காமன்வெல்த்: 3 தங்கம் உட்பட 4 பதக்கங்களை வென்று தமிழக வீரர் சரத் கமல் சாதனை
|இந்த காமன்வெல்த் போட்டியில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் 3 தங்கம் உட்பட 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
பர்மிங்காம்,
72 நாடுகள் பங்கேற்ற 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் 28 ஆம் தேதி மிக பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் தொடங்கியது. விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் இந்த தொடரின் நிறைவு விழா ஆகஸ்ட் 9 ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 12.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா மொத்தமாக 22 தங்கம்,16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்து நிறைவு செய்துள்ளது.
இந்த காமன்வெல்த் போட்டியில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் 3 தங்கம் உட்பட 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். 40 வயதாகும் சரத் கமல் தற்போதும் கூட இளம் வீரர்களுக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் விளையாடி வருகிறார்.
இந்த காமன்வெல்த் போட்டியில் அவர் முதலில் டேபிள் டென்னிஸ் ஆடவர் குழு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். அதைத் தொடர்ந்து ஆண்கள் இரட்டையர் பிரிவில் சக தமிழக வீரர் சத்யன் உடன் இணைந்து வெள்ளியும், கலப்பு இரட்டையர் பிரிவில் ஸ்ரீஜா அகுலா-வுடன் இணைந்து மற்றொரு தங்கமும் வென்றார்.
இதை தொடர்ந்து இன்று இறுதியாக நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் அவர் மீண்டும் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 4 பதக்கம் வென்று சாதனை படைத்த அவருக்கு விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.