பரதத்தில் பரிமளிக்கும் ரித்திகா
|எனக்கு படம் வரைவது பிடிக்கும். 247 தமிழ் உயிர்மெய் எழுத்துக்களை 1 நிமிடம், 40 வினாடிகள் மற்றும் 28 மில்லி வினாடிகளில் அதிவேகமாக பாடல் வடிவில் பாடி, ஆசியா புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக்ஸ் ஆப் ரெக்காட்சில் இடம் பிடித்துள்ளேன்.
பரத நாட்டியத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் மூன்று வயதில் இருந்தே, அதைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார் புதுச்சேரியைச் சேர்ந்த ரித்திகா. தற்போது பன்னிரண்டு வயதாகும் இவர் பரதத்தில் பல சாதனைகளை நிகழ்த்தி பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளார். பரதத்தோடு பயணிப்பதைப் பற்றி அவர் பகிர்ந்துகொண்டவை இங்கே…
பரத நாட்டியத்தில் ஆர்வம் வந்தது எப்படி?
எனக்கு மூன்று வயது இருக்கும் போது, எனது பாட்டி, என்னை பரதநாட்டிய வகுப்பிற்கு அழைத்துச் செல்வார். அங்கு மற்றவர்கள் பரதம் ஆடும் விதம் என்னை மிகவும் ஈர்த்தது. நானும் அவ்வாறு ஆட வேண்டும் என்ற ஆசையால், பாட்டியிடம் கேட்டு ஆர்வமாக கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். எனது பரதநாட்டிய குருவான தல்யா சகாயராஜ் கற்றுக்கொடுக்கும் விதமும், என்னை பரதத்தின் மீது அதிக ஈடுபாடு கொள்ளச்செய்தது.
உங்களின் மற்ற திறமைகள் பற்றி…
எனக்கு படம் வரைவது பிடிக்கும். 247 தமிழ் உயிர்மெய் எழுத்துக்களை 1 நிமிடம், 40 வினாடிகள் மற்றும் 28 மில்லி வினாடிகளில் அதிவேகமாக பாடல் வடிவில் பாடி, ஆசியா புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ்
மற்றும் இந்தியா புக்ஸ் ஆப் ரெக்காட்சில் இடம் பிடித்துள்ளேன். நீங்கள் செய்த சாதனைகள் மற்றும் பெற்ற விருதுகள் பற்றி….
பரதநாட்டியத்தில் 'அனைத்து அஸம்யுத வினியோகங்களையும் குறுகிய காலத்தில் நிகழ்த்திய இளையவர்' என்ற புதிய உலக சாதனை நிகழ்த்தி, இண்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்சில் இடம் பிடித்துள்ளேன். மேலும், ஸ்டேட் பெஸ்ட் சைல்டு விருது, இளந்தளிர்-2019 விருது, தி கிராண்ட் மாஸ்டர் ஆப் கிளாசிக்கல் டான்ஸ், பாலா ஸ்ரீ கலா ரத்னா விருது, சிறுவர் கலைச்சுடர், டான்ஸிங்க் சூப்பர் ஸ்டார், மக்ஸ் லிட்டில் ஐக்கான் மற்றும் ஸ்டார் கிட்ஸ் போன்ற விருதுகள் பெற்றுள்ளேன். பரதம் தொடர்பான பல போட்டிகளில் பங்கேற்று முதல் மூன்று பரிசுகள் பெற்று பதக்கங்கள் மற்றும் பாராட்டுகளும் பெற்றுள்ளேன்.
இவற்றையெல்லாம் நிகழ்த்துவதற்கு குடும்பத்தினர் எனக்கு மிகவும் ஆதரவாக உள்ளனர். எனது வெற்றிக்கு பாதை அமைத்துக் கொடுப்பவர்களும் அவர்கள் தான். நிறைய போட்டிகளுக்கு என்னை அழைத்துச் செல்கிறார்கள். எனது குருவும் குடும்பத்தார் போலவே, எனக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்து ஊக்கப்படுத்தி வருகிறார்.
மறக்க முடியாத தருணம் என்று எதைச் சொல்வீர்கள்?
துபாயில் நடந்த சர்வதேச நடனப் போட்டியில் கலந்து கொண்டு, தங்கப் பதக்கம் பெற்றது மறக்க முடியாத தருணம். ஒவ்வொரு விருதும் எனக்கு விஷேசமான தருணங்களை உரு வாக்கித் தந்துள்ளது. பாராட்டும், பரிசுகளும் பெறும் ஒவ்வொரு தருணமும் எனக்கு சிறப்பானது.
உங்கள் இலக்கு என்ன?
வருங்காலத்தில் பெரிய நடனக்கலைஞர் ஆக வேண்டும். பாரம்பரிய நடனமான, பரதக்கலையை உலகம் முழுவதும் பரவச் செய்ய வெண்டும் என்பதே எனது இலக்கு.