உள்ளத்தின் உறுதியே உயர்வுக்கு வழி - ஹேமமாலினி
|நமது அழகை நிர்ணயிப்பது நிறம் கிடையாது. நமது எண்ணங்களும், குணாதிசயமும் தான் நம்மை அழகாக காட்டுகின்றன. அழகு சார்ந்த துறையில் இருப்பவர்கள் வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எந்த நிறமாக இருந்தாலும் சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் பாதுகாத்து மெருகேற்றினாலே போதுமானது.
"உங்களுக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டால், உங்களை காயப்படுத்தும் விமர்சனங்கள் எல்லாம் தானாகவே விலகிப் போகும்" என்கிறார் ஹேமமாலினி. தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூரில் பிறந்து வளர்ந்த இவர், இப்போது உலக அளவில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறார். பல் மருத்துவரான ஹேமமாலினி, மிஸஸ் யூனிவெர்ஸ் சின்சியாரிட்டி, மிஸஸ் தமிழ்நாடு, மிஸஸ் இந்தியா என பல்வேறு பட்டங்களை வென்றவர்.
பள்ளி, கல்லூரியில் பயின்ற காலத்தில் உருவ கேலியால் மனதளவில் பாதிக்கப்பட்டார் ஹேமமாலினி. 'தான் அழகானவர்' என்று இந்த உலகத்துக்கு காட்டவேண்டும் என்ற உறுதியோடு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை...
"நான் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். பள்ளியில் தமிழ் வழிக்கல்வி பயின்றேன். கல்லூரியில் பல் மருத்துவ படிப்பை தேர்ந்தெடுத்தேன். முழுவதும் தமிழ் வழிக்கல்வியில் படித்த எனக்கு, கல்லூரியில் ஆங்கில வழியில் கற்பது சிரமமாக இருந்தது. இதற்கிடையில் எனது தோற்றத்தால் ஏராளமான உருவ கேலி மற்றும் கிண்டலுக்கு உள்ளானேன். எவருடனும் பழகுவதற்கு பயந்தேன். கல்லூரியில் எனக்கென்று இருந்த ஒரு நண்பரும் விபத்தில் சிக்கி இறந்ததால், மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். அந்த நேரத்தில் எனது ஆசிரியர்கள்தான் எனக்கு ஆறுதலாக இருந்தனர்.
அதன் பின்பு காஸ்மெடாலஜி படிப்பில் சேர்ந்தேன். முதலில் என்னை நான் மெருகேற்றிக்கொள்ள நினைத்தேன். படிப்படியாக அதற்கான முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தேன். மேக்கப் செய்ய கற்றுக் கொண்டேன். விடாமுயற்சியுடன் ஆங்கில மொழியையும் கற்றுத் தேர்ந்தேன்.
2020-ம் ஆண்டு எனது கணவரின் துணையோடு காஸ்மெட்டிக் கிளினிக் ஆரம்பித்தேன். அதன் பின்பும் கூட எனக்குள் பெரிதாக தன்னம்பிக்கை வரவில்லை. அதனால் எனது தன்னம்பிக்கையை மேலும் அதிகரிக்க விரும்பினேன். அப்போதுதான் 'மிஸஸ் தமிழ்நாடு' அழகிப்போட்டி பற்றி அறிந்து கொண்டேன். அதில் கலந்துகொண்டு எனது திறமையை வெளிப்படுத்தினேன். இதேபோன்ற பல போட்டிகளில் கலந்து கொண்டதன் மூலம் பல அனுபவங்களைப் பெற்றேன். சில தோல்விகளையும் சந்தித்தேன். ஆனால் தொடர்ந்து முயற்சி செய்ததன் பலனாக 2021-ம் ஆண்டு 'மிஸஸ் இந்தியா' அழகிப் போட்டியில் தமிழ்நாடு சார்பாக கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தேன். அதில் 'மிஸஸ் இன்டெலிஜென்ஸ்' பட்டத்தையும் வென்றேன். தோல்வி அடையும்போது என்னை நானே ஊக்கப்படுத்திக் கொண்டேன். அது எனக்கு பெரிய பலத்தை தந்தது.
என்னை காயப்படுத்திய உருவ கேலி, கிண்டலைத் தடுக்க வேண்டும் என்ற முனைப்பில்தான் இந்த போட்டிகளில் கலந்து கொண்டேன். கேலி கிண்டல்களைப் பற்றிய விழிப்புணர்வையும், அதனால் மற்றவர்கள் மன தளவில் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றியும் வெளி உலகிற்கு எடுத்துச் சொல்ல முடியும் என்று நம்பினேன். அதை மக்கள் கேட்க வேண்டுமென்றால் எனக்கென்று ஒரு அடையாளம் வேண்டும் என்பதற்காகவே இந்தத் துறையை தேர்ந்தெடுத்தேன். அனைத்து நிறங்களும் அழகானவையே. சரும நிறத்தை அடிப்படையாகக் கொண்டு யாரும் தன்னம்பிக்கை இழக்கக் கூடாது என்பதையே வலியுறுத்தி வருகிறேன்.
பெண்கள் பொருளாதார ரீதியில் சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும் என்பது எனது எண்ணம். நமக்கு தேவையான பொருளை மற்றவரிடம் வாங்கித்தரும்படி கேட்கும்போது ஏற்படும் சங்கடமான சூழலை எளிதில் கடந்து வர முடியாது. குடும்பத்தின் ஆதரவு இருந்தாலும், ஒவ்வொரு போட்டியில் கலந்துகொள்ளும்போதும் உண்டாகும் செலவுகளை நான்தான் ஏற்றுக் கொண்டேன். அது எனக்கு பெரும் சவாலாகவே இருந்தது. அத்தனை சிரமங்களையும் தாண்டித்தான் வெற்றி பெற்றேன்.
நிற பாகுபாடு பற்றி உங்கள் கருத்து என்ன?
நானும் சிறுவயதில் நிற பாகுபாடு தொடர்பான கேலி கிண்டல்களை சந்தித்தேன். ஆனால் நமது அழகை நிர்ணயிப்பது நிறம் கிடையாது. நமது எண்ணங்களும், குணாதிசயமும் தான் நம்மை அழகாக காட்டுகின்றன. அழகு சார்ந்த துறையில் இருப்பவர்கள் வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எந்த நிறமாக இருந்தாலும் சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் பாதுகாத்து மெருகேற்றினாலே போதுமானது.
உருவ கேலி செய்பவர்கள் பற்றி உங்களின் கருத்து என்ன?
மற்றவர்களை உருவ கேலி செய்பவர்கள் முதலில் தங்களின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். மற்றவர்களின் உருவத்தையோ அல்லது உடையையோ பற்றி, அவர்களுக்குத் தெரியாமல் மற்றவர்களிடம் தரக்குறைவாக பேசுவதில்தான் உருவ கேலி ஆரம்பமாகிறது. அது நாளடைவில் வெளிப்படையான கேலிப்பேச்சாக உருவெடுக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அது மனதில் ஆறாத பெரும் காயமாகவே பதிந்துவிடுகிறது. எனது பள்ளிப் பருவத்தில் நான் எதிர்கொண்ட இத்தகைய சம்பவங்கள், இப்போதும் என் மனதில் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. எனவே இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
உருவ கேலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் சொல்ல நினைப்பது என்னவென்றால், "ஒரே இடத்தில் முடங்கி விடாமல் வெளியே வாருங்கள். நீங்கள் நினைப்பதை விட, நீங்கள் மிகவும் திறமைசாலிகள். நீங்கள் நினைப்பதை விட இன்னும் அதிகமான உயரத்திற்கும் உங்களால் செல்ல முடியும். அதற்கு தைரியமும், விடாமுயற்சியும் மட்டுமில்லாமல் நினைக்கும் காரியத்தை முடிக்கும் உறுதியும் வேண்டும்'' என்பதேயாகும்.
சமூகத்துக்கு நீங்கள் அளிக்கும் பங்களிப்பு என்ன?
தனியார் அமைப்பு ஒன்றுடன் சேர்ந்து புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். இதுவரை ஒரு மில்லியன் மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறேன். இது தவிர, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்தான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறேன்.