காமன்வெல்த் போட்டியில் சாதித்து தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
|காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
காமன்வெல்த் போட்டி
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இரவில் கண்கவர் இசைநிகழ்ச்சி, வாணவேடிக்கையுடன் நடந்த நிறைவு விழாவில் இந்திய அணிக்கு 4 பதக்கம் வென்ற தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் ஆகியோர் தலைமை தாங்கி தேசிய கொடியேந்தி அணிவகுத்து சென்றனர்.
12 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா சார்பில் 210 வீரர், வீராங்கனைகள் களம் இறங்கினர். 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என்று மொத்தம் 61 பதக்கங்களை குவித்து இந்தியா பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது. மல்யுத்தத்தில் மட்டும் நமது அணியினர் 12 பதக்கங்களை அள்ளினர்.
தாயகம் திரும்பினர்
இந்த நிலையில் காமன்வெல்த் போட்டியில் சாதித்த இந்திய வீரர், வீராங்கனைகள் தனித்தனி குழுவாக தாயகம் திரும்பி வருகிறார்கள். நேற்று முன்தினம் காலையும், நேற்றும் டெல்லி விமான நிலையம் வந்தடைந்த மல்யுத்தம், குத்துச்சண்டை, தடகளம், ஜூடோ உள்ளிட்ட வீரர், வீராங்கனைகளுக்கு மாலை அணிவித்து மேளம்-தாளம் முழங்க இந்திய விளையாட்டு ஆணைய நிர்வாகிகள், ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர்கள் சொந்த ஊருக்கு சென்றனர்.
ஜூடோ விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்ற டெல்லியைச் சேர்ந்த துலிகா மானை அவரது குடும்பத்தினர், நண்பர்கள் நேரில் வந்து வரவேற்றனர். அவர் கூறுகையில், 'நான் வெள்ளிப்பதக்கம் வெல்ல வேண்டும் என்று விரும்பவில்லை. ஆனாலும் அது கிடைத்தது திருப்தி தான். அடுத்த முறை நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வேன். இந்த போட்டியில் ஒட்டுமொத்த அணியினரின் செயல்பாடு சிறப்பாக இருந்தது' என்றார்.
பெண்களுக்கான குத்துச்சண்டையில் 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் கைப்பற்றிய அரியானாவைச் சோந்த நீது கங்காஸ் கூறும் போது, 'தங்கம் வென்றதும் தேசம் முழுவதும் இருந்து எனக்கு வாழ்த்துகள் குவிந்தன. எதிர்காலத்திலும் இதே போன்று வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். நாட்டுக்காக தொடர்ந்து பதக்கம் வெல்வேன். எனக்காக எனது கிராமத்தினர் பிரார்த்தனை செய்தனர். அவர்களுடன் வெற்றியை கொண்டாடுவேன்' என்றார்.