< Back
விமர்சனம்
Kanguva -Review
விமர்சனம்

'கங்குவா' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்

தினத்தந்தி
|
15 Nov 2024 6:58 AM IST

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து சூர்யா நடிப்பில் 'கங்குவா' படம் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பாபி தியோல் வில்லனாக நடித்திருக்கிறார்.

நடிகர் சூர்யாவின் திரை வாழ்க்கையில், பெரிய படமாக உருவாகியுள்ள இப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து சூர்யா நடிப்பில் ஒரு பிரம்மாண்டமான படம் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், கங்குவா படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

கோவா காவல் துறையிடம் பணம் வாங்கிக் கொண்டு குற்றவாளிகளை ரகசியமாகப் கண்டுபிடித்துத் தரும் 'பவுன்ட்டி ஹண்டராக' இருக்கிறார்கள் பிரான்சிஸ் சூர்யாவும், திஷா பதானியும். அப்போது சூர்யாவிடம் ஒரு சிறுவன் தஞ்சமடைகிறான். அந்த சிறுவன் மூலம் சூர்யாவுக்கு கடந்த காலம் பற்றிய நினைவு வருகிறது. அப்போது அந்த சிறுவனை கடத்தி செல்ல ஒரு கும்பல் வருகிறது.

பிறகு கதை 1070-ம் ஆண்டுக்கு நகர்கிறது. அங்கு ஆதிக்குடியை சேர்ந்த கங்குவா என்ற சூர்யாவின் தீவை ஆள வேண்டும் என நினைக்கும் ரோமானியர்களிடம் இருந்து ஆபத்து வருகிறது. ரோமானியர்கள் மட்டுமின்றி மற்றோரு இனக்குழுவின் தலைவரான உதிரனிடம் (பாபி தியோல்) இருந்தும் ஆபத்து வருகிறது.

இந்த போரில் வெல்வது யார், இரண்டு காலகட்டத்துக்கும் என்ன சம்பந்தம்?, சிறுவனை கடத்த வந்த கும்பல் யார்? என்பது மீதி கதை. கங்குவா, பிரான்சிஸ் என இரு வேடங்களில் வருகிறார் சூர்யா. போர் வீரனாக ஆக்ரோஷம் பொங்கச் சண்டை செய்வது, எதற்கும் அஞ்சா நெஞ்சனாக நிற்பது எனத் தன் உடல்மொழியால் மிரட்டுகிறார். ஸ்டைலிஷ் சூர்யாவின் சாகசக் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது.

சில காட்சிகளில் மட்டுமே வரும் கதாநாயகி திஷா பதானி பாடல் காட்சியில் கவர்ச்சி விருந்து படைக்கிறார். உதிரனாக வரும் பாபி தியோல் தோற்றத்திலும், நடிப்பிலும் வித்தியாசம் காண்பித்துள்ளார்.

சில காட்சிகள் என்றாலும் தன்னுடைய சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளார் நட்ராஜ். யோகிபாபு, ரெடின்கிங்ஸ்லி, கருணாஸ், போஸ் வெங்கட், கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார் என அனைவரும் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

திடீர் வரவாக வரும் கார்த்தி அடுத்த பாகத்துக்கு லீட் கொடுத்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை படத்திற்கு பலமாகவும் பலவீனமாவும் அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் வெற்றியை பிரமாண்ட படங்களுக்கு பயன்படுத்தலாம். தான் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர் என கங்குவாவில் நிரூபித்திருக்கிறார்.

மனிதம் போற்றுவோம் என்ற ஒற்றை வார்த்தையை வைத்து பிரமாண்டத்துடன் வியக்க வைக்கும் அற்புதமான படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குனர் சிவா.


மேலும் செய்திகள்