காமன்வெல்த்: பேட்மிண்டனில் இந்தியாவுக்கு 3-வது தங்கம் - சாத்விக், சிராக் இணை தங்கம் வென்றனர்
|டேபிள் டென்னிஸ் இறுதி போட்டியில் இந்தியாவின் சரத் கமல் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
பர்மிங்காம்,
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 28 ஆம் தேதி மிக பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் தொடங்கிய இந்த தொடர் நாளை நிறைவு விழாவுடன் முடிவடைகிறது. இன்றுடன் விளையாட்டு போட்டிகள் நிறைவு பெறுகின்றன.
விளையாட்டு போட்டிகளின் இறுதி நாளான இன்று இந்தியா பேட்மிண்டன் அசத்தியது. குறிப்பாக இந்தியாவின் பி.வி. சிந்து மற்றும் இளம் வீரர் லக்சயா சென் ஒற்றையர் பிரிவில் தங்க பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ந்தனர்.
இதை தொடர்ந்து நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி/ சிராக் ஷெட்டி இணை இங்கிலாந்தின் பென் லேன்-சீன் வெண்டி இணையை எதிர்கொண்டனர்.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய இணை 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளனர். அதே போல் டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் இந்தியாவின் சரத் கமல் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இன்று நடந்த இறுதி போட்டியில் அவர் 11-13, 11-7, 11-2, 11-6, 11-7 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் லியாம் பிட்ச்போர்டை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இதை தவிர இந்தியா 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கங்களை வென்றுள்ளது.