'மிஸ்டர் பச்சன்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
|ரவி தேஜா நடித்துள்ள 'மிஸ்டர் பச்சன்' திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
சென்னை,
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரவி தேஜா. 'மாஸ் மகாராஜா' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் தனது திரையுலக வாழ்க்கையை 'கர்தவ்யம்' படத்தின் மூலம் தொடங்கினார். பின்னர், 'பெங்கால் டைகர், ராஜா தி கிரேட், வால்டேர் வீரய்யா' போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
தற்போது இவர் ஹரிஸ் ஷங்கர் இயக்கிய 'மிஸ்டர் பச்சன்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சுபலேகா சுதாகர் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் கடந்த மாதம் 15-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர் மத்தியில் கலவையான விமர்சனங்களையே இப்படம் பெற்றது. தற்போது இந்த படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வருகிற 12-ந் தேதி வெளியாக உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.