காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டி : நூலிழையில் பதக்கத்தை தவறவிட்ட அஜய் சிங்
|இந்தியாவின் பதக்க நம்பிக்கையாக விளங்கிய அஜய் சிங் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டுள்ளார்.
பர்மிங்காம்,
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது.
4-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இதுவரை இன்றைய நாளின் சிறப்பம்சமாக லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி பதக்கத்தை உறுதி செய்து வரலாறு படைத்தது. அதே போல் ஜூடோவில் சுசிலா தேவி பதக்கத்தை உறுதி செய்தார்.
அதே போல் பளுதூக்குதலில் இந்தியாவின் பதக்க நம்பிக்கையாக விளங்கிய அஜய் சிங் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டுள்ளார். ஆண்களுக்கான 81 கிலோ எடை பிரிவில் அவர் மொத்தம் 319 கிலோ (143 கிலோ+176 கிலோ) எடையை தூக்கி 4-வது இடம் பிடித்து பதக்கத்தை தவறவிட்டார்.
3-வது இடம் பிடித்த கனடாவின் நிக்கோலஸ் வச்சோன் அஜய் சிங்கை விட 1 கிலோ அதிகமாக, 320 கிலோ (140 கிலோ+180 கிலோ) தூக்கி வெண்கல பதக்கம் வென்றார்.