< Back
சாதனையாளர்
சவால்களை சாதனைகளாக மாற்றும் சவுமியா
சாதனையாளர்

சவால்களை சாதனைகளாக மாற்றும் சவுமியா

தினத்தந்தி
|
30 July 2023 7:00 AM IST

சமையல் அறை, குடும்பம், வீட்டு வேலைகள் இது மட்டுமே உலகம் என்று நினைக்காமல், உங்களுக்கு என்று தனிப்பட்ட, உயர்ந்த லட்சியங்கள் கொண்ட உலகத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். அது உங்களுக்கான அடையாளத்தை வெளி உலகத்துக்கு எடுத்துக்காட்டும்.

"வாழ்க்கை எனும் பயணத்தில் ஏராளமான சவால்கள் மலைபோல நமக்கு முன்பு தோன்றக்கூடும். அப்போது அதன் மீது ஏறியோ, அதை சுற்றியோ கடந்துசெல்ல முயற்சி செய்வோம். அவ்வாறு கடப்பதற்கு முதல் அடியை எடுத்துவைக்கும் தருணத்தில் இருந்தே நம்மோடு வரும் நண்பர்தான் 'பயம்'. அதை ஒரு நண்பரைப்போல நேர்மறையாக அணுகும்போது, நன்மையே நடக்கும். உங்களுடைய இலக்கை நோக்கி நீங்கள் முன்னேறும் பயணத்தில் பயத்தை எதிரியாக பார்க்க ஆரம்பித்தீர்கள் என்றால், அதனோடும் போராட வேண்டிய சூழ்நிலை உண்டாகும்" என்கிறார் சவுமியா.

தன்னம்பிக்கை பேச்சாளர், வலையொளி நிகழ்ச்சி தொகுப்பாளர், பட்டிமன்ற பேச்சாளர் என பன்முகத் திறமையோடு செயல்பட்டு வருகிறார் இவர். பிரபல தொலைக்காட்சிகளில் சாலமன் பாப்பையா, சுகி சிவம் போன்ற ஆளுமைகளுடன் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிறந்து வளர்ந்த சவுமியா, தற்போது துபாயில் தமிழ் மணம் பரப்பி வருகிறார்.

சவுமியா, துபாயில் நடைபெற்ற பிரபல பாடல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர். அந்நாட்டு பண்பலையில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றவர். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில், துபாயில் நடைபெற்ற கல்வி சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர். தன்னுடைய திறமைகளுக்காக பல்வேறு விருதுகள் பெற்றவர். மென்பொருள் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் சவுமியா, அத்துறைச் சார்ந்த நிறுவனத்தில் வணிக ஆய்வாளராக பணிபுரிந்திருக்கிறார். இவரிடம் பேசியதில் இருந்து..

"தஞ்சாவூரில் உள்ள கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும்போதே, பல்வேறு இலக்கியப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆன்மிகம், சுற்றுலா மற்றும் வரலாற்று சிறப்புவாய்ந்த பகுதி என்பதால் தஞ்சையில் பிரபலமான ஆளுமைகளின் கருத்தரங்கம், சொற்பொழிவு, விழிப்புணர்வு நாடகங்கள் போன்றவை நடைபெறுவது வழக்கம். மாலை நேரங்களில், நான் தவறாமல் அந்த நிகழ்வுகளை பார்க்கச் செல்வேன். அப்போதுதான் 'நாமும் இதுபோன்ற மேடைகள் ஏற வேண்டும்' என்ற எண்ணம் எனக்குள் உண்டானது".

முதல் மேடை அனுபவம் குறித்து சொல்லுங்கள்?

கத்தார் நாட்டில், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா தலைமையில் தனியார் தொலைக்காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில்தான் முதன்முதலில் பேசினேன். ஆர்ப்பரித்த கூட்டத்துக்கு இடையே, தயக்கத்துடனும், கலக்கத்துடனும் களமிறங்கினேன். நான் முதன்முதலாக ஊதியம் வாங்கியதும் அந்த நிகழ்வில்தான். என்னுடைய வாழ்வில் மறக்கமுடியாத தருணம் அது. அந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த மீரா என்பவரை நான் எப்போதும் மறக்க மாட்டேன்.

வலையொளி (யூடியூப்) நிகழ்ச்சிகளில் பிரபலமான நீங்கள், பெண்களின் இணைய பயன்பாடு எவ்வாறு இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

இணையம் என்பது ஒரு நவீன ஊடகம். அதன் மூலம் நடப்பு செய்திகள் பல்வேறு இடங்களிலும் இருந்து எளிதாக நமக்கு கிடைக்கிறது. அந்த தகவல்களை மற்றவர்களுடன் நாம் பகிர்ந்துகொள்வதற்கு முன்பு, அதன் உண்மைத்தன்மையை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். சமூக வலைத்தளங்களில் நாம் பகிரும் செய்திகளுக்கு நாமே பொறுப்பாளர் ஆவோம். எல்லோரும் இணையத்தை பாதுகாப்புடனும், பொறுப்புள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடனும் பயன்படுத்த வேண்டும். அனைவருக்கும் சுய ஒழுக்கம் என்பது முக்கியமானது. ஒருகாலத்தில் பெண்கள் இணையத்தில் பயணிக்க தயங்கினார்கள். ஆனால், இன்று பெண்களுக்கு பல்வேறு வழிகளில் இணையம் உதவியாக இருக்கிறது.

உங்களுடைய எழுத்து ஆர்வம் குறித்து சொல்லுங்கள்?

எனக்கு கதை, கட்டுரைகள் எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. விரைவில் நான் எழுதிய புத்தகத்தை வெளியிட இருக்கிறேன். சில குறும்படங்களுக்கு பாடல்கள் எழுதி இருக்கிறேன். நல்ல சிந்தனையும், கற்பனை வளமும் இருந்தால், எவராலும் பாடலாசிரியர் ஆக முடியும் என்ற நிலையை யூடியூப் போன்ற சமூக ஊடகங்கள் உருவாக்கி இருக்கின்றன. திரைப்படத்துறையில் பாடல் எழுத வேண்டும் என்ற எனது கனவும் விரைவிலேயே நனவாகும் என்று நம்புகிறேன்.

இதுவரை நீங்கள் பெற்ற விருதுகள், பாராட்டுகள் குறித்து சொல்லுங்கள்?

பல்வேறு விருதுகள் பெற்றிருந்தாலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் ரோட்டரி சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட 'தமிழ்ச்சாரல்' என்ற விருது என் மனதுக்கு நெருக்கமானது. சமீபத்தில் ஒரு பட்டிமன்றத்தில் நான் பேசியபோது, திடீரென்று 'மைக்' வேலை செய்யவில்லை. ஆனால் பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து, உரத்த குரலில் பேசினேன். அது பார்வையாளர்களுக்கும் கேட்கும் வகையில் இருந்தது என்று புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் ராஜா பாராட்டினார். அதை என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்று சொல்வேன்.

உங்களைப் போன்ற பெண்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது என்ன?

சமையல் அறை, குடும்பம், வீட்டு வேலைகள் இது மட்டுமே உலகம் என்று நினைக்காமல், உங்களுக்கு என்று தனிப்பட்ட, உயர்ந்த லட்சியங்கள் கொண்ட உலகத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். அது உங்களுக்கான அடையாளத்தை வெளி உலகத்துக்கு எடுத்துக்காட்டும். பிறருக்கு உதவும் குணம் இயல்பாகவே பெண்களுக்கு அதிகமாக இருக்கும். இருந்தாலும், உங்களையும் கவனித்துக்கொள்ள மறக்காதீர்கள். குறிப்பாக உங்களுக்காக நேரத்தை செலவிடுங்கள். உங்களுடைய உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்துங்கள்.

மேலும் செய்திகள்