ஓ.டி.டி.யில் வெளியாகும் மம்முட்டியின் 'டர்போ' திரைப்படம்
|மம்முட்டி நடித்துள்ள 'டர்போ' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி ஓ.டி.டி.யில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்முட்டி. 'விசா' திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். 'மவுனம் சம்மதம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். கடந்த ஆண்டு வெளியான நண்பகல் நேரத்து மயக்கம், கண்ணூர் ஸ்குவாட் மற்றும் சில மாதங்களுக்கு முன் பிரம்மயுகம் போன்ற வித்தியாசமான கதைக்களமுடைய படங்களைத் தேடி நடித்து வருகிறார். பிரம்மயுகம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
அதைத் தொடர்ந்து 'டர்போ' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை வைசாக் இயக்கி இருக்கிறார். வைசாக் இதற்கு முன் மோகன்லாலை வைத்து புலிமுருகன் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார். படத்தின் கதையை மிதுன் மானுவேல் தாமஸ் எழுதியுள்ளார். சுனில், அஞ்சனா ஜெய பிரகாஷ், கபீர்,சித்திக், திலிஷ் போதன் போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.மம்முட்டி ஒரு மாஸ் ஹீரோவாக இப்படத்தில் நடித்துள்ளார். கன்னட நடிகரான ராஜ் பி ஷெட்டி வில்லனாக நடித்துள்ளார். கிறிஸ்டோ சேவியர் இசையமைக்க இந்தப் படத்தை மம்முட்டியே தயாரித்துள்ளார். மிதுன் இமானுவேல் தாமஸ் படத்துக்கு திரைக்கதை எழுதி இருக்கிறார்.
இப்படம் கடந்த மே 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் ரூ.70 கோடி வசூலை பெற்றது.
தற்போது இப்படம் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி சோனி லைவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.