நோயாளிகளுக்கு உதவிய புதிய கண்டுபிடிப்பு
|நீங்கள் எதை செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதனை மிகுந்த ஆர்வத்தோடும், முயற்சியோடும் தொடர்ந்து செய்யுங்கள். நிதி சார்ந்த விஷயத்தில் சுதந்திரமாக செயல்படுங்கள்.
பல்வேறு மருத்துவக் காரணங்களால் நடக்க முடியாமல் வீல்சேர் உதவியுடன் நடமாடும் நோயாளிகள் கழிவறையை உபயோகிப்பதற்கு சிரமப்படுவார்கள். இதனால் மற்றவர்களின் உதவியை நாட வேண்டிய நிலை இருக்கும். இதற்கு தீர்வாக புதிய வீல்சேர் அமைப்பை கண்டுபிடித்திருக்கிறார் கோயம்புத்தூர், பாப்பநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த ஸ்ருதி பாபு. அவருடன் ஒரு சந்திப்பு.
"நான் பயோமெடிக்கல் என்ஜினீயரிங் முடித்திருக்கிறேன். மருத்துவத்திற்கு தேவையான அனைத்து சாதனங்களையும் பயோமெடிக்கல் என்ஜினீயரிங் தேர்ச்சி பெற்றவர்களால் தயாரிக்க முடியும். அந்த வகையில், கல்லூரியில் படித்தபோது நண்பர்களுடன் சேர்ந்து நான் வடிவமைத்த வீல்சேரை, மருத்துவமனையில் வைத்து சோதனை செய்து கொண்டு இருந்தேன்.
அங்கே வயதான தந்தை ஒருவர் கழிவறை செல்வதற்கும், சுத்தம் செய்துகொள்வதற்கும், அவருடைய இரண்டு மகள்கள் உதவிக் கொண்டு இருந்தார்கள். மகள்களாக இருந்தாலுமே கூச்சம் காரணமாக அந்த தந்தை மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தார். இது போன்றவர்கள் சுயமரியாதையோடு, தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்று எண்ணினேன். அதற்கான முயற்சியின் பலனாக நான் வடிவமைத்ததே 'சகாய்த்தா' வீல்சேர்.
படுக்கையில் இருக்கும் நோயாளிகள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். அவர்களுக்கு உதவுவதற்கு எப்போதும் உதவியாளர்கள் அருகில் இருக்க வேண்டியதிருக்கும். படுக்கையில் இருந்து வீல்சேருக்கு அவர்களை மாற்றுவதற்கு ஒரு அமைப்பு தேவைப்படும். பின்னர் சாதாரண வீல்சேரில் இருந்து, கழிவறை உபயோகத்துக்கான வீல்சேருக்கு அவர்களை மாற்ற வேண்டியது இருக்கும்.
நான் வடிவமைத்த வீல் சேரை ஸ்ட்ரெச்சராக உபயோகித்து, படுக்கையில் இருந்து தானாகவே அதற்கு மாறி படுத்துக்கொள்ள முடியும். பின்பு அதை வீல்சேராக மாற்றிக்கொண்டு, அதனையே கழிவறை வீல்சேராகவும் பயன்படுத்த முடியும். அதற்கு வசதியாக இந்த வீல்சேரில் தண்ணீரை சேமிக்கும் தொட்டியும், கழிவை சேமிக்கும் தொட்டியும் உள்ளன. நோயாளிகள் தாங்களாகவே இதை உபயோகிக்க முடியும். பயன்படுத்திய பிறகு, நோயாளிக்கு எந்தவித தொந்தரவும் இல்லாமல் கழிவறையில் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்ய முடியும். இந்தக் கண்டுபிடிப்பிற்காக, மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் மூலம் எனக்கு உதவித்தொகை கிடைத்தது.
என்னுடைய தந்தை மெக்கானிக்கல் துறையைச் சார்ந்த தொழில் செய்து வந்தார். எனவே இந்த கண்டுபிடிப்புக்கு அவர் எனக்கு பெருமளவில் உதவி செய்தார். எனது குரு பி.அர். கிருஷ்ணகுமார் வீல் சேர் வடிவமைப்பதற்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
சோதனை முயற்சிகள் அனைத்தையும் கடந்து 2022-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் 'சகாய்த்தா' வீல் சேரை அறிமுகப்படுத்தினேன். அதற்கு பலரது பாராட்டும், நேர்மறையான விமர்சனங்களும் கிடைத்தன.
பெண்களுக்கு தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் அதிக ஆர்வம் உள்ளது. அதற்காக முயற்சி செய்வதற்கும், தங்களது எண்ணங்களை செயல்படுத்துவதற்கும் அவர்களுக்கு போதிய உதவி கிடைப்பது இல்லை என்பது எனது கருத்து. குடும்பத்தினரின் ஆதரவு, துறை சார்ந்த வல்லுனர்களின் வழிகாட்டுதல், போதுமான நிதி உதவி இவை மூன்றும் இருந்தால் பெண்கள் பெருமளவில் சாதிப்பார்கள்.
'நீங்கள் எதை செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதனை மிகுந்த ஆர்வத்தோடும், முயற்சியோடும் தொடர்ந்து செய்யுங்கள். நிதி சார்ந்த விஷயத்தில் சுதந்திரமாக செயல்படுங்கள்' என்று என்னைப் போன்ற பெண்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்" என்றார்.