< Back
சாதனையாளர்
விளையாட்டு உங்களை பக்குவப்படுத்தும் - ஓவியா
சாதனையாளர்

விளையாட்டு உங்களை பக்குவப்படுத்தும் - ஓவியா

தினத்தந்தி
|
10 Sept 2023 7:00 AM IST

பெண்கள் தங்களுக்குள் இருக்கும் தயக்கத்தையும், பயத்தையும் தகர்த்து, படிப்பையும் தாண்டி, தங்களுக்குப் பிடித்தமான ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டும். விளையாட்டு நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவும்.

டைகளைத் தகர்த்து பெண்களும் தற்போது விளையாட்டுத் துறையில் சாதித்து வருகிறார்கள். வில்வித்தை விளையாட்டில் பெண்களுக்கு முன்னோடியாக இருக்கிறார் சென்னையை சேர்ந்த உளவியல் ஆலோசகரான ஓவியா. இவர் மத்திய விளையாட்டு கூட்டமைப்பு மூலம் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் தொடர்ச்சியாக மூன்று முறை பதக்கம் பெற்றுள்ளார். 2018-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் 'தங்கவில்லாளி' பட்டம் பெற்றுள்ளார். ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் பயிற்சிகளையும் இடைவிடாமல் மேற்கொண்டு வரும் இவருடனான உரையாடலில் இருந்து…

வில்வித்தை மீது ஆர்வம் வந்தது எப்படி?

எனது அப்பா மணிவாசகம், நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே, விளையாட்டு பயிற்சி அகாடமியை நிறுவினார். அங்கு பயிற்சி எடுப்பவர்களைப் பார்க்கப் பார்க்க எனக்குள் ஆர்வம் முளையிட்டது. எனக்கான விளையாட்டுப் பயிற்சிகளை சிறு வயதில் இருந்தே அப்பாவிடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். தொடக்கத்தில் பள்ளிகளில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டேன். பரிசு கிடைக்கவில்லை என்றாலும், எனது பெற்றோரிடம் இருந்து அடுத்த போட்டிக்கான ஊக்கம் கிடைக்கும். அதன்பின், தொடர்ச்சியாக மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தொடங்கி, மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவற்றில் வெற்றியும் பெற்றேன்.

இதுவரை கலந்து கொண்ட போட்டிகளில் பெற்ற வெற்றிகள் குறித்து சொல்லுங்கள்?

நான்காம் வகுப்பு படிக்கும் போது, பள்ளி மாணவர்களுக்காக மட்டுமே நடைபெறும் 'மகரிஷி டிராபி' வில்வித்தை போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றேன். 2013-ம் ஆண்டு தேசிய அளவிலான 'மும்பை மேயர் கோப்பை' வில்வித்தை போட்டியில் கலந்து கொண்டேன். அதில் இரண்டு பிரிவுகளில் மொத்தமாக 8 பதக்கங்களை வென்றேன். அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் பல போட்டிகளில் பங்கேற்று வருகிறேன்.

மத்திய பிரதேசம், ஆக்ரா போன்ற இடங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டிகளிலும் கலந்துகொண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளேன். இந்திய பள்ளி விளையாட்டுக் கழக கூட்டமைப்பு சார்பில் 2016, 2017, 2018 ஆகிய மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற வில்வித்தை போட்டிகளில் தொடர்ந்து தங்கப்பதக்கம் பெற்றுள்ளேன். இது தவிர, மாநில அளவிலான வில்வித்தை போட்டிகளில் கலந்து கொண்டும் பதக்கங்களை பெற்றுள்ளேன்.

துப்பாக்கி சுடுதல் பயிற்சி எவ்வாறு மேற்கொள்கிறீர்கள்?

என் அண்ணன் திலீபனிடம் தான், நான் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். அதில் ரைபிள் மட்டுமில்லாமல் பிஸ்டல் மற்றும் அதில் உள்ள பல வகைகளையும் கற்றுக்கொண்டிருக்கிறேன். மேலும், என்னை மேம்படுத்திக்கொள்வதற்கு தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.

குடும்ப ஆலோசனை சார்ந்த படிப்பை தேர்ந் தெடுத்ததற்கான காரணம் என்ன?

மேல்நிலைப்பள்ளி படிப்பில் சேரும்போது நேஷனல் இன்ஸ்டிடியூட் ஓபன் ஸ்கூலிங் பிரிவில் கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் இருந்தது. அதில் இருந்து எனக்கு பிடித்தமான, 6 முதல் 7 பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் முக்கியமான சில பாடங்களான உளவியல், சமூகவியல், மனிதநேயம் போன்ற பிரிவுகளுக்கு ஏற்றதுபோல இருக்கும் பாடப்பிரிவுகளை நான் தேர்ந்தெடுத்தேன். அதற்கு முக்கியக் காரணம் எனது குடும்பத்தினரின் ஊக்கமே. சிறு வயது முதலே எனது குடும்பத்தினரைப் பார்த்து உத்வேகம் அடைந்து, எனக்கு இந்த படிப்பில் ஆர்வம் உண்டானது. என்னுடைய நண்பர்கள், என்னுடன் பயிற்சி செய்யும் சக பயிற்சியாளர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் என எனக்கு பழக்கமானவர்கள் சந்திக்கும் மன உளைச்சல், குடும்பம் சார்ந்த பிரச்சினைகள் போன்றவற்றை ஆரம்ப காலத்தில் இருந்தே பார்த்து வருகிறேன். மேலும் சமூகத்திலும் பல பிரச்சினைகளும், குறைகளும் இருக்கின்றன. சமூகத்தை சரிசெய்வதற்கான முதல்படி நம் வீட்டின் நிலையை மேம்படுத்துவதே என்பதன் அடிப்படையில் குடும்ப ஆலோசனை படிப்பை தேர்ந்தெடுத்தேன்.

விளையாட்டு மற்றும் கல்வி இரண்டுக்கும் எப்படி நேரம் ஒதுக்குவீர்கள்?

பள்ளிப் பருவத்தில் இருந்தே விளையாட்டு, கல்வி என இரண்டிலும் ஈடுபட்டு வருகிறேன். எப்போதுமே பாட மதிப்பெண்தான் கட்டாயம் என்ற எண்ணத்தில் நான் படிக்கவில்லை. நாம் செய்யும் விஷயத்தை முழுமனதுடனும், தைரியத்துடனும், தயக்கமின்றியும் செய்ய வேண்டும் என்ற பக்குவத்தை விளையாட்டின் மூலமே கற்றுக் கொண்டேன். வீட்டில் முழு சுதந்திரம் இருந்ததால் என்னால் படிப்பு, விளையாட்டு என இரண்டிற்கும் நேரம் ஒதுக்க முடிந்தது. கல்லூரியிலும் விளையாட்டுத்துறை ஒதுக்கீட்டில் படிப்பதால் அதிகமான பயிற்சிகள் எடுக்க முடிந்தது. ஆனால் இப்போது மேற்படிப்பை தொடங்கியதால் வில்வித்தை, துப்பாக்கிச் சுடுதல் ஆகியவற்றுக்கு அதிக நேரம் ஒதுக்குவது கொஞ்சம் கடினமாக உள்ளது.

விளையாட்டில் பெண்கள் அதிகளவில் ஈடுபட உங்கள் ஆலோசனைகள்?

நான் வீட்டிலேயே அதிகமாக பயிற்சி எடுத்ததால், வெளியே செல்ல வேண்டிய சூழல் ஏற்படவில்லை. போட்டிகளில் பங்கேற்க மட்டும்தான் நான் வெளி இடங்களுக்குச் செல்கிறேன். அப்போதும், என்னுடன் பெற்றோர், பயிற்சியாளர் ஆகியோர் உடன் வருவார்கள். இதனால் எனக்கு பாதுகாப்பான சூழல் இருக்கிறது. இந்த காலத்தில் எல்லா துறைகளிலும் பெண்கள் நல்ல நிலையில் உள்ளனர். குறிப்பாக விளையாட்டுத் துறையை எடுத்துக் கொண்டால், ஆண்-பெண் என்ற எந்த வேறுபாடுகளும் இன்றி எல்லோருக்கும் மத்திய, மாநில அரசு பல வகைகளில் நிதியுதவி அளித்து வருகிறது. விளையாட்டுகள் எல்லாம் விஞ்ஞான பூர்வமாக வளர்ந்து கொண்டே வருகின்றன. பெண்கள் தங்களுக்குள் இருக்கும் தயக்கத்தையும், பயத்தையும் தகர்த்து, படிப்பையும் தாண்டி, தங்களுக்குப் பிடித்தமான ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டும். விளையாட்டு நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவும்.

மேலும் செய்திகள்