< Back
சாதனையாளர்
கடல் கடந்து சேவை செய்யும் ஜாஸ்மின்
சாதனையாளர்

கடல் கடந்து சேவை செய்யும் ஜாஸ்மின்

தினத்தந்தி
|
12 Jun 2022 7:00 AM IST

சுற்றுச் சூழல் விழிப்புணர்வு, மரக்கன்று நடுதல், மின்சார சிக்கனம், பூமி தினம் குறித்த அருமை பெருமைகளை எடுத்துச் சொல்வது என அரசுடன் இணைந்து பல விஷயங்களைச் செய்கிறோம்.

மிழ்நாட்டைச் சேர்ந்த ஜாஸ்மின் தற்போது துபாயில் வசித்து வருகிறார். வெளிநாட்டில் வாழ்ந்தாலும், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதற்காக பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றிருக்கும் அவருடன் பேசினோம்.

"எனது சொந்த ஊர் மதுரை. எங்கள் குடும்பத்துக்கு தேனி, கம்பம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான உறவினர்கள், நண்பர்கள் உண்டு. அவர்களில் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை வருபவர்கள் எங்கள் வீட்டில் தான் தங்குவார்கள். அவர்களை பெற்றோர் நல்ல முறையில் கவனித்துக்கொள்வார்கள். மேலும், ஏழை எளிய மக்களுக்குத் திருமணம் செய்து வைப்பார்கள். ஆதரவற்றோருக்குத் தேவையான உதவிகளை செய்வார்கள். சிறுவயதில் இருந்தே அதைப் பார்த்து வளர்ந்த எனக்கும், சமூக சேவையின் மீது ஈடுபாடு ஏற்பட்டது.

20 வருடங்களுக்கு முன் திருமணமாகி, மதுரையிலிருந்து துபாயின் சார்ஜாவுக்குக் குடிபெயர்ந்தேன். பிள்ளைகள் ஓரளவு வளர்ந்துவிட்ட நிலையில், இனி கிடைக்கிற நேரத்தில், சமூக சேவை ஆர்வத்துக்கு உயிரூட்ட வேண்டும் என்று எண்ணினேன்.

சமூக சேவையில் ஆர்வமிக்க மாணவர்களை வாட்ஸ்ஆப் குழு உருவாக்கி இணைத்தேன். அவர்களின் பங்களிப்போடு, மது, புகைப்பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுத்தோம். பெண்களிடையே மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.

பின்பு முகநூல் மூலம் உலகம் முழுவதும் பல சமூக சேவை ஆர்வலர்களை ஒருங்கிணைத்தேன். எங்கள் குழுவில் இப்போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள்.

கொரோனா காலகட்டத்தில் நாளொன்றுக்கு நான்கு மணி நேரம் கூட தூங்க முடியாத அளவுக்கு இயங்கிக் கொண்டிருந்தோம். எல்லாமே மனநிறைவு தந்த சேவைகள்!

வெளிநாட்டில் செய்யும் அதே சேவைகளை மதுரை சுற்று வட்டார மக்களுக்கும் செய்கிறேன். ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல், மருத்துவ சிகிச்சைக்கு உதவுதல், புத்தக வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குதல், நூலகங்களுக்கு இலவசமாக புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தல் என பலவழிகளில் எங்கள் குழுவின் சேவை தொடர்கிறது. மதுரை மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வசிக்கிற ஏழை எளிய மக்களுக்கும் உதவுகிறோம்.

யாருக்கு உதவி தேவைப்படுகிறதோ, அவர்களுக்கு யாரால் உதவ முடிகிறதோ அவர்களுக்கிடையில் பாலமாக இருந்து தேவையான உதவி போய்ச் சேருவதைக் கண்காணிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அதனையே எங்களின் தனித்துவமாகச் சொல்லலாம்.

சுற்றுச் சூழல் விழிப்புணர்வு, மரக்கன்று நடுதல், மின்சார சிக்கனம், பூமி தினம் குறித்த அருமை பெருமைகளை எடுத்துச் சொல்வது என அரசுடன் இணைந்து பல விஷயங்களைச் செய்கிறோம்."

சமூக சேவை மூலம் கிடைத்த அங்கீகாரங்கள் என்ன?

எங்கள் தொண்டு அமைப்பை துபாயின் சார்ஜா அரசு கவுரவித்து 2015-ம் ஆண்டு சுற்றுச் சூழல் விருது வழங்கியது. பின்னர் ஜார்ஜா கல்வி விருது, துபாய் சேக் கபளதான் விருது, சிறந்த சமூக சேவகர் விருது என பல்வேறு விருதுகள் வாங்கியிருக்கிறோம்.

மேலும் செய்திகள்