< Back
சாதனையாளர்
பார்வையற்றவர்களுக்கு பயன் தரும் செயலி
சாதனையாளர்

பார்வையற்றவர்களுக்கு பயன் தரும் செயலி

தினத்தந்தி
|
26 Jun 2022 7:00 AM IST

கொரோனா காலகட்டத்தில்தான் இந்த செயலியை உருவாக்கினோம். கொரோனா முதல் அலையின் போது பார்வையற்றவர்கள் மாதக்கணக்கில் அவரவர் வசிப்பிடங்களில் முடங்கிப்போக நேரிட்டது. நோய் பரவாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் முதன்மையானது, ஒருவரை ஒருவர் தொடாமல் இருப்பதுதான்.

மூக சேவையில் ஈடுபாடு ஏற்பட்டு, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கை மேம்பட பலவிதங்களில் செயலாற்றி வருகிறார் ஐஸ்வர்யா சிவகுமார். அவர்களுக்காக முன்மாதிரி செயலியொன்றை உருவாக்கியிருப்பது ஐஸ்வர்யாவின் தனித்துவமான முயற்சி.

கோவையைச் சேர்ந்த இவர், தற்போது உலகளாவிய தொண்டமைப்பு ஒன்றின் ஏசியா பசிபிக் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். பல்வேறு தொண்டமைப்புகளின் தகவல்களைத் திரட்டி, சில மென்பொருட்களைக் கொண்டு பகுப்பாய்வு செய்து, அதனை எளிதாக புரியும் வண்ணம் காட்சிப்படுத்தி, அவை சார்ந்த பயிற்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தி தரும் பணியை செய்து கொண்டிருக்கிறார். அவரது பேட்டி.

அப்பா சிவகுமார் - அம்மா கற்பகம். எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறார். கணவர் நாராயணன்; தனியார் துறையில் பணிபுரிகிறார்.

கணவரும், நானும் இணைந்து கடந்த 15 வருடங்களாகத் தொண்டமைப்பு ஒன்றை நிர்வகித்து வருகிறோம். அதன் புதிய முயற்சி தான் விழித்திறன் குறைபாடு கொண்டவர்களுக்காக 'சகா' எனும் செயலி தயாரித்தது. 'சகா' என்றால் நண்பன். பார்வையற்றவர்களுக்கு நண்பனாக இருந்து, வழிநடத்தும் விதத்தில் உருவாக்கிய முன்மாதிரி செயலி என்பதால் இந்தப் பெயர் வைத்தோம்.

கொரோனா காலகட்டத்தில்தான் இந்த செயலியை உருவாக்கினோம். கொரோனா முதல் அலையின் போது பார்வையற்றவர்கள் மாதக்கணக்கில் அவரவர் வசிப்பிடங்களில் முடங்கிப்போக நேரிட்டது. நோய் பரவாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் முதன்மையானது, ஒருவரை ஒருவர் தொடாமல் இருப்பதுதான். ஆனால், தொட்டு உணர்தல் மூலமாகத்தான் பார்வையற்றவர்கள் செயல்பட முடியும். இதனால் அவர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தார்கள். அவர்களுக்கு நாங்கள் எந்த விதத்தில் உதவ முடியும் என யோசித்ததன் விளைவுதான் 'சகா' செயலி.

திருச்சியில் இருக்கும் பொறியியல் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து இந்த முன்மாதிரியை உருவாக்கினோம். இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று கருவியாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

இந்தச் செயலி எப்படி செயல்படுகிறது?

இதன் மூலம், எதிரில் யாரேனும் வந்தால் உணர முடியும்; பேருந்துகளின் வழித்தடம் பற்றி அறிந்துகொள்ள முடியும். கால்டாக்ஸி போன்ற வாகனங்களை யாருடைய துணையுமின்றி வரவழைத்து பயணிக்க முடியும். 'மாஸ்க்' என்று கூறினால் தன் பக்கத்தில் இருக்கும் நபர் முககவசம் அணிந்திருக்கிறாரா? இல்லையா? என்பதை இந்தச் செயலி மூலம் தெரிந்துகொள்ள முடியும். இது போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

பார்வையற்றவர்களுக்காக நீங்கள் செய்யும் மற்ற சேவைகள் பற்றி?

கொரோனா காலகட்டத்தில் பல மாவட்டங்களில் ஏராளமான பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மளிகைப் பொருட்கள், பார்வையற்றவர்கள் ஊன்றுகோல் போல் பயன்படுத்தும் குச்சி உள்ளிட்டவற்றை வழங்கினோம்.

தற்போது அவர்கள் சுயதொழில் செய்து வருமானம் ஈட்டும் விதத்தில், சோப்பு தயாரித்தல், மெழுகுவர்த்தி தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்க திட்டமிட்டு அதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தன்னிச்சையாக வாழ்வதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவற்றைச் செய்ய வேண்டும். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.

மேலும் செய்திகள்