சவால்களை சந்தித்தால் சாதிக்கலாம் - நிவேதா
|பைக் ஓட்ட வேண்டும் என்று விரும்பினால், அதற்கு மனதளவில் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். உடலை மேம்படுத்தினால், மனதளவில் தன்னம்பிக்கையும், அமைதியும் ஏற்படும்.
மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனை, சமூக ஆர்வலர், சாகசப் பயணி என பல தளங்களில் செயல்பட்டு வருகிறார் நிவேதா ஜெஸிகா. சென்னை தியாகராய நகர் பகுதியில் வசிக்கும் நிவேதா, லடாக், மேற்கு வங்கம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா உள்பட பல பகுதிகளுக்கு இருசக்கர வாகனத்திலேயே சாகசப் பயணம் சென்று வந்தவர். ரோடு ரேசிங், டிராக் ரேசிங் என மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றவர். அவரது பேட்டி.
"சிறுவயதில் எதற்கெடுத்தாலும் அதிகமாக பயப்படும் பெண்ணாகவே வளர்ந்தேன். பள்ளி படிப்பின் போது எனக்கு கைப்பந்து விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஆர்வத்துடன் அதில் கலந்துகொண்டு, என்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டேன். அதன்மூலம் எனது தன்னம்பிக்கை அதிகரித்தது. கொஞ்சம் கொஞ்சமாக பயம் விலகியது. அதன்பின்னர் குழு அணிவகுப்பில் என்னுடைய அணியை வழிநடத்தி, பள்ளி அளவில் முதல் இடத்தைப் பிடித்தேன். நம்மால் ஒரு அணியை வழிநடத்தி செல்ல முடியும் என்ற எண்ணம், எனக்குள் இருந்த தன்னம்பிக்கையை இரட்டிப்பாக்கியது.
பன்னிரெண்டாம் வகுப்பு படித்தபோது, சக மாணவர்களின் உதவியுடன் இருசக்கர வாகனத்தை ஓட்டக் கற்றுக்கொண்டேன். கல்லூரியில் படித்தபோது, குடும்பத்தின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு பகுதி நேர பணி செய்ய எண்ணினேன். மோட்டார் சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் இருந்ததால் அதையே பணியாக செய்யலாம் எனக் கருதி பைக் கிளப்பில் சேர்ந்து என் திறமையை வளர்த்துக்கொண்டேன்.
எனக்கு முதல் வாய்ப்பை, பிரபல இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் வழங்கியது. அதன் ஷோரூமிற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பைக் ரைடு ஒருங்கிணைப்பாளராக என்னுடைய பணியைத் தொடங்கினேன். அப்போதுதான் டிராக் பந்தயத்தில் கலந்துகொள்ளும் ஆர்வம் உண்டானது. ஆனால், குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையின் காரணமாக அதிக பணம் செலவழித்து அதில் பங்குபெற முடியவில்லை.
அந்த சமயத்தில்தான், உலக மோட்டோ சாதனையாளர் சரத்குமார் எனக்கு பயிற்சியாளராக அமைந்தார். அவரிடம் இருந்து பல நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். பிரபல மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் கோவாவில் நடைபெற்ற ரைடர் மேனியா 500 சி.சி. பிரிவில் தமிழ்நாட்டின் சார்பில் கலந்துகொண்டு இந்திய அளவில் மூன்றாம் இடத்தை பிடித்தேன்.
இளம் சாதனையாளர் விருது, கிளாஸ் சீலிங் விருது, இன்ஸ்பையரிங் வுமன் விருது, இன்ஸ்பையரிங் ரேசிங் சாம்பியன் விருது, பிசினஸ் ஐகானிக் விருது, ஐ வுமன் குளோபல் விருது, ஸ்ரீமதி சோனியா காந்தி விருது, ஷி தி வாரியர் விருது, டி.வி.எஸ். ஒன் மேக் சாம்பியன், நேஷனல் டிராக் ரேசிங் சாம்பியன், நேஷனல் மோட்டார் சைக்கிள் டிராக் ரேசிங் சாம்பியன் என இதுவரை பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்றிருக்கிறேன்.
என்னைப்போல பைக் ஓட்டுவதில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, பயிற்சி நிறுவனம் தொடங்கினேன். அதில் இந்தியா முழுவதிலும் இருந்து, இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்துள்ளனர். அவர்களுக்கு முறையாக பயிற்சி அளித்து வழிநடத்தி வருகிறேன்.
இளைஞர்களுக்கு பைக் ஓட்டுவதில் எப்போதுமே ஆர்வம் உண்டு. தற்போது இளம்பெண்களும் பைக் ஓட்டுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் செய்யும் தவறு என்ன வென்றால், தன்னை பெருமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடன் பைக் வாங்குவதுதான். அதிலும் சாகசம் என்ற பெயரில் இரண்டு கைகளையும் விட்டவாறு வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம் மற்றும் ஜாக்கெட் அணியாமல் பைக் ஓட்டுவது போன்ற செயல்களால், தாங்கள் பாதிக்கப்படுவதோடு மட்டுமில்லாமல், மற்றவர்களையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறார்கள்.
என்னுடைய மாணவர்களுக்கு நான் முதலில் கற்றுக் கொடுப்பது பாதுகாப்பான பயணத்தை தான். பைக் ஓட்ட வேண்டும் என்று விரும்பினால், அதற்கு மனதளவில் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். உடலை மேம்படுத்தினால், மனதளவில் தன்னம்பிக்கையும், அமைதியும் ஏற்படும்".
ஒரு பெண்ணாக இந்தத் துறையில் ஏதேனும் சவாலை எதிர்கொண்டு இருக்கிறீர்களா?
எல்லாத் துறைகளிலும் பெண்களுக்கு சவால்கள் இருக்கின்றன. மோட்டார் சைக்கிள் பந்தய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது பெண்கள் என்ற ரீதியில் ஒதுக்கப்படுவது, சம உரிமை இன்றி நடத்தப்படுவது போன்ற பல்வேறு இன்னல்களை சந்தித் திருக்கிறேன். 'அனைவரும் சமம்' என்ற பக்குவம் அனைவரின் மனதிலும் வர வேண்டும். நீயா? நானா? என்று கருதாமல், ஒரு குடும்பமாக பயணிக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும்.
சமூக ஆர்வலராக நீங்கள் செய்யும் பணிகள் என்ன?
ஒவ்வொரு மாதமும் நாங்கள் பைக் ரைடு நிகழ்ச்சி நடத்தும்போது, அந்தந்த ஊரில் இருக்கும் குழந்தைகளின் கல்விக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறோம். அவர்களுக்கு உணவு, உடைகளை வழங்கி வருகிறோம். மார்பக புற்றுநோய், தாய்ப்பாலின் முக்கியத்துவம், குழந்தைகள் கல்வி கற்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். குடும்ப சூழ்நிலையின் காரணமாக, திறமை இருந்தும் அதை வெளிக்காட்ட இயலாத மாணவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை கண்டறிந்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருகிறோம்.
உங்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு எப்படி உள்ளது?
எனது குடும்பத்தில் எனக்கு எல்லாமே என்னுடைய அம்மாதான். ஏழ்மையான குடும்பச் சூழ்நிலையில் வளர்ந்த எனக்கு, சிறு வயதில் இருந்தே பல வகையான வாழ்க்கை அனுபவங்களை கற்றுக் கொடுத்து வளர்த்தார். நான் பைக் ரேசிங் துறையில் சாதிக்க வேண்டும் என்று கூறியபோது எனக்கு ஊக்கம் அளித்தார். தற்போது வரை என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.
அவரது ஆதரவுடன் சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்வதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். என்னைப்போல் வளர்ந்துவரும் வீராங்கனைகளுக்கும் இலக்கை நிர்ணயித்து, தேசிய அளவில் ஒவ்வொரு போட்டிகளிலும் அவர்களை வெற்றி காணச் செய்யும் நோக்கத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன்.