< Back
சாதனையாளர்
போராடினால் மட்டுமே சாதிக்க முடியும் - அம்ரிதா
சாதனையாளர்

போராடினால் மட்டுமே சாதிக்க முடியும் - அம்ரிதா

தினத்தந்தி
|
26 Feb 2023 7:00 AM IST

பாதிக்கப்பட்ட மனநிலையில் இருந்து வெளிவந்து போராடி வெற்றி பெற வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்க வேண்டும். ‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’ என்பதே எனது கருத்து. அதையே நானும் பின்பற்றினேன்.

யாரிப்பு நிறுவனங்களின் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான ஆலோசனை மற்றும் விளம்பர சேவைகளையும், நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தி நடத்தித்தரும் 'ஈவன்ட் பிளானிங்' போன்ற பணிகளையும் தனது நிறுவனத்தின் மூலம் செய்து வருகிறார்.

இவர் தனது பள்ளிப் பருவத்திலேயே, சக மாணவிகளுக்கு நடந்த பாலியல் சீண்டல்களை எதிர்த்து குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அம்ரிதாவுடன் நடந்த கலந்துரையாடல் இதோ...

"என்னுடைய குழந்தைப் பருவத்தை மற்றவர்களைப் போலவே மிகவும் மகிழ்ச்சியாக நண்பர்களுடன் செலவழித்தேன். அதுவரை வாழ்க்கையில் பெரிதாக எந்தவித துன்பத்தையும் நான் சந்தித்தது இல்லை. ஆனால் எனக்கு திருமணம் நடந்தபோதுதான், வாழ்க்கையைப் பற்றி மெல்ல மெல்ல புரிந்துக்கொள்ள ஆரம்பித்தேன்.

என்னுடைய 22 வயதில் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டேன். ஆனால், திருமண வாழ்க்கை நான் எதிர்பார்த்த அளவுக்கு மகிழ்ச்சியாக அமையவில்லை. 24 வயதிலேயே விவாகரத்து செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் நான் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தாலும், அதைத் தாண்டி வெளியே வர விரும்பினேன்.

அந்த நேரத்தில் என்னுடைய பெற்றோர் மற்றும் நண்பர்கள் எனக்கு ஆதரவாக இருந்தனர். பெற்றோருக்கு உறுதுணையாக இருக்க விரும்பி, மக்கள் தொடர்பு நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு போதுமான அனுபவம் பெற்ற பிறகு, சொந்தமாக நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதன்படி எனது நிறுவனத்தைத் தொடங்கி, இப்பொழுது வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்".

விவாகரத்தான பின்பு சொந்தமாகத் தொழில் தொடங்கிய அனுபவம் எப்படி இருந்தது?

என்னுடைய விவாகரத்து எனக்கு மிகுந்த மன வலியை உண்டாக்கியது. அதை மறப்பதற்காக எனது தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். நான் செய்தது மக்கள் தொடர்பு பணி என்பதால், நிறைய நபர்களை சந்திக்க நேர்ந்தது. ஒவ்வொருவரையும் சந்தித்து நிறுவனம் சம்பந்தமாக பேசும்போது, மனதில் ஒருவித பயம் இருந்தது. எனினும் அந்த பயத்தை எனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டேன்.

நான் சந்திக்கும் நபர்களிடம் எந்த காரணத்தைக் கொண்டும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியோ, எனது சொந்த விஷயங்களை பற்றியோ பகிர்ந்துகொள்ள மாட்டேன். அலுவல் சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டுமே பேசுவேன். இதனால் தர்மசங்கடமான, தவறான அணுகுமுறையை சந்திக்கும் சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது இல்லை.

சொந்த நிறுவனத்தை தொடங்கிய பின்பு உங்களிடம் ஏற்பட்ட மாற்றம் குறித்து சொல்லுங்கள்?

தொழில் தொடங்க விரும்பும் பெண்கள், தங்களது தோற்றம் மற்றும் செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும். தொழில் ரீதியான, நாகரிகமான ஆடைகளை அணிய கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் உங்களை ஒரு இளம்பெண்ணாக மட்டுமே பார்க்க இடம் கொடுக்கக் கூடாது. நீங்கள் ஒரு நிறுவனத்தை வழிநடத்தும் திறமை கொண்டவர் என்பதை நிரூபிக்கும் வகையில் உங்களின் பேச்சும், செயலும், ஆடை தேர்வும் இருக்க வேண்டும்.

இதை எனது அனுபவத்தின் மூலம் கற்றுக்கொண்டு, என்னை நானே மாற்றிக்கொண்டேன். சாதாரணமாக, ஒரு குடும்பத்தலைவியோ அல்லது இளம்பெண்ணோ சொந்தமாகத் தொழில் தொடங்குவது சுலபமாக இருக்கும். ஆனால், விவாகரத்தான பெண்ணோ அல்லது பாலியல் துன்புறுத்தல் போன்ற ஏதோ ஒரு பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்ணோ தொழில் தொடங்குவது சற்று சவாலான விஷயம் தான்.

இதை எதிர்கொள்வதற்கு தனியாக பயிற்சியோ அல்லது பயிற்சியாளரோ தேவை இல்லை. குளத்தில் தவறி விழுபவர்களுக்கு உயிர் போகும் நிலை வந்தவுடன், இரண்டு விஷயம் நினைவுக்கு வரும். ஒன்று, மூழ்கினால் இறந்து விடுவோம். மற்றொன்று, போராடினால் மேலே எழுவோம். இதில் போராட வேண்டும் என்று நினைப்பவர்களால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும்.

அதுபோலத்தான் பாதிக்கப்பட்ட மனநிலையில் இருந்து வெளிவந்து போராடி வெற்றி பெற வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்க வேண்டும். 'மனம் இருந்தால் மார்க்கம் உண்டு' என்பதே எனது கருத்து. அதையே நானும் பின்பற்றினேன்.

சமூகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உங்களின் ஆலோசனை என்ன?

நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், உங்களை சுற்றியுள்ளவர்கள் உங்களுக்கு ஆறுதலையோ, உத்வேகத்தையோ தரவில்லை என்றால், அவர்களை விட்டு விலகி இருங்கள்.

சில சமயங்களில் தனியாக இருக்கும்போதுதான் உலகம் எவ்வளவு பெரியது என்பது தெரியவரும். பல நல்ல மனிதர்களையும், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்மை வரவேற்கும் நபர்களையும் சந்திக்க முடியும். உலகில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளையும் உணர முடியும். எனவே பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மனநிலையை மாற்ற விரும்பினால், இடத்தையும், சுற்றியுள்ள சூழ்நிலையையும் மாற்றிக்கொள்வது அவசியம்.

பெற்றோருக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

இப்போதைய தலைமுறையினர், மிகவும் புத்திசாலிகளாக உள்ளனர். இளம் வயதினரிடம், பெற்றோர்கள் தோழமையுடன் பழக வேண்டும். அவர்களுக்கு போதுமான இடைவெளியை கொடுத்தால்தான், அவர்களால் எல்லா விஷயத்தையும் தைரியமாகவும், தயக்கமின்றியும் உங்களிடம் பகிர்ந்துகொள்ள முடியும்.

பிள்ளைகள் கூறுவதை கவனமுடன் கேட்டு, அவர்களை முழுமையாக நம்ப வேண்டும். அப்போதுதான் யாராவது அவர்களிடம் அத்துமீறி செயல்படும்போது, அவர்கள் உங்களிடம் தயங்காமல் சொல்வார்கள். இதன்மூலம், ஆபத்து ஏற்படாமல் குழந்தைகளைப் பாதுகாக்க முடியும்.

உங்களைப்போல சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?

தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் பெற விரும்பும் பெண்கள், முதலில் தனியாக வெளியே செல்ல பழகிக்கொள்ள வேண்டும். அவ்வாறு செல்லும்போது, புதிய மனிதர்களை சந்திக்க நேரிடும். அந்த நேரத்தில் உங்கள் மீதும், உங்களுடைய பொருட்கள் மீதும் கவனமாக இருக்க தோன்றும். 'உங்களுக்கு நீங்கள்தான் பாதுகாப்பு' என்ற உணர்வு ஏற்படும். இதுவே நாளடைவில் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும்.

நீங்கள் செய்யப்போகும் தொழிலைப் பற்றிய தெளிவான புரிதல் இருக்க வேண்டும். வாடிக்கையாளருடன் முறையான தகவல் பரிமாற்றம் செய்ய தெரிந்திருக்க வேண்டும். நேர்மறை எண்ணம் கொண்டவர்களுடன் பழக வேண்டும். போராடினால் மட்டுமே சாதிக்க முடியும்.

மேலும் செய்திகள்