இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்
|இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் குறித்த ஒரு பார்வை.
திரையரங்குகளில் வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளது. ஆனாலும், ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
'ஜாலியோ ஜிம்கானா'
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'ஜாலியோ ஜிம்கானா'. இதில் அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். மேலும் திரைப்படத்தில் யாஷிகா ஆனந்த், கிங்ஸ்லி, யோகிபாபு, அபிராமி, ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்தப்படத்தினை ட்ரான்ஸ் இந்தியா மீடியா & என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் கடந்த 30-ந் தேதி ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'கங்குவா'
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இப்படம் கடந்த 31-ந் தேதி சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'ரீயூனியன்'
'ரீயூனியன்' என்பது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மாளிகையில் நடைப்பெற்ற கொலையை அடையாளம் காணும் வகையில் உருவாக்கப்பட்ட மர்மம் மற்றும் நகைச்சுவை கலந்த படமாகும். இந்த படத்தில் நினா டோப்ரேவ், ஜேமி சுங், சேஸ் க்ராபோர்ட், பில்லி மேக்னுசென் ஆகியோர் நடித்துள்ளனர். ஒரே பள்ளியில் படித்த நண்பர்கள் மீண்டும் இணைந்து, அந்த கொலையை செய்த கொலைகாரனை கண்டுபிடிக்கும் விதமாக இப்படம் அமைந்துள்ளது. இந்நிலையில் இப்படம் நேற்று 1-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'தி பிளாக் ஸ்விண்ட்லர்'
ஜப்பானின் 'மங்கா' தொடரை அடிப்படையாகக் கொண்டு, குரோசாகி என்ற பெயரிடப்பட்ட கதாபாத்திரம், தனது குடும்பத்தை ஏமாற்றி மோசடி செய்பவர்களை பழிவாங்கும் கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் கடந்த 1-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'உப்பு புளி காரம்'
எம்.ரமேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகிய தொடர் 'உப்பு புளி காரம்'. இத்தொடரில் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, பரினா, தீபக் பரமேஷ் மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கனா காணும் காலங்கள் மற்றும் ஹார்ட் பீட் இணையத் தொடர்களை அடுத்து ஒளிபரப்பான உப்பு, புளி, காரம் தொடரும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த தொடரின் இறுதி எபிசோடு இன்று (2-ந் தேதி) டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'ஆல் வி இமேஜின் அஸ் லைட்'
பாயல் கபாடியாவின் இயக்கத்தில், கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான படம் "ஆல் வி இமேஜின் அஸ் லைட்". இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கடம், ஹிருது ஹாரூன், அஸீஸ் நெடுமங்காட் மற்றும் டிண்டுமால் ஜோசப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டியிட்டு இரண்டாவது உயரிய விருதான 'கிராண்ட் பிரிக்ஸ்' விருதை வென்றது. இந்த நிலையில் இப்படம் நாளை (3-ந் தேதி) டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
'ஆரகன்'
இயக்குனர் அருண் கே ஆர் இயக்கத்தில் மைக்கேல் தங்கதுரை, கவிப்ரியா என பலர் நடித்திருக்கும் திரைப்படம் 'ஆரகன்'. இப்படத்தினை தயாரிப்பாளர் ஹரிகரன் பஞ்சலிங்கம் தயாரிக்க, இசையமைப்பாளர் விவேக் இசையமைத்துள்ளார். புராண கதையை மையமாக வைத்து உருவாகி உள்ளது. நாளை (3-ந் தேதி) ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.