விதார்த் நடித்துள்ள 'லாந்தர்' திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியானது!
|விதார்த் நடிப்பில் வெளியான ‘லாந்தர்’ திரைப்படம் இன்று ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளது.
சென்னை,
பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா படத்தின் கதாநாயகனாக அறிமுகமானார் விதார்த். கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்ற விதார்த் பல்வேறு துணை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மணிகண்டன் இயக்கிய குற்றமே தண்டனை , சுரேஷ் சங்கையா இயக்கிய ஒரு கிடாயின் கருணை மனு , ராதா மோகன் இயக்கிய காற்றின் மொழி , நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கிய குரங்கு பொம்மை கடந்த ஆண்டு வெளியான டெவில் உள்ளிட்ட படங்கள் விதார்த்தின் திறமையை வெளிப்படுத்தும் படங்களாக அமைந்தன.
நடிகர் விதார்த் நடிப்பில் 2024-ம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் டெவில் திரைப்படம் வெளியானது. அடுத்ததாக விதார்த் நடித்திருந்த அஞ்சாமை திரைப்படம் கடந்த ஜூன் 7-ம் தேதி திரையிடப்பட்டு பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்றது. இந்த படம் நீட் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருந்தது. அதன் பின்னர் விதார்த் நடிப்பில் லாந்தர் எனும் திரைப்படம் கடந்த ஜூன் 21-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தை ராட்சசன் பட இயக்குனர் ராம்குமாரின் உதவி இயக்குனர் சாஜி சலீம் இயக்கியிருந்தார்.
இதில் விதார்த் தவிர ஸ்வேதா டோரத்தி, விபின், சகானா, கஜராஜ், பசுபதி ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தை எம் சினிமா புரொடக்சன் நிறுவனம் தயாரிக்க பிரவீன் இசையமைத்திருந்தார் ஞான சவுந்தர் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். இந்த படத்தில் விதார்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். கிரைம் திரில்லர் கதை களத்தில் வெளியான தற்போது இந்த படம் இன்று சிம்பிளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.