< Back
சாதனையாளர்
சாதனையாளர்

தொழில் முனைவோர்களை உருவாக்கும் காதம்பரி

தினத்தந்தி
|
10 Jun 2022 7:00 AM IST

பெண்கள் முழு மூச்சாக, தான் தொடங்க விரும்பும் தொழிலுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட முடியாத நிலை உள்ளது. குறிப்பிட்ட வயது வரை, அனைத்திற்குமே பெண்கள் மற்றவரின் அனுமதி பெற வேண்டி இருக்கிறது.

ல பெண்கள் வேகத்தாலும், ஆர்வத்தாலும் தொழில் தொடங்கி விடுகிறார்கள். ஆனால், அதற்கு தேவையான அனுபவம் மற்றும் கையாளும் திறன் இல்லாததால், தடுமாற்றம் அடைந்து கடைசியில் அந்தத் தொழிலையே கைவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இவற்றை தவிர்க்கும் விதமாக, பெண்கள் எவ்வாறு தொழில் தொடங்க வேண்டும், எத்தகைய நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும், தொழிலில் ஏற்படும் சவால்களைத் தாண்டி, எவ்வாறு தொடர்ந்து நடத்த வேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார் காதம்பரி உமாபதி. அவரது பேட்டி...

பெண் தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டும் எண்ணம் எப்படி வந்தது?

நமது நாட்டில் பெண் தொழில் முனைவோர்கள் எண்ணிக்கைக் குறைவாகவே இருக்கிறது. அதை மாற்ற விரும்பினேன். ஆர்வமும், திறமையும் உள்ள அனைத்துப் பெண்களுமே தொழில் தொடங்க வேண்டும் என்பது எனது எண்ணம். அதன் விளைவாக, பெண் தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டும் நிறுவனத்தைத் தொடங்கினேன். அது நல்ல வரவேற்பையும் பெற்றது.

பெரும்பாலும் பெண்கள் ஆர்வத்துடன் தொழில் தொடங்குவார்கள். ஆனால் அந்தத் தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கேற்ற அனுபவம், திறன், நேரம் மற்றும் வழிகாட்டுதல் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அத்தகைய வழிகாட்டுதலை அளிப்பதே எனது நோக்கம்.

பெண்கள் தனியாக தொழில் தொடங்கும்போது ஏற்படக்கூடிய சவால்கள் என்ன? அவற்றை எவ்வாறு சமாளிக்கலாம்?

பெண்கள் முழு மூச்சாக, தான் தொடங்க விரும்பும் தொழிலுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட முடியாத நிலை உள்ளது. குறிப்பிட்ட வயது வரை, அனைத்திற்குமே பெண்கள் மற்றவரின் அனுமதி பெற வேண்டி இருக்கிறது. திருமணத்திற்குப் பின்னர் குடும்பத்தை ஏற்று நடத்த வேண்டியுள்ளதால், தொழில் தொடங்குவதற்கு போதுமான நேரமும், தொழில் அறிவை வளர்த்துக் கொள்வதற்கு தேவையான வாய்ப்புகளும் கிடைக்காமல் போய் விடுகிறது. இதனால் பெரும்பாலான பெண்கள் தன்னம்பிக்கையை இழக்கின்றனர்.

தற்போது வேகமாக பரவி வரும் 'பல் நிலை சந்தை' எனப்படும் பொருட்களை மறுவிற்பனை செய்யும் வியாபாரமும், பெண்களை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லாமல், குறைந்தபட்ச லாபமே போதும் என்ற எண்ணத்தை அவர்களுக்குள் விதைக்கிறது. இந்த எண்ணத்தின் விளைவாக, தனது நிறுவனத்தை ஒரு பெரிய பிராண்டாக மாற்ற வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல், குறுகிய வட்டத்திற்குள்ளாகவே அவர்களது தொழில் முடங்கி விடுகிறது.

இவற்றை எல்லாம் களைய பெண்கள் தன்னம் பிக்கையோடு போராட வேண்டும். தொழில் தொடங்குவதற்கு முன்பாக, அந்தத் தொழிலைப் பற்றிய முழு அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பெண்கள் பொருளாதார ரீதியாக தற்சார்பு பெற்றிருக்க வேண்டும் என நீங்கள் வலியுறுத்த காரணம்?

பெண்கள் பொருளாதார ரீதியாக எவரையும் சாராமலிருக்க வேண்டும் என்பதற்கு 2 காரணங்கள் உள்ளன. ஒன்று, ஒரு குடும்பத்தை அதன் தலைவர் மட்டுமே பொருளாதார ரீதியாக ஆதரிப்பவராக இருப்பார். எதிர்பாராதவிதமாக அவர் நஷ்டம் அடைந்தாலோ அல்லது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ, அந்த குடும்பமே சீர்குலைந்து விடும்.

அவ்வாறு நேரிடாமல் காப்பாற்றும் கலையை பெண்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதுதான் வருமானம் ஈட்டுவது என்ற தற்காப்புக் கலை. பணத்தைச் சம்பாதிப்பது மட்டுமின்றி, அதனை எவ்வாறு பயனுள்ள வகையில் பெருக்குவது, சேமிப்பது என்றும் பெண்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இரண்டாவதாக, குடும்பத்தில் பெண்களுக்கு ஏற்படும் மரியாதைக் குறைவு. திருமணத்திற்கு முன்பு வரை பெண்கள் பள்ளியிலும், கல்லூரியிலும் ஜொலித்தவராக இருந்திருப்பார்கள். ஆனால், அதன் பின்பு குடும்பத்தை மட்டுமே கவனிக்க நேரிடுவதால், மற்ற விஷயங்களில் அவர்களால் கவனம் செலுத்த முடிவதில்லை. இதனால் பெண்கள் சில நேரங்களில் குடும்பத்தில் ஓரங்கட்டப்படுவதுண்டு. அதன் காரணமாக, அவர்களுக்கு மனரீதியாக பிரச்சினைகள் ஏற்படலாம். இவற்றை தவிர்ப்பதற்கு பெண்கள் தங்களுக்கு விருப்பமான சிறிய தொழிலை தொடங்கி நடத்துவது நல்லது.

நஷ்டம் ஏற்பட்ட உடனே, தொழிலை கைவிட நினைப்பவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

மற்றவர்களின் வெற்றியை மட்டுமே பார்த்து, அதே எதிர்பார்ப்போடு தொழிலை தொடங்குபவர்கள், நஷ்டம் ஏற்பட்டாலோ அல்லது பிரச்சினை எழுந்தாலோ உடனே சோர்ந்து பின்வாங்கிவிடுவார்கள். மற்றவர்கள் அந்த வெற்றியை அடைய பல தோல்விகளை சந்தித்து இருக்கலாம். அந்த வெற்றிக்கான பாதை மாறுபட்டதாக இருக்கலாம். எனவே தோல்வியைக் கண்டு ஒருபோதும் மனம் தளரக்கூடாது. மாறாக, அதை அனுபவமாக கொண்டு முன்னேற வேண்டும்.

தொழில் முனைவோர்கள் பொதுவாக செய்யும் தவறுகள் என்ன? அவற்றை எவ்வாறு சரி செய்யலாம்?

அதிகப்படியான எதிர்பார்ப்பு, எதைப் பற்றியும் சிந்திக்காமல் மிகுந்த தைரியத்தோடு எடுக்கும் முடிவுகள் மற்றும் பணத்தை நிர்வகிக்கும் திறன் இல்லாதது இவை தான் இன்று பல தொழில்கள் தோல்வியடைய காரணம். எனவே எதிர்ப்பார்ப்புகளை குறைத்து தோல்விகளை சந்திக்க பழகிக்கொள்ளவேண்டும். எந்த ஒரு முடிவு எடுக்கும்போதும் அதன் பின்விளைவுகளை முன்கூட்டியே ஆராய வேண்டும். பணத்தை நிர்வகிக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

தொழில் முனைவோருக்கு நீங்கள் கூறும் அறிவுரை?

தொழிலை சிறிய முதலீட்டில் தொடங்கி படிப்படியான வளர்ச்சியை உருவாக்குங்கள். சிறந்த வழிகாட்டியை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். தொழில்ரீதியாக ஆதரவு அளிக்கும்வகையில், தொழில் முனைவோருக்கிடையே நல்ல நட்பு வட்டத்தை அமைத்துக்கொள்ளுங்கள். எப்பொழுதுமே கற்றலை மட்டும் விட்டு விடாதீர்கள். தொழில்நுட்ப ரீதியான அறிவை வளர்த்துக் கொண்டே இருங்கள். உங்களுக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி முன்னேறுங்கள்.

மேலும் செய்திகள்