நேர்மறை எண்ணங்களே வாழ்க்கையை மேம்படுத்தும் - திவ்யா
|எதுவும் செய்யாமல், எப்போதும் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதால் மன அழுத்தம் அதிகரிக்கும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். புதிய பொழுதுபோக்குகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
"ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு வெற்றியாளர் இருக்கிறார். அவரை வெளிக்கொண்டுவர நான் உதவுகிறேன். உடல் மற்றும் மன ரீதியில் பல்வேறு பிரச்சினைகளால் முடங்கி இருந்த நான், மீண்டெழுந்து சாதித்த கதை பலருக்கு உந்துதலாக இருக்கிறது என்பதையே, என் வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனையாகக் கருதுகிறேன்" என்கிறார் வாழ்வியல் பயிற்சியாளர் திவ்யா கண்ணன். அவருடன் உரையாடியதிலிருந்து…
எனது சொந்த ஊர் விருதுநகர். இப்போது சென்னையில் வசித்து வருகிறேன். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றிருக்கிறேன். என்னுடைய கணவர் கண்ணன், மென்பொருள் பொறியாளர். எனக்கு நிகில், நிதின் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
வாழ்வியல் பயிற்சியாளராக நீங்கள் செய்து வரும் பணிகள் பற்றி சொல்லுங்கள்?
மற்றவர்களுடன் தயக்கமின்றி உரையாடுவது எனது இயல்பான சுபாவம். அதனால், தங்களிடம் திறமை இருந்தாலும், அதை நம்பாமல் முடங்கி இருப்பவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவது எனக்கு சுலபமாக இருந்தது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் வெற்றிகரமாகவும், ஆனந்தமாகவும் இருப்பதற்கு தேவையான பயிற்சிகளை வழங்குகிறேன். வாழ்க்கையில் நாம் எவ்வளவு வெற்றிகரமாக இருந்தாலும், மனதளவில் எளிமையாக இருந்தால் மட்டுமே ஆனந்தமாக இருக்க முடியும். நம்முடைய வாழ்க்கையின் அடிப்படையை வலுவாக கட்டமைத்துக் கொண்டால், எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
நீங்கள் வாழ்வியல் பயிற்சியாளராக மாறியது எப்படி?
கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும்போது எனக்கு திருமணம் நடந்தது. இதனால் படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழ்நிலை உருவானது. திருமணத்துக்குப் பிறகு என்னுடைய வாழ்க்கையே தலைகீழாக மாறியது போல உணர்ந்தேன். நல்ல மகள், நல்ல மருமகள், நல்ல மனைவி, நல்ல அம்மா என்றெல்லாம் பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக, மிகவும் சிரமப்பட்டு உழைத்துக் கொண்டிருந்தேன். எல்லோரையும் கவனித்துக்கொண்ட நான், என்னுடைய உடலையும், மனதையும் கவனிக்கத் தவறினேன். அதனால் ஏற்பட்ட மன அழுத்தம், மனச்சோர்வாக மாறியது. அதில் இருந்து எப்படி மீள்வது என்றே தெரியாமல் படுத்த படுக்கையாகி உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தேன். மருந்து மாத்திரைகள் சாப்பிட்ட பிறகும், உடல்நிலை மோசமாகி என்னுடைய நுரையீரல் பாதிக்கப்பட்டது.
ஏழு ஆண்டுகளாக நான் நடத்திய குடும்ப வாழ்க்கையில், எங்கே தவறு நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அப்போதுதான் 'மனசே ரிலாக்ஸ் பிளீஸ்' என்ற புத்தகத்தைப் படித்தேன். அதில் இருந்து நமது மனதை அடிப்படையாகக் கொண்டுதான் உடல் இயங்குகிறது என்பதை தெரிந்து கொண்டேன். அதன்பிறகு மனதை நேர்மறை எண்ணங்களால் நிரப்பினேன். பல்வேறு முயற்சிகளின் மூலம் உடல் மற்றும் மனநிலையைத் தேற்றினேன். முதன்முறையாக வெளியே சென்று ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினேன். குழந்தைகளுடன் பழகியது என்னுடைய பிரச்சினைகளை மறக்கச் செய்து மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
அதன்பிறகு ஒரு தொழில் நிறுவனத்தில் சேர்ந்து, சுயதொழில் செய்ய பெண்களுக்கு உதவி செய்தேன். ஆனால், வாழ்க்கையில் மேலெழுந்து வந்த பல பெண்கள், திரும்பவும் அவர்களின் வீட்டுச் சூழ்நிலை காரணமாக முடங்கிப் போகத் தொடங்கியதைப் பார்த்தேன். அதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது அவர்கள் மன ரீதியில் பலமற்றவர்களாக இருப்பதை உணர்ந்தேன். அதனால் அவர்களுடைய மன நிலையை மேம்படுத்துவதற்கான நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.
என்னென்ன விஷயங்களைப் படித்தீர்கள்?
இளங்கலை படிப்பை பாதியில் நிறுத்திய நான் அதை நிறைவு செய்ததோடு, முதுகலை படிப்பையும் படித்து முடித்தேன். உளவியல் ரீதியான பாடத்திட்டங்களில் சேர்ந்து படித்தேன். நியூரோலிங்யுஸ்டிக் எனும் நரம்பியல் மொழியியல் மூலமாக, நம்முடைய எண்ணங்கள், வார்த்தைகள்தான் நமது வாழ்க்கையை உருவாக்குகிறது என்பதை கற்றுக் கொண்டேன். சிந்தனைகளில் இருக்கும் சிதைவுகளை களைவதற்கான 'காக்னிடிவ் பிஹேவியர் தெரபி' என்ற அறிவாற்றல் நடத்தை சிகிச்சை பற்றிய படிப்பையும் படித்து முடித்தேன். அதன்பிறகு நேர்மறை உளவியல் படிப்பையும், கடைசியாக வாழ்க்கைப் பயிற்சியையும் படித்து முடித்தேன். அதன்பிறகு என்னுடைய பயிற்சி நிறுவனத்தைத் தொடங்கினேன். யாராக இருந்தாலும் அவர்களைப் பற்றி அறிந்து, அவர்களிடம் உள்ள திறமையை உணர்ந்து, அவர்களின் சுபாவத்துக்கு ஏற்ற வகையில் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வழிகாட்டி வருகிறேன்.
எத்தகைய பயிற்சிகளை அளிக்கிறீர்கள்?
குழந்தைகளிடம் உள்ள ஆற்றலை அறிந்து, அவர்களுக்கு ஏற்ற வளர்ப்பு முறை, கல்வி, பொழுதுபோக்கு எல்லாவற்றையும் பரிந்துரைக்கிறேன். அவர்களிடம் உள்ள தேவையற்ற நம்பிக்கைகளை நீக்க உதவுகிறேன். அதன்பிறகு அவர்கள் வாழ்க்கையில் எதையெல்லாம் சாதிக்க விரும்புகிறார்கள் என்பதை அவர்களுடன் கலந்து ஆலோசித்து, அதை அடைவதற்கான திட்டங்களை வகுக்க உதவுகிறேன். ஆற்றல் நிறைந்த வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வழிகாட்டுகிறேன். பெண்களுக்காக குழு பயிற்சியை நடத்துகிறேன். இதுதவிர பெருநிறுவனங்களில் மன அழுத்தத்தை மேலாண்மை செய்வதற்கான நிகழ்ச்சிகளை நடத்துகிறேன். பெற்றோருக்கான ஆலோசனைகளையும் வழங்குகிறேன்.
மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்கள் அதில் இருந்து மீள்வதற்கான வழிகளைச் சொல்லுங்கள்?
மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சிறிது நேரமாவது வெயிலில் நிற்க வேண்டும். வைட்டமின் டி குறைபாடு மன அழுத்தத்துக்கு முக்கியமான காரணமாகும். காலை அல்லது மாலை நேர வெயில் உடலில் படுவது மிகவும் நல்லது. தினமும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஆழ்ந்து தூங்குவது அவசியம். அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த உணவைச் சாப்பிடுவதும் முக்கியமானது.
உங்களைச் சுற்றி நேர்மறை எண்ணம் கொண்ட மனிதர்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். எதுவும் செய்யாமல், எப்போதும் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதால் மன அழுத்தம் அதிகரிக்கும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். புதிய பொழுதுபோக்குகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் செயல்களில் ஈடுபட்டு, மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டாலே மனச்சோர்வில் இருந்து எளிதாக மீண்டு வரலாம்.