உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் - சுதா
|எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காக ஒரு தொழிலை தொடங்க நினைக்கக்கூடாது. அதில் உங்களுக்கு எந்த அளவுக்கு நிபுணத்துவம் இருக்கிறது என்பதுதான் முக்கியம். அதைப் பொறுத்து தான் நீங்கள் செய்யும் தொழில் சிறப்படையும்.
"பெண்கள் மற்றவர்களை சார்ந்து இருக்காமல் தங்களுக்கு தெரிந்த துறையில் தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் தலை நிமிர்ந்து வாழ முடியும்" என்கிறார் சுதா. நான்குக்கும் மேற்பட்ட துறைகளில் பட்டம் பெற்றுள்ள இவர், பல்வேறு துறைகள் சார்ந்து பலருக்கும் பயிற்சி அளித்து வருகிறார். கடந்த பத்து ஆண்டுகளாக தனது பணி அனுபவத்தில் 'இன்னோவேட்டிவ் அண்டு ஆக்டிவ் டீச்சிங் அவார்டு', 'எக்ஸலன்ஸ் இன் எஜுகேஷன் அவார்டு' உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். அவருடன் ஒரு சந்திப்பு.
"ஈரோடு பழைய பாளையம் எனது பூர்வீகம். பெற்றோர்: பூபதி-சிவசங்கரி. இயற்பியலில் இளங்கலைப் பட்டமும், கணினிப் பயன்பாட்டில் முதுகலைப் பட்டமும், மாண்டிசோரி பாட முறை மற்றும் குழந்தைகள் உளவியலில் ஆசிரியர் பயிற்சியையும் முடித்திருக்கிறேன். 'டிரெய்ன் தி டிரெயினர் பார் ஆன்ட்ரோபிரனர்' என்ற பட்டயப்படிப்பை முடித்து அரசு சான்றிதழும் பெற்றிருக்கிறேன். இணையம் வாயிலாக, பல துறைகளில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். திருமணத்திற்குப் பிறகு சென்னை தாம்பரத்தில் வசித்து வருகிறேன். என்னுடைய கணவர் கவியரசு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றுகிறார். எங்களுடைய இரண்டு மகள்களும் பள்ளியில் படித்து வருகிறார்கள்.
நீங்கள் செய்து வரும் பணிகள் பற்றி சொல்லுங்கள்?
டேட்டா புரோகிராமர், மாண்டிசோரி ஆசிரியை, ஆங்கில உச்சரிப்பு பயிற்சியாளர், கையெழுத்துப் பயிற்சியாளர், ஓவிய ஆசிரியை என பல தளங்களில் பணியாற்றி வருகிறேன். குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் இடையிலான புரிதல் குறித்து வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை அளிக்கிறேன். இணையதளம் வாயிலாக பெண்களுக்கு பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகளை நடத்துகிறேன். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உரைகளை வழங்குகிறேன். குழந்தை வளர்ப்பு பற்றி பெற்றோருக்கு ஆலோசனை அளித்து வருகிறேன்.
கடந்த 10 வருடங்களாக ஓவிய ஆசிரியையாகவும் பணியாற்றி வருகிறேன். ஓவியம் வரைவதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு இருப்பதால், எத்தகைய சூழலையும் ஓவியத்தின் மூலமாக என்னால் வெளிப்படுத்த முடியும். ஓவியம் வரைவதில் உள்ள பல்வேறு முறைகளை குழந்தைகளுக்கு பயிற்றுவித்து வருகிறேன். பென்சில் ஷேடிங், ஆயில் பேஸ்டல், பிரீ ஹேண்ட் டிராயிங் அதாவது எந்த உபகரணங்களையும் பயன்படுத்தாமல் அறிவியல் சார்ந்த படங்களை வரைவது எப்படி? என்பதையும் கற்றுக் கொடுக்கிறேன்.
பெண்களின் முன்னேற்றத்திற்காக நீங்கள் செய்து வரும் பணிகள் பற்றி சொல்லுங்கள்?
பெண்கள் எந்தத் துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைத்தாலும், அதில் உள்ள நுணுக்கங்களை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். சிறு, குறு தொழிலில் ஈடுபடும் பெண்கள், அதில் முன்னேற்றம் அடைய டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் உள்ள நுணுக்கங்களைப் பற்றி சொல்லிக் கொடுக்கிறேன். இதன் மூலம் அவர்கள் வீட்டில் இருந்தே தங்களின் தொழிலை விரிவுபடுத்திக்கொள்கின்றனர். இணையம் வழியாக தொழில் செய்யும் பெண்கள், அதில் சந்திக்கும் பிரச்சினைகளை வெற்றிகரமாக தீர்ப்பது குறித்தும் கற்றுக் கொடுக்கிறேன். இது தொடர்பான பல வீடியோக்களையும் என்னுடைய இணையதளத்தில் பதிவிட்டு இருக்கிறேன். பெண்களுக்கு சுயதொழில், குழந்தை வளர்ப்பு, சுய முன்னேற்றம் தொடர்பான ஆலோசனைகளை வழங்குகிறேன். பெண்கள் குழுக்களுக்கு வழிகாட்டியாகவும் செயல்படுகிறேன். பெண்கள் சுயமாக தொழில் தொடங்குவதற்கு தேவையான ஆலோசனைகளையும் அளித்து வருகிறேன்.
மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உங்களின் பங்களிப்பு என்ன?
பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ஆங்கில எழுத்துக்களின் ஒலி உச்சரிப்பை கற்றுக் கொடுத்தேன். இதன் மூலம் அவர்கள் சுலபமாக ஆங்கிலம் கற்றுக் கொண்டனர். என்னுடைய வகுப்புகளில் மாணவர்களின் புரிதலுக்கு ஏற்ப, அவர்களே சிந்தித்துப் படிக்கும் வகையில் பயிற்சி அளிக்கிறேன்.
நீங்கள் செய்ததில் உங்களால் மறக்க முடியாத பணிகள் குறித்து சொல்லுங்கள்?
குழந்தைகளின் உளவியல் தொடர்பான படிப்பை முடித்திருந்ததால், அதை அடிப்படையாகக் கொண்டு ஒரு அகாடமி தொடங்கினேன். அதன்மூலம், கொரோனா காலத்தில் வீட்டில் தனித்திருந்த குழந்தைகளுக்கு கவுன்சிலிங் அளித்தேன். பெற்றோர்களுக்கும், கொரோனா சமயத்தில் குழந்தைகளைக் கையாள்வது எப்படி என்பது குறித்து பயிற்சி அளித்தேன். இதன்மூலம் பலரும் பயன் பெற்றார்கள். இது எனக்கு அதிக மன நிறைவை கொடுத்தது.
தொழில் முனைவோருக்குப் பயிற்சி அளிக்கும் போது நீங்கள் சந்தித்த சவால்கள் என்ன?
சில தொழில் முனைவோருக்கு, அவர்களுடைய திறன் என்ன என்பதே தெரியாமல் இருக்கும். அத்தகையோரின் திறனை கண்டறிந்து வெளிக்கொண்டு வந்து அவர்களை பிரகாசிக்க வைக்க வேண்டும். ஒரு பயிற்சியாளராக அதுதான் எனக்கான சவாலாக இருக்கிறது. இதுவரை நான் அதை வெற்றிகரமாகச் செய்துள்ளேன். ஒவ்வொருவருக்கும் பொருத்தமான தொழிலைத் தேர்வு செய்வது எப்படி? அதில் சந்திக்கும் சவால்களை பயமின்றி எதிர்கொள்வது எப்படி? என்பதை கற்றுக் கொடுக்கிறேன்.
தொழில் முனைவோருக்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?
எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காக ஒரு தொழிலை தொடங்க நினைக்கக்கூடாது. அதில் உங்களுக்கு எந்த அளவுக்கு நிபுணத்துவம் இருக்கிறது என்பதுதான் முக்கியம். அதைப் பொறுத்து தான் நீங்கள் செய்யும் தொழில் சிறப்படையும்.
பெற்றோருக்கு உங்களுடைய ஆலோசனை என்ன?
குழந்தைகள் தங்களின் ஆளுமை குறைபாடுகளை களைவதற்கும், நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்வதற்கும் பெற்றோர் உதவ வேண்டும். பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு விலை உயர்ந்த ஆடைகள் மற்றும் பொருட்களை வாங்கிக் கொடுப்பது, பயிற்சி வகுப்புகளுக்கு கட்டணம் செலுத்துவது மட்டுமே தங்கள் கடமை என்று நினைக்கிறார்கள். பிள்ளைகள் நல்ல பண்புகளை உள்வாங்கி, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ உதவுவதே பெற்றோரின் கடமையாகும்.
குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவது, அவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்பது, அவர்களின் விருப்பங்களை அறிந்து கொண்டு செயல்படுவது போன்றவை குழந்தை வளர்ப்பில் முக்கியமானதாகும்.