< Back
சாதனையாளர்
இயற்கையோடு இணைந்திடுங்கள் - ஜீவிதா
சாதனையாளர்

இயற்கையோடு இணைந்திடுங்கள் - ஜீவிதா

தினத்தந்தி
|
26 March 2023 7:00 AM IST

சிறப்பாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற உறுதி இருந்தால் எதையும் செய்யலாம்.

ரோடு மாவட்டம் புஞ்சைப் புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜீவிதா, குளியல் சோப் முதல் சானிட்டரி நாப்கின் வரை இயற்கை வழியில் தயாரித்து வெற்றிகரமான தொழில் முனைவோராக விளங்குகிறார். இதற்காக அவர் தாரகை சாதனையாளர் விருது, அறம் தொழில் முனைவோர் விருது, விடியல் ஐகான்ஸ் விருது, நந்தவனம் பவுண்டேஷன் சாதனைப் பெண் விருது உள்பட பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார். அவருடன் ஒரு சந்திப்பு.

உங்களைப் பற்றி?

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பிறந்து வளர்ந்தேன். தந்தை சுப்ரமணியம், தாய் விஜயா, தம்பி வசந்த் குமார் மூவருமே விவசாயம் செய்கிறார்கள். நிதித்துறையில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றிருக்கிறேன். கல்லூரி காலத்தில் விளையாட்டு வீராங்கனையாக இருந்த நான், கலைநிகழ்ச்சிகளில் இடம்பெற்ற நாடகங்களிலும் நடித்திருக்கிறேன். திருமணத்துக்குப் பிறகும் சொந்த ஊரிலேயே வசித்து வருகிறேன்.

இயற்கை வழியில் பொருட்களைத் தயாரிக்கும் ஆர்வம் எப்படி வந்தது?

பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். எனக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் வரை குழந்தை பிறக்கவில்லை. அடுத்தடுத்து கரு கலைந்து கொண்டே இருந்தது. பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்று பல மருத்துவர்களிடம் ஆலோசித்தேன். அனைவரும் "உங்களுக்கு உடலில் எந்த பிரச்சினையும் இல்லை" என்றே சொன்னார்கள்.

கடைசியாக ஒரு மருத்துவரிடம் ஆலோசித்தபோது, "மாதவிடாய் காலத்தில் நாப்கின் பயன்படுத்தும்போது உடம்பு அதிக சூடாகும். அதனால் கரு முட்டைகள் சிதைவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே நாப்கின் பயன்படுத்துவதற்கு பதிலாக பருத்தித் துணியைப் பயன்படுத்துங்கள்" என்று அறிவுறுத்தினார். அப்போதுதான் "நாப்கின்களால் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்படுமா?" என்று யோசித்தேன். அதற்கான தீர்வை தேட ஆரம்பித்தேன்.

இயற்கை வழியில் விவசாயம் செய்ய வேண்டும் என்பதுதான் எனது ஆசையாக இருந்தது. ஒரு சில காரணங்களால் அது முடியாமல் போனது. 'விவசாயம் செய்ய முடியாவிட்டாலும், பெண்களுக்கு முக்கியமான பொருளான சானிட்டரி நாப்கின்களை இயற்கை வழியில் தயாரிக்கலாம்' என்று முடிவெடுத்தேன்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, எனது இரண்டாவது குழந்தைக்கு ஒன்றரை வயது இருந்தபோதுதான் இயற்கை வழி நாப்கின் தயாரிப்பு தொழிலைத் தொடங்கினேன். அப்போது அது எனக்கு பெரிய சவாலாக இருந்தது. கைக்குழந்தையை வைத்துக்கொண்டு, தொழிலுக்கான நிதி திரட்டுவதற்கும், மூலப்பொருட்களை கண்டுபிடிப்பதற்கும் பல சிரமங்களை எதிர்கொண்டேன்.

இரவில் குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு, நாப்கின் தயாரிப்பதற்கான வழிகளைத் தேடினேன். மூலப்பொருட்களை சேகரித்து நாப்கின் தயாரித்து, அதை மற்றவர்களுக்கு மாதிரிப் பயன்பாட்டுக்காக கொடுத்து பரிசோதித்து, விற்பனைக்கு கொண்டு வருவதற்கே பல மாதங்கள் ஆயின. 'இயற்கையான வழியில் பயணிக்கிறேன்' என்று சொல்லியும் யாரும் எனக்கு உதவி செய்ய முன்வரவில்லை. அதைச் செய்வதற்கான உந்துதலையும் கொடுக்கவில்லை.

"கடைகளில் குறைந்த விலைக்கு நாப்கின்கள் கிடைக்கும்போது, மூன்று மடங்கு அதிக விலை கொடுத்து உன்னிடம் யார் வாங்குவார்கள்?" என்று என் ஊக்கத்தைக் குறைக்கும் விதமாகவே பலரும் பேசினார்கள்.

அதற்காக கவலைப்படாமல், இரவு பகல் பார்க்காமல் வேலை செய்தேன். வாடிக்கையாளரிடமும், முகவர்களிடமும் தொலைபேசி வழியே பேசினேன். இத்தனை சவால்களை சந்தித்த பிறகுதான், இயற்கை வழி நாப்கின்கள் உற்பத்தித் தொழிலைத் தொடங்கினேன்.

இப்போது கோல்டு பிராசஸ் முறையில் மூலிகை சோப்பும் தயாரிக்கிறேன். குடகு மலையில் இருந்து தேன் வரவழைத்து, அதையும் விற்பனை செய்கிறேன்.

தயாரிக்கும் பொருட்களை எப்படி சந்தைப்படுத்துகிறீர்கள்?

பெரும்பாலும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவே சந்தைப்படுத்துகிறேன். முதன்முதலில் காரைக்குடியைச் சேர்ந்த ஆஷா லெனின் என்ற ஹோமியோபதி மருத்துவரைத் தொடர்பு கொண்டு "இயற்கை வழியில் தயாரித்த என்னுடைய நாப்கின்களைப் பயன்படுத்திப் பாருங்கள்" என்று கேட்டுக்கொண்டேன். அவர் அதைப் பயன்படுத்திப் பார்த்தது மட்டுமில்லாமல், தனது முகநூல் பக்கத்தில் அது குறித்து பதிவு செய்தார். அதைப் பார்த்துப் பலரும் வாங்கினார்கள். அதுதான் எனது தயாரிப்பை முதன்முதலில் விற்பனை செய்வதற்கான வாய்ப்பாக அமைந்தது.

அதன் பிறகு, யூடியூப் சேனல் நடத்துபவர்கள், இன்ஸ்டாகிராமில் அதிக பின் தொடர்பவர்களைக் கொண்டவர்கள், சீரியல் நடிகைகள் என ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு பேசி, அவர்களுக்கு தயாரிப்புகளை அனுப்பி வைத்தேன். அவர்கள் பயன்படுத்திவிட்டு என் தயாரிப்பு பற்றி சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிவித்தனர். அதைப் பார்த்து ஏராளமானவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு நாப்கின்களை வாங்க ஆரம்பித்தனர்.

உங்களைப்போல் தொழில் தொடங்க விரும்பும் இல்லத்தரசிகளுக்கு உங்களின் ஆலோசனை என்ன?

எனக்குப் பிடித்த வேலையை நானே கண்டறிந்து செய்து கொண்டிருக்கிறேன். அதுபோல மற்ற பெண்களும் தங்களுக்கு பிடித்த வேலைகளை செய்வதற்கு முன்வர வேண்டும். இதற்காக பல சவால்களை சந்திக்க நேரிடும். குடும்பத்தின் ஆதரவைப் பெறுவது கடினமாக இருக்கும். நிதி உதவி பெறுவதற்கு பல சிரமங்கள் ஏற்படும். குழந்தைகளை கவனித்துக்கொள்ள ஆள் இருக்காது. ஒவ்வொரு விஷயத்துக்கும் நாமே அலைந்து திரிந்து பல போராட்டங்களுக்குப் பிறகே சாதிக்க முடியும். அதனால் 'எந்தத் தடை வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்' என்ற உந்துதல் வேண்டும். சிறப்பாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற உறுதி இருந்தால் எதையும் செய்யலாம்.

மேலும் செய்திகள்