமானர் முயன்ற போது, அவர்களின் தாய் அதை எதிர்த்துப் போராடினார். அதைப் பார்த்துத்தான் ஹேரியட்டுக்கும், 'போராடினால் வெற்றி கிடைக்கும்' என்ற எண்ணம் ஏற்பட்டது.

1844-ம் ஆண்டில் ஜான் டப்மன் என்ற ஆப்பிரிக்க-அமெரிக்கரை மணந்தார் ஹேரியட். ஆனாலும், அன்றைய சட்டத்தின்படி அடிமையாகத்தான் இருந்தார். 1849-ம் ஆண்டு அவருடைய எஜமானர் இறந்ததும், குடும்பத்தில் இருக்கும் அடிமைகளை விற்றுவிட முடிவு செய்தார் அவரது மனைவி. அந்த நேரத்தில் தன்னுடைய விடுதலையைத் தானே பெறவேண்டும் என்று முடிவு செய்தார் ஹேரியட்.

தனது சகோதரர்கள் பென், ஹென்றி இருவருடன் தப்பித்து ஓடினார். ஆனால், பென்னுக்கு அப்போதுதான் குழந்தை பிறந்திருந்ததால், சகோதரர்கள் இருவரும் எஜமானரின் நிலத்துக்கே திரும்பினார்கள். வேறுவழியின்றி ஹேரியட்டும் அவர்களோடு திரும்பிவர வேண்டியதாயிற்று. ஆனாலும் விடுதலை பெறவேண்டும் என்ற உணர்வு ஹேரியட்டை உந்தியது. அடுத்த முறை தனியாகத் தப்பித்தார்.

தன்னுடைய குடும்பத்தினரையும் தப்பிக்க வைக்கத் திட்டம் தீட்டினார். 1850-ம் ஆண்டு அடிமைத்தளையில் இருந்து தப்பித்து ஓடுவதையும், தப்பிக்க உதவி செய்வதையும் குற்றம் என அறிவிக்கும் சட்டத்தை இயற்றியது அமெரிக்க அரசாங்கம். இருந்தாலும் தன்னுடைய குடும்பத்தினரை ஒவ்வொருவராக விடுவிக்கப் போராடினார் ஹேரியட்.

ஒவ்வொரு முயற்சியின்போதும் அவருடைய தன்னம்பிக்கையும், மன உறுதியும் அதிகரித்தது. இவ்வாறு 11 வருடங்களில் எழுபது பேரை விடுவித்தார். ஒவ்வொரு விடுதலைப் பயணமும் சிக்கல் நிறைந்ததாக இருந்தது. அவை எல்லாவற்றையும் தாண்டித்தான் இந்தச் சாதனையை நிகழ்த்தினார் ஹேரியட். 1861-ம் ஆண்டு அமெரிக்க சிவில் போர் தொடங்கியது. யூனியன் படைகள் வெற்றிபெற்றால் ஆப்பிரிக்க-அமெரிக்க மக்கள் விடுதலை பெறுவார்கள் என்று நம்பினார் ஹேரியட்.

போரில் அடிபட்ட வீரர்களுக்குச் செவிலியராகப் பணிபுரிந்தார். அந்தப் போரின் போதும் நூற்றுக்கணக்கான அடிமைகளை மீட்க உதவினார்.

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெண்களின் ஓட்டுரிமைக்காகப் போராடினார். ஆப்ரோ-அமெரிக்கப் பெண்களின் கூட்டமைப்பு தொடங்கப்பட்ட போது, முதல் சிறப்புப் பேச்சாளராக கவுரவிக்கப்பட்டார்.

1911-ம் ஆண்டு வயதான காரணத்தால் ஹேரியட்டின் உடல்நிலை மோசமானது. அவர் பெயரிலேயே அமைந்த ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். 1913-ம் ஆண்டு நிமோனியா தொற்றால் மறைந்தார்.

மேலும் செய்திகள்