< Back
சாதனையாளர்
ஆரோக்கியமே உண்மையான அழகு - தமிழ்செல்வி
சாதனையாளர்

ஆரோக்கியமே உண்மையான அழகு - தமிழ்செல்வி

தினத்தந்தி
|
23 July 2023 7:00 AM IST

அழகுக்கலை துறையில் இருக்கும் பெண்கள், நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து நம்பிக்கையுடன் உண்மையாக உழைக்கும்போது, நிச்சயமாக முன்னேற முடியும்.

ப்பனை கலைஞராக தனது பயணத்தைத் தொடங்கி, விடாமுயற்சியாலும், ஈடுபாட்டாலும் அழகுக் கலைக்கான பயிற்சிப் பள்ளியை நடத்தி வருகிறார் தமிழ்செல்வி. கோயம்புத்தூர் மாவட்டம் கணபதி பகுதியைச் சேர்ந்த இவர், பல பெண்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறார். தனது அனுபவங்கள் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை இங்கே…

"குழந்தைப் பருவத்திலேயே தந்தையை இழந்த நான், தாயின் அரவணைப்பில்தான் வளர்ந்தேன். பொருளாதார மற்றும் சமூக அளவில் பல்வேறுசிரமங்களை சந்தித்த எனது தாய் கிருஷ்ணவேணி, தனக்கு கிடைத்த சிறு சிறு வேலைகளையும் தட்டிக் கழிக்காமல் செய்து வருமானம் ஈட்டினார். அவரது கடின உழைப்பைப் பார்த்து வளர்ந்த நானும், எனது சகோதரியும் நல்ல முறையில் படித்து பட்டம் பெற்றோம். எனக்கு ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது.

ஐ.டி. துறையில் பணிபுரிந்தபோதும், என்னுடைய மனம் அதில் நிறைவு காணவில்லை. சிறுவயதில் இருந்தே சொந்தமாக ஏதாவது ஒரு தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. அதேசமயம், அழகுக்கலை மற்றும் ஒப்பனை பற்றிய எந்தவொரு புரிதலும் அந்த நேரத்தில் எனக்கு இல்லை. எனது தோழியின் உறவினர் தன்னுடைய திருமணத்திற்கு ஒப்பனை செய்வதற்காக நியமித்த ஒப்பனைக் கலைஞருக்கு கட்டணமாக ரூ.1 லட்சம் கொடுத்தார் என்பதை கேள்விப்பட்டேன். அது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அதைப் பற்றி ஆராய்ந்ததில், இது ஒரு வளர்ந்து வரும் கலை என்பதும், பெண்களுக்கு ஏற்றது என்பதும் தெரியவந்தது.

எனவே, நானும் ஒப்பனைக் கலைஞராக வேண்டுமென்று விரும்பி சிறிது சிறிதாக பணத்தை சேமித்தேன். பின்னர் சிறந்த ஒப்பனைக் கலைஞரிடம் இதற்கான பயிற்சியையும் பெற்றேன். ஆரம்பத்தில், 'எனக்கு ஒப்பனை செய்ய வராது. என்னால் செய்ய முடியாது' என்று நினைத்தேன். ஆனால் முழு முயற்சியுடன் அதில் ஈடுபட்டபோது, எனக்குள் இருந்த திறமைகள் வெளிப்பட்டதை உணர்ந்தேன்".

சொந்தமாக தொழில் தொடங்கியதைப் பற்றி சொல்லுங்கள்?

நான் சேமித்து வைத்த தொகையைக் கொண்டு தான் சொந்தமாக தொழிலைத் தொடங்கினேன். அதன்மூலம் வந்த வருமானத்தைப் பயன்படுத்தி படிப்படியாக தொழிலை விரிவுபடுத்தினேன். இப்போது என்னிடம் முழுவதும் பெண்களே பணிபுரிகின்றனர். என்னிடம் பயிற்சி பெறும் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறேன்.

ஆரம்பத்தில் நீங்கள் சந்தித்த சவால்களை எவ்வாறு கடந்து வந்தீர்கள்?

நான் தொழில் தொடங்கிய காலகட்டத்தில் ஏராளமான சிரமங்களைச் சந்தித்தேன். குடும்பத்தில் ஆண் துணை இல்லாததால், அனைத்து பணிகளையும் நானே செய்ய வேண்டிய நிலை இருந்தது. வேலைகளின் பொருட்டு எந்த நேரத்திலும் வெளியில் செல்வது, குடும்ப பொறுப்புகள், தொழிலை மேம்படுத்துவது என்று அனைத்தையும் நானே பார்த்து வந்தேன்.

தொழில் ஆரம்பித்த புதிதில் நிறைய ஏமாற்றங்களைச் சந்தித்தேன். தெரிந்தவர்களின் வீட்டு விசேஷங்களுக்காக ஒப்பனை செய்யும்போது, பேசிய தொகையைவிட குறைத்துக் கொடுத்தார்கள். நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஒப்பனை வேலையை முடித்துவிட்டு நள்ளிரவு நேரத்தில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது. ஆனாலும் மனம் தளராமல் எல்லாவற்றையும் சமாளித்தேன்.

இந்தத் துறையில் பெண்களின் நிலை எவ்வாறு இருக்கிறது?

ஒப்பனை மற்றும் அழகுக்கலை துறையில், பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. ஆனால், குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்காத காரணத்தால் பல பெண்கள் இந்தத் துறையில் இருந்து விலகுவதைப் பார்த்திருக்கிறேன்.

ஒப்பனை வேலையை முடித்துவிட்டு நேரம் கடந்து வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை, திருமணமான பின்பு தொழிலைத் தொடர குடும்பத்தினர் ஆதரவு தராதது போன்ற காரணங்களால் பல பெண்கள் இந்தத் துறையில் தொடர்ந்து செயல்படுவது இல்லை.

குடும்பத்தினரிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி, அவர்களது ஆதரவைப் பெற ஒரே வழி, நமது திறமையை அவர்களிடம் நிரூபித்து, நம்மால் அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஒரு நல்ல வருமானத்தை ஈட்ட முடியும் என்பதை காட்டுவதுதான். ஆனால் இதற்கு குடும்பத்தினரும், சற்று கால அவகாசம் கொடுக்க வேண்டும்.

அழகுக்கலை துறையில் இருக்கும் பெண்கள், நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து நம்பிக்கையுடன் உண்மையாக உழைக்கும்போது, நிச்சயமாக முன்னேற முடியும்.

ஒரு ஒப்பனைக் கலைஞராக நீங்கள் எதை அழகு என்று நினைக்கிறீர்கள்?

என்னை பொறுத்தவரை, ஆண்-பெண் இருவருக்குமே அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம்தான் உண்மையான அழகு. மனதில் நேர்மறை எண்ணங்கள் நிரம்பி இருந்தால், முகம் இயல்பாகவே பிரகாசமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் அது சருமத்தில் பிரதிபலிக்கும்.

ஒப்பனை ஒருவரின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தைக் கொண்டு வரும் என்று நினைக்கிறீர்கள்?

ஒப்பனை, ஒருவருடைய தன்னம்பிக்கையை அதிகரித்து தோற்றத்தை மேம்படுத்தும். அது அவர்களின் செயல்பாடுகளில் எதிரொலிக்கும். கல்லூரியில் பயின்ற காலத்தில் கல்வி மட்டுமில்லாமல், கலை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு ஜொலிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அப்போது எனக்கு ஒப்பனையை பற்றிய தெளிவு கிடையாது. 'மேடையில் நான் மற்றவர் கண்களுக்கு எப்படித் தெரிவேன், ஒப்பனை இல்லாமல் எனது வெளித்தோற்றம் எப்படி இருக்கும்' என்ற தயக்கத்திலேயே நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்தேன்.

கல்லூரிப் படிப்பை முடித்து பணிக்குச் சென்றபோதுதான், எனக்கு வெளித்தோற்றம் பற்றிய புரிதல் ஏற்பட்டது. நான் வேலை பார்த்த நிறுவனத்தில் ஆளுமை மேம்பாடு பற்றிய வகுப்புகள் எடுத்தார்கள். அதில் கலந்துகொண்டபோதுதான் வெளித்தோற்றத்தின் முக்கியத்துவம் பற்றி புரிந்தது. வெளித்தோற்றமும், நம்மை அழகாகக் காட்டிக்கொள்வதும் முக்கியம் என்பதை உணர்ந்தேன்.

உங்களின் எதிர்கால கனவு என்ன?

தந்தையை இழந்த இரண்டு பெண் குழந்தைகளை எனது சொந்த வருமானத்தில் படிக்க வைத்து வருகிறேன். வருங்காலத்தில், இவ்வாறு பல குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆதரவற்ற பெண்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதும் எனது ஆசை. அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.

மேலும் செய்திகள்