< Back
ஓ.டி.டி.
இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்
ஓ.டி.டி.

இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்

தினத்தந்தி
|
20 March 2025 10:40 AM IST

நாளை ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ள படங்கள் குறித்த ஒரு பார்வை.

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், நாளை (21.03.2025) எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

'டிராகன்'

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம் 'டிராகன்'. இந்த படத்தில் கயாடு லோஹர், அனுபமா, விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் சுமார் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'

தனுஷ் இயக்கத்தில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான படம் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'. இப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இளைஞர்களின் காதல், உறவுமுறை, திருமணம் பற்றிய கதைக்களம் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை அமேசான் பிரைம் மற்றம் சிம்பிலி சவுத் ஆகிய ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளது.

'பேபி & பேபி'

அறிமுக இயக்குனர் பிரதாப் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள படம் 'பேபி & பேபி'. இப்படத்தில் ஜெய் உடன் சத்யராஜ் மற்றும் யோகி பாபு நடித்துள்ளனர். பிரக்யா நாக்ரா மற்றும் சாய் தன்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். குழந்தையை மையப்படுத்தி அழகான பேமிலி எண்டர்டெயினராக இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

'ரிங் ரிங்'

'ரிங் ரிங்' என்பது சக்திவேல் செல்வகுமார் எழுதி இயக்கிய திரைப்படமாகும். இப்படத்தில் விவேக் பிரசன்னா மற்றும் சாக்சி அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் ஜமுனா, அர்ஜுனன் மற்றும் டேனியல் அன்னி போப் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். செல்போனை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் நாளை சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

'பணி'

மலையாள பிரபல நடிகரும் இயக்குனரும் ஜோஜு ஜார்ஜ் இயக்கியுள்ள படம் 'பணி'. நாடோடிகள் அபிநயா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஷ்ணு விஜய், சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்கள். கேரளாவின் திருச்சூரில் இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே நடக்கும் பழிவாங்கும் கதையை மையமாக வைத்து இந்த திரில்லர் படம் உருவாகியுள்ளது. இப்படம் நாளை சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

'ஸ்கை போர்ஸ்'

பிஷேக் அனில் கபூர் மற்றும் சந்தீப் கெவ்லானி ஆகியோரால் இயக்கப்பட்டுள்ள படம் 'ஸ்கை போர்ஸ்'. இந்த படத்தில் நிம்ரத் கவுர் , சாரா அலி கான் மற்றும் வீர் பஹாரியா ஆகியோர் அக்சய் குமாருடன் இணைந்து நடித்துள்ளனர். இந்தியாவின் முதல் மற்றும் மிகக் கொடிய வான்வழித் தாக்குதலை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் நாளை அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

'பயர்'

அறிமுக இயக்குனரான சதீஷ் குமார் இயக்கத்தில் பிக்பாஸ் சீசன் 4 பிரபலம் பாலாஜி முருகதாஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'பயர்'. இந்த படத்தில் சந்தினி தமிழரசன், ரச்சிதா மஹாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி சான், சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் 2020-ம் ஆண்டு நடந்த நாகர்கோவில் காசி என்ற வழக்கை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் நாளை டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

'தினசரி'

ஜி.சங்கர் இயக்கத்தில் ரூகாந்த நடிப்பில் காதலர் தினத்தில் வெளியான படம் 'தினசரி'. இந்தப் படத்தினை அமெரிக்காவைச் சேர்ந்த தயாரிப்பாளரான சிந்தியா தயாரித்தது மட்டும் இல்லாமல், படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இதில் பிரேம்ஜி, எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ், மீரா கிருஷ்ணன், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் நாளை டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் செய்திகள்