< Back
சாதனையாளர்
இயற்கையோடு இணைந்து வாழ்வதே இன்பம் - ஜெயஸ்ரீ
சாதனையாளர்

இயற்கையோடு இணைந்து வாழ்வதே இன்பம் - ஜெயஸ்ரீ

தினத்தந்தி
|
20 Aug 2023 7:00 AM IST

இயற்கை வாழ்வியல் வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இயற்கை சார்ந்த உணவுமுறை அவசியம். இயற்கைச் சூழல், சுத்தமான காற்று, மூலிகைகள் பயன்பாடு, இயற்கை முறை நோய்த் தடுப்பு ஆகிய ரசாயனமில்லா வாழ்க்கையே இன்றைய தேவை.

"ஒரு விஷயத்தை அறிந்துகொள்வதில் பேரார்வம், நேரத்தை சரியாகத் திட்டமிடுதல், கடின உழைப்புடன் கூடிய புத்திசாலித்தனம் ஆகியவையே வெற்றிக்கு அடிப்படை" என்கிறார் ஜெயஸ்ரீ கிருஷ்ணன்.

சென்னையில், இயற்கை விளைபொருட்களுக்கான நிறுவனத்தை நடத்திவரும் ஜெயஸ்ரீ கிருஷ்ணன், யோகா, பிரானிக் ஹீலிங், கேம்லின் கலை, பாட்டு மற்றும் இசைக்கருவிகள் வாசிப்பு, உள்அலங்காரம், ஆடை வடிவமைப்பு என பன்முகத்திறன் பெற்று, பலருக்கு அவற்றுக்கான பயிற்சிகளையும் அளித்து வருகிறார். அவரை சந்தித்து உரையாடியதில் இருந்து…

உங்களைப் பற்றி சொல்லுங்கள்…

காஞ்சிபுரம் தான் எனது சொந்த ஊர். அப்பா சேஷாத்திரி, அம்மா பத்மா. அறிவியலில் இளங்கலை, நூலகம் மற்றும் தகவல் அறிவியலில் முதுகலை, வணிக நிர்வாகத்தில் முதுகலை ஆகிய பட்டப்படிப்புகளை படித்துள்ளேன். தனியார் நிறுவனம், பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம், தனியார் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றி இருக்கிறேன். தற்போது பல்துறை சார்ந்த பயிற்சிகளையும் அளித்து வருகிறேன். கணவர் கிருஷ்ணன் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். எங்களுக்கு ஸ்ரஷாங்கி, சுபாங்கி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

இயற்கை சார்ந்த வேளாண் தொழில் மீது ஈடுபாடு ஏற்பட்டது எப்படி?

இயற்கையை நேசிக்கும் நான் 'உணவே மருந்து' என்ற கோட்பாடு மீது நம்பிக்கை உடையவள். நஞ்சில்லா விவசாயம், நகர்ப்புற விவசாயம், வீடுதோறும் விவசாயம், வீட்டுக்கு ஒரு விவசாயி போன்ற கோட்பாடுகள் இன்றைய நவீன காலத்தில் ஆரோக்கியம் தரும் சுயசார்பு வாழ்க்கைக்கு அவசியம் என நம்புகிறேன்.

இயற்கை முறை விளைபொருட்களுக்கு உயர் ரக நிறுவனம் என்பது வெற்றிகரமான பிசினஸ் மாடலா?

தோட்டம் அமைப்பதற்கான பொருட்கள், அதற்கான வழிமுறைகள், குறைந்த இடத்தில் அதிக விளைச்சலுக்கு வழிகாட்டுதல் என எல்லாம் ஒரே இடத்தில் கிடைத்தால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. வீட்டுத் தோட்டம் அமைக்க நிறைய பொருட்கள் வேண்டும். அது விலை உயர்ந்த பொழுதுபோக்கு, வீண் செலவு என்பது மக்களின் பொதுவான மனநிலையாக உள்ளது. அதை மாற்றி, குடும்பத்தின் நல்வாழ்வுக்கான முதலீடுதான் வீட்டுத்தோட்டம் என்பதை புரியவைத்து, எளிய முறையில், குறைந்த செலவில் அதை அமைக்க முடியும் என்பதை எடுத்துச் சொல்கிறேன். இப்போது ஏராளமான பொதுமக்கள் எனது உதவியுடன் வீட்டுத் தோட்டம் அமைத்து பயன்பெற்று வருகிறார்கள்.

நீங்கள் அளித்து வரும் மற்ற பயிற்சிகள் பற்றி சொல்லுங்கள்..

மனித வாழ்வுக்கு பணத்தை விட முக்கியமானது உடல் ஆரோக்கியம். ஆனால் அந்த புரிதல் மக்களிடம் குறைவாகவே உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி அறிந்த நகர்ப்புற மக்களுக்கு விவசாயம், உணவு உற்பத்தி, வீட்டுத் தோட்டப் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. நகர்ப்புற வீடுகளில் உள்ள மேல்மாடி, பால்கனி, காலி இடங்கள் ஆகியவற்றில் சுலபமாக தோட்டம் அமைத்து காய்கறிகளை பொழுதுபோக்காகவே விளைவிக்கலாம் என்பதை எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். எளிதாக மாடி தோட்டம் அமைத்து தொழில் முனைவோர் ஆவதற்கான பயிற்சிகள், இயற்கை உர தயாரிப்பு, வேஸ்ட் மேனேஜ்மென்ட் பயிற்சி, மனநலப் பயிற்சி, தனித்திறன் பயிற்சி, உற்பத்தி, வணிகம், ஏற்றுமதி குறித்த ஆலோசனைகளையும் அளித்து வருகிறேன்.

பெண்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை காக்க என்ன செய்ய வேண்டும்?

இயற்கை வாழ்வியல் வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இயற்கை சார்ந்த உணவுமுறை அவசியம். இயற்கைச் சூழல், சுத்தமான காற்று, மூலிகைகள் பயன்பாடு, இயற்கை முறை நோய்த் தடுப்பு ஆகிய ரசாயனமில்லா வாழ்க்கையே இன்றைய தேவை. பிளாஸ்டிக், பாலித்தீன் பயன்பாட்டை முடிந்தவரை குறைப்பதும், தவிர்ப்பதும் மிக நல்லது.

நிறைய விஷயங்களை எப்படி கற்றுக் கொண்டீர்கள்? தனி நபராக ஒரே நேரத்தில் பல வேலைகளை எப்படி செய்ய முடிகிறது?

பிச்சை புகினும் கற்கை நன்றே, கற்றது கைமண் அளவு என்பதை நான் நம்புகிறேன். எனக்கு ஈடுபாடு ஏற்படும் எந்தவொரு துறையிலும் ஆர்வமாக ஈடுபட்டு கற்றுக்கொள்ள நான் தயங்கியதில்லை. இருப்பது ஒரு வாழ்க்கை, இன்றைய நாள் மட்டுமே நிதர்சனம் என்பதை உணர்ந்ததால், எதையும் தள்ளிப் போடாமல் செயல்படுகிறேன். சிறு வயதிலிருந்தே யோகா, ப்ரானிக் ஹீலிங், பேஷன் டிசைனிங், இன்டீரியர் டெக்கரேஷன், கைத்தொழில்களான, கைவினை பொருட்கள் தயாரிப்பு, மாணவர்களுக்கு டியூஷன் எடுப்பது ஆகியற்றை ஈடுபாட்டுடன் கற்றுக்கொண்டேன்.

தொழில்முனைவோராக வேண்டும் என்ற என் கனவு 25 வயதில் சாத்தியமானது. அந்த வயதில் 7 நபர்களுக்கு ஊதியம் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்தேன். 1000-க்கும் மேற்பட்ட மாணவர்களின் வெற்றிக்கு வழிகாட்டியாக உள்ளேன். சிறு வயதிலிருந்தே கல்வி, கலை, விளையாட்டு, இசை, ஓவியம், கவிதை, மேடைப்பேச்சு போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுவேன். அவற்றில் எனக்குக் கிடைத்த பயிற்சி மற்றும் அனுபவங்கள், எனது தொழில் நிர்வாகத்தை வெற்றிகரமாக நடத்த உதவியாக உள்ளது.

உங்களுக்குக் கிடைத்த விருதுகள் மற்றும் கவுரவங்கள் பற்றி...

உலகம் முழுவதும் 150 சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் வர்த்தக ரீதியான தொடர்பில் இருக்கிறேன். தொழில் முனைவோர் மேம்பாட்டுக்காக தேசிய அறக்கட்டளை வழங்கிய 'புகழ் பெற்ற வேளாண்மையாளர் விருது', அண்ணா பல்கலைக்கழகம் வழங்கிய 'பெண் தொழில் முனைவோர் கூட்டமைப்பு விருது', ஒரு லட்சம் தொகையுடன் சத்யபாமா பல்கலைக்கழகம் வழங்கிய 'சிறந்த இல்லத்தரசி விருது', டெல்லி இந்திரப்பிரஸ்தா பல்கலைக்கழகத்தின் 'இந்தியாவின் அடையாள ஆளுமை விருது', பனாரஸ் பல்கலைக்கழகம் வழங்கிய 'இந்திய முன்னோடி விருது' உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளேன். பெண்களுக்கு அதிகாரமளிக்கும் கூட்டமைப்பு, தேசிய தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் வாழ்நாள் உறுப்பினராகவும் இருந்து வருகிறேன்.

மேலும் செய்திகள்