'பிருந்தா' வெப் தொடரில் நடிக்க இதுதான் காரணம் - நடிகை திரிஷா
|'பிருந்தா' வெப் தொடரில் நடிக்க கதைதான் காரணம் என்று நடிகை திரிஷா கூறியுள்ளார்.
மும்பை,
தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் திரிஷா. இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். தொடர்ந்து திரிஷா 'லியோ' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இந்நிலையில், மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது, இவர் சூர்யா மனோஜ் வாங்கலா இயக்கிய தெலுங்கு மொழி வெப் தொடரில் நடித்துள்ளர். இது இந்தி, கன்னடம், மலையாளம், தமிழ், மராத்தி மற்றும் பெங்காலி மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. இந்த தொடருக்கு 'பிருந்தா' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திரஜித் சுகுமாரன், ஜெய பிரகாஷ், மணி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, ராகேந்து மவுலி உள்ளிட்டோர் இந்த தொடரில் நடித்துள்ளனர். ஆஷிஷ் தயாரித்த இந்தத் தொடருக்கு, சக்தி காந்த் கார்த்திக் இசையமைத்துள்ளார்.
தற்போது, நடிகை திரிஷா, 'பிருந்தா' வெப் தொடரில் முதன்முதலில் அறிமுகமாக முக்கிய காரணம் என்ன என்பதை கூறியுள்ளார். அதாவது, "நான் விமானத்தில் இருந்தபோது, இந்த கதையின் முதல் சில பக்கங்களை படித்தேன். இந்த கதையின் முதல் தொடரே என்னை வெகுவாக ஈர்த்தது. முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிப்பது பெரிய ஈர்ப்பாக இருந்தது" என்று கூறியுள்ளார்.
இந்த வெப் தொடர் சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.