அனுபவங்களே வாழ்க்கையை கற்றுக்கொடுக்கும் - சாகரிகா
|தினமும் நான் தூங்குவதற்கு முன்பு 5 முதல் 10 பக்கங்கள் வரை நல்ல புத்தகங்களையும், தொழிலில் சாதித்தவர்களின் வரலாற்றையும் படித்து வந்தேன்.
தனியார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, சந்தைப்படுத்துதல் ஆலோசகர், எழுத்தாளர், பங்குச் சந்தை நிபுணர் என பல துறைகளில் கலக்கி வருகிறார் திருச்சியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் சாகரிகா. அவருடன் ஒரு சுவாரசியமான சந்திப்பு.
"நான் நன்றாகப் படிக்கும் மாணவி. பத்தாம் வகுப்பு படித்தபோது என்னைச் சுற்றி இருப்பவர்கள் மற்ற மாணவர்களின் மதிப்பெண்களையும், நான் பெற்ற மதிப்பெண்களையும் ஒப்பிட்டு பேசினார்கள். என் எதிர்காலம் குறித்து பேசி பயத்தையும், அழுத்தத்தையும் கொடுத்தனர்.
பதினோராம் வகுப்பில் பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கும் நிலை வந்தபோது, எனக்கு மிகவும் குழப்பம் ஏற்பட்டது. எதிர்காலத்தில் நான் என்னவாக ஆக வேண்டும் என்ற தேர்வுநிலை, அங்கிருந்து தான் தொடங்குகிறது. எனவே, பாடப்பிரிவை கவனமுடன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அழுத்தம் உருவானது.
அப்பொழுது எனது பெற்றோரிடம் சென்று, "எனக்கு சிறிய இடைவெளி வேண்டும். அந்த இடைவெளியில் உலகத்தைப் பற்றி அதிகமாக அறிந்துகொள்ள விரும்புகிறேன். அதன் பின்னர் தெளிவான மனதுடன் பாடப்பிரிவை தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்" என்று கூறினேன்.
அதற்கு எனது பெற்றோர் ஒரே ஒரு நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டனர். நான் எடுத்த அந்த இடைவெளிக்கு ஏற்றதுபோல ஒரு கால அட்டவணை உருவாக்கி, அதை கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். அந்த அட்டவணைப்படி காலை 5 மணிக்கு எழுதல், தினசரி நாளிதழ் படித்தல், உடற்பயிற்சி செய்தல், வீடு வீடாகச் சென்று பொருட்கள் விற்பது மற்றும் நிறுவனங்களுக்கு இன்டெர்ன்ஷிப் செல்வது, விளையாடுவது, தினமும் மாலையில் ஏதாவது ஒரு பாடத்தை செய்முறை அறிவுடன் கற்பது என என்னுடைய நாட்கள் சென்றன.
தினமும் எனது பெற்றோர் என்னுடன் அமர்ந்து, 'அன்றைய நாள் எவ்வாறு கழிந்தது? அன்று எத்தகைய பயனுள்ள செயல்கள் செய்தேன்?' என்று பல்வேறு நிலைகளில் அலசி, அவற்றுக்கான மதிப்பெண்களும் வழங்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர்.
அதுமட்டுமில்லாமல் தினமும் நான் தூங்குவதற்கு முன்பு 5 முதல் 10 பக்கங்கள் வரை நல்ல புத்தகங்களையும், தொழிலில் சாதித்தவர்களின் வரலாற்றையும் படித்துவந்தேன்.
என் கையில் அப்பொழுது 'கைபேசி' போன்ற தொலைதொடர்பு சாதனங்கள் எதுவும் இல்லை. இவ்வாறு 1 வருடத்தில் 10 புத்தகங்கள் படித்தேன்.
இப்படியாக ஓராண்டு முடிந்த நிலையில், எனது 15-வது வயதில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய எனது பெற்றோர் முழுவதும் சுயநினைவை இழந்தனர். அந்த நேரத்தில் உதவிக்கும் யாரும் இல்லை. எனினும் நான் சுயமாக பெற்ற அனுபவம் மற்றும் மக்களிடம் பழகியதால் ஏற்பட்ட அனுபவம் கைகொடுத்தது. பதற்றப்படாமல் நிதானமாக அந்த சூழ்நிலையைக் கையாண்டு, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்கும்படி செய்தேன். பெற்றோர் நல்லபடியாக மீண்டனர். அந்த அனுபவம் எனக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்தது.
அதன் பின்னர் திருச்சியில் இருக்கும் பல்வேறு நிறுவனங்களை அணுகி அனுமதி பெற்று, ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒரு மாத காலம் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு, எனது திறமைகளையும், அனுபவத்தையும் வளர்த்துக்கொண்டேன்.
அடுத்து, பொருளாதார அறிவை நான் பெற வேண்டும் என்று தந்தை விரும்பினார். அதற்காக, எங்கள் வீட்டிற்கு அருகில் பெரியவர்கள் அனைவரும் கூடும் இடத்தில், பங்குச் சந்தை பற்றி பேசுபவர்களின் மத்தியில் என்னை தினமும் உட்காரச் செய்தார். ஆரம்பத்தில் எனக்கு எதுவுமே புரியவில்லை. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல புரிய ஆரம்பித்தது. பங்குச் சந்தை பற்றிய அனுபவமும் ஏற்பட்டது. எனவே, எனது தந்தை கொடுத்த ஒரு சிறு தொகையை முதலீடாக செலுத்தி லாபம் அடைய ஆரம்பித்தேன். சில நேரம் நஷ்டமும் ஏற்பட்டது. ஆனால், தொடர் அனுபவத்தால் பங்குச்சந்தையில் உள்ள நுணுக்கங்களை அறிந்து, அதன்படி செயலாற்றி லாபம் பெற ஆரம்பித்தேன்.
எனது சொந்த ஊரான திருச்சியைத் தாண்டி அதிக விஷயங்களை கற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன். எனவே இந்தியாவின் பெருநகரங்களில் நடக்கும் தொழில் சம்பந்தமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். அதன் மூலம் பல புதிய அனுபவங்கள் கிடைத்தது. ஆரம்பத்தில் பெற்றோருடன் சென்ற நான், நாளடைவில் தனியாக தைரியமாக செல்ல ஆரம்பித்தேன். பலருடன் தொழில்ரீதியான பழக்கமும் ஏற்பட்டது. எனது பெற்றோர் என்னை நம்பி கொடுத்த சுதந்திரத்தை நல்ல முறையில் பயன்படுத்தினேன்.
அவ்வாறு ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டபோது, பல புத்தகங்களை எழுதிய ஆசிரியர் கொடுத்த ஆலோசனைப்படி எனது ஒரு வருட அனுபவத்தை தொகுத்து, 'மை அன்ஸ்கூல்ட் இயர்' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டேன்.
இந்த ஒரு வருட அனுபவத்திற்குப் பிறகு பதினோராம் வகுப்பில் சேர்ந்தேன். ஒரு நாள் பள்ளி முடித்து வீடு திரும்பியபோது, 'எனது நண்பர் ஒருவர் அவர் சாப்பிட்ட துரித உணவுகளால் உடல் எடை கூடி, 21 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார் என்ற செய்தி வந்தது. அது என்னை மிகவும் பாதித்தது. துரித உணவு உடலுக்கு கெடுதல் என தெரிந்தும், சுவைக்காக மக்கள் அதனை விரும்பிச் சாப்பிடுவது வேதனையாக இருந்தது.
எனவே அதைப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக எனது உடலையே பரிசோதனைக்கு உட்படுத்தினேன். 30 நாட்கள் துரித உணவுகளை மட்டும் உணவாக எடுத்துக் கொண்டேன். இதனால் ஏற்படும் மாற்றத்தை ஒரு டாக்குமெண்ட்ரியாக வெளியிட்டேன்.
முகத்தில் முடி வளருதல், வயிற்றுக்கோளாறு, எடை கூடுதல், ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் எனக்கு ஏற்பட்டது. அதை மருத்துவர் மற்றும் விளையாட்டு வீரர்கள் முன்னிலையில் 'டாக்குமெண்ட்ரி' மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினேன்.
வெளி உலகில் கிடைத்த அனுபவத்தின் மூலம் என்னால் விரைவாக கற்றுக்கொள்ள முடிந்தது. அனுபவங்கள் என்னை உயர்த்தியது. புத்தக அறிவு மட்டுமின்றி, உலக அறிவையும், அனுபவத்தையும் பெற்றோர்கள் பிள்ளைகளுக்குத் தர வேண்டும்.
இப்பொழுது புதிய நிறுவனத்தை தொடங்கும் முனைப்பில் இருக்கிறேன். இன்னும் அதிகப்படியான நல்ல அனுபவங்களை பெற வேண்டும் என்பதே எனது இலக்கு" என்று கூறிய சாகரிகாவை வாழ்த்தி விடை பெற்றோம்.