'தலைவெட்டியான் பாளையம்' வெப் தொடரின் டிரெய்லர் வெளியீடு
|‘தலைவெட்டியான் பாளையம்’ வெப் தொடரின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'பஞ்சாயத்' வெப் தொடரின் தமிழ் ரீமேக்கான 'தலைவெட்டியான் பாளையம்' செப்டம்பர் 20-ம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி.யில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 8 எபிசோடுகள் அடங்கிய இந்தத் தொடரில் அபிஷேக் குமார், சேத்தன், தேவதர்ஷினி, நியாதி, ஆனந்த் சாமி, பால் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பால குமாரன் முருகேசன் எழுத்தில், நாகா இயக்கியுள்ள இந்தத் தொடரை தி வைரல் பீவர் நிறுவனம் தயாரித்துள்ளது.
தனது சொந்த ஊரிலிருந்து வந்து தலைவெட்டியான் பாளையம் என்ற கிராமத்தில் பணிக்கு சேர்கிறார் அபிஷேக் குமார். அந்த ஊர் கிராமவாசிகளுக்கும், அபிஷேக் குமாருக்கும் இடையில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையாக காட்சிப்படுத்துகிறது இந்தத் தொடர். ரீமேக் ஆகியுள்ள இந்த சீரிஸை ஆனந்தபுரத்து வீடு புகழ் நாகா இயக்கியுள்ளார்.
'தலைவெட்டியான் பாளையம்' வெப் தொடரின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. தலைவெட்டியான் பாளையம் பஞ்சாயத்தில் ஊராட்சி மன்ற செயலாளராக பணிக்கு சேர்கிறார் சித்தார்த். கிராமத்தின் நடவடிக்கைகள் அவருக்கு புதிதாக இருக்க மாட்டிக் கொண்டு முழிக்கிறார். கிராம பஞ்சாயத்து சேர்மனாக தேவதர்ஷினியும், அவரது கணவர் சேத்தன் கிராமத்து மனிதர்களின் சாயலில் கவனம் ஈர்க்கின்றனர். எல்லாமே புதிதாகவும், பிடிக்காத வகையிலும் இருக்க வேலையை விட பார்க்கிறார் சித்தார்த். பின்னணியில் ஷான் ரோல்டனின் இசை அவரது துயரத்தை இசையாக கடத்துகிறது. டிரெய்லரை பார்க்கும்போது பார்வையாளர்களுக்கு நகைச்சுவையான சீரிஸை கொடுக்க படக்குழு நினைத்துள்ளது தெரிகிறது.