< Back
உலக செய்திகள்
ஸ்பெயின் நாட்டில் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 158 ஆக உயர்வு
உலக செய்திகள்

ஸ்பெயின் நாட்டில் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 158 ஆக உயர்வு

தினத்தந்தி
|
1 Nov 2024 9:04 AM IST

ஸ்பெயின் நாட்டில் ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை எட்டு மணிநேரத்தில் பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாட்ரிட்,

ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. ஸ்பெயினில் உள்ள போரியோடேலா டோரெ மற்றும் வேலன்சியா உள்ளிட்ட நகரங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகள் உள்ளிட்டவை வெள்ளத்தில் மூழ்கின. மேலும் இடி, மின்னலுடன் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வரலாறு காணாத அளவில் வெள்ளம் ஏற்பட்டு அங்குள்ள முக்கிய நகரங்களை நீரில் மூழ்கடித்தது.

சுமார் 5 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும் தண்டவாளங்களை வெள்ளம் மூழ்கடித்து சேறும், சகதியுமாக ஆனதால் ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது.

இந்த வெள்ளத்தில் சிக்கி மட்டும் நேற்று முன்தினம் 51 பேர் உயிரிழந்து இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் துரிதமாக நடந்தன. இதில் மேலும் 44 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. வலென்சியாவில் குறைந்தது 92 பேர் உயிரிழந்துள்ளனர்.

வலென்சியாவின் மேற்கில் உள்ள காஸ்டில்லா-லா மன்சாவில் மேலும் இரண்டு உயிரிழப்புகளும், மலாகாவில் ஒரு உயிரிழப்பும் பதிவாகியுள்ளன. மலாகாவில் 71 வயதான பிரிட்டிஷ் நபர் தனது வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதன்மூலம் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஏராளமானோர் மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அவர்களும் பலியாகி இருக்கலாம் என்றும், அவ்வாறு நிகழ்ந்திருந்தால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே கடும் வெள்ளப்பெருக்கால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், குடிநீர் கிடைக்காமலும் ஏராளமானோர் அவதியடைந்துள்ளனர். வெள்ளப்பெருக்கின்போது மக்கள் வீட்டுக் கூரைகளின் மீது ஏறியும், மரங்களைக் கட்டி அணைத்தும் உயிர் தப்பி உள்ளனர்.

இந்த சம்பவம் ஸ்பெயின் நாட்டையே உலுக்கி சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அந்த நாடு முழுவதும் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க அந்நாட்டு அதிபர் பெட்ரோ சான்செஸ் உத்தரவிட்டுள்ளார். இந்த வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடு, உடமைகள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அந்நாட்டு அரசு செய்து வருகிறது.

2021 ம் ஆண்டில், ஜெர்மனியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் குறைந்தது 185 பேர் உயிரிழந்தனர். அதற்கு முன், 1970 இல் ருமேனியாவில் 209 பேர் உயிரிழந்தனர். 1973ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் 150 பேர் உயிரிழந்தனர்.1967 இல் போர்ச்சுகலில் ஏற்பட்ட வெள்ளத்தில் கிட்டத்தட்ட 500 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு ஸ்பெயினில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ள பாதிப்பு இதுவாகும். ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை எட்டு மணிநேரத்தில் பெய்துள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை வெடிப்புகளுக்கு காலநிலை மாற்றம் காரணமா?

புவி வெப்பநிலை அதிகரிப்பது, மேகங்கள் அதிக மழையைக் கொண்டு செல்ல வழிவகுத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்புரட்சி தொடங்கியதில் இருந்து உலகம் ஏற்கெனவே சுமார் 1.1 டிகிரி செல்சியஸ் வெப்பமடைந்துள்ளது. உலக நாடுகள், தங்கள் கரிம வெளியீட்டை விரைந்து குறைக்காவிட்டால், வெப்பநிலை மேலும் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்