ஓ.டி.டியில் உள்ளது...ஆனால் வெளிநாடுகளில் ரிலீஸாக தடை விதிக்கப்பட்ட தென்னிந்திய படங்கள்
|இந்தியாவை தவிர்த்து மற்ற நாடுகளில் வெளியாக சில படங்களுக்கு தடை உள்ளது.
சென்னை,
சில படங்களுக்கு இந்தியாவை தவிர்த்து மற்ற நாடுகளில் வெளியாக தடை விதிக்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், சமீபத்தில், மெகா ஸ்டார் மம்முட்டி நடித்த 'காதல்: தி கோர்' திரைப்படத்தில் ஓரினச்சேர்க்கை உள்ளடக்கம் இருந்ததால் இரண்டு அரபு நாடுகளில் தடை விதிக்கப்பட்டது. இதுமட்டுமில்லாமல் விஜய்யின் 'பீஸ்ட்' மற்றும் மோகன்லாலின் 'மான்ஸ்டர்' போன்ற படங்களும் சில நாடுகளில் வெளியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் வெளியாகாமல் இருந்த 5 தென்னிந்திய படங்களை தற்போது காணலாம்.
1. சீதா ராமம்
துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான 'சீதா ராமம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இருப்பினும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, குவைத், கத்தார், பஹ்ரைன் மற்றும் ஓமன் உட்பட பல நாடுகளில் இப்படம் வெளியாக தடை விதிக்கப்பட்டது. இப்படம் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் உள்ளது.
2. பீஸ்ட்
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்த இப்படம் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றது. இருந்தபோதும், குவைத் மற்றும் கத்தார் நாடுகளில் வெளியாகவில்லை. இப்படம் தற்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் உள்ளது.
3. குருப்
ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் மற்றும் சோபிதா துலிபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் குருப். பல மொழிகளில் வெளியான இப்படம் மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் சில காரணத்தால் குவைத் நாட்டில் வெளியாக தடை விதிக்கப்பட்டது. இப்படம் தற்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் உள்ளது.
4. விஸ்வரூபம்
கடந்த 2013-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் விஸ்வரூபம். தெலுங்கில் விஸ்வரூபம் எனும் அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் இந்தியில் விஸ்வரூப் எனும் பெயரிலும் வெளியானது. இப்படத்தை எழுதி-இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் கமல் ஹாசன் நடித்திருந்தார். சில காரணங்களால் இப்படம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் வெளியாக தடை விதிக்கப்பட்டது. இப்படம் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் உள்ளது.
5. 'காதல்: தி கோர்'
ஜியோ பேபி இயக்கத்தில் நடிகர் மம்முட்டி, நடிகை ஜோதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் 'காதல்: தி கோர்'. இப்படத்தில் ஓரினச்சேர்க்கை உள்ளடக்கம் இருந்ததால் கத்தார் மற்றும் குவைத் நாடுகளில் வெளியாக தடை விதிக்கப்பட்டது. இப்படம் தற்போது அமேசான் பிரைம் தளத்தில் உள்ளது.