< Back
ஓ.டி.டி.
இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்
ஓ.டி.டி.

இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்

தினத்தந்தி
|
12 Dec 2024 12:45 PM IST

இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் குறித்த ஒரு பார்வை.

திரையரங்குகளில் வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளது. ஆனாலும், ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

'தங்கலான்'

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான படம் 'தங்கலான்'. இதில், விக்ரமுடன், பார்வதி திருவொத்து, மாளவிகா மோகனன், பசுபதி டேனியல் கால்டகிரோன், ஆனந்த் சாமி, ஹரி கிருஷ்ணன், உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்தனர். கோலார் தங்கச் சுரங்கத்தில் தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமுதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக இது அமைந்துள்ளது. இப்படம் கடந்த 10-ந் தேதி (நேற்று முன்தினம்) நெட்பிளிக்ஸ் மற்றும் சோனி லிவ் ஓ.டி.டி தளங்களில் வெளியானது.

'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்'

டாம் ஹார்டி நடிப்பில் கெல்லி மார்செல் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான படம் 'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்'. இப்படத்தில் பிரம்மாண்டமான கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த பாகத்துடன் இப்படம் முடிவடைகிறது. இந்தப் படத்தில் சிவெடெல் எஜியோபர், ஜூனோ டெம்பிள், ரைஸ் இபான்ஸ், பெக்கி லு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் உலகளவில் 400 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படம் கடந்த 10-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

'கனகராஜ்யம்'

இந்திரன்ஸ் மற்றும் முரளி கோபி நடிப்பில் 'கனகராஜ்யம்' என்ற மலையாள திரில்லர் உருவாகியுள்ளது. இந்தப் படத்தினை சாகர் ஹரி இயக்கியுள்ளார். 'சத்யம் மாதமே போதிக்கூ' மற்றும் 'வீகம்' படங்களுக்குப் பிறகு சாகர் இயக்கியுள்ள மூன்றாவது படம் இது. ஸ்ரீஜித் ரவி, கோட்டயம் ரமேஷ், உன்னி ராஜ், அச்சுதானந்தன், ஜேம்ஸ் எலியா, ரம்யா சுரேஷ் மற்றும் அதிரா படேல் ஆகியோரும் நடித்துள்ளனர். ஆச்சரியங்களும், திருப்பங்களும் நிறைந்த இப்படம் கடந்த 10-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

'ரெட் ஒன்'

ஜேக் கஸ்டன் இயக்கிய 'ரெட் ஒன்' ஆக்சன்-காமெடி கதைக்களத்தில் உருவாகி உள்ளது. இந்த படத்தில் டுவைன் ஜான்சன் மற்றும் கிறிஸ் எவன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் விடுமுறை நாட்களை மையமாக வைத்து அதிரடி திருப்பத்தில் உருவாகி உள்ளது. இந்த நிலையில் இப்படம் இன்று (12-ந் தேதி) அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

'கதா இன்னுவாரே'

மலையாளத் திரைப்படத்தில் நான்கு வித்தியாசமான கதைகளை ஒன்றாக சேர்த்து உருவாகி இருக்கும் படம் 'கதா இன்னுவரே'. இப்படம் பல்வேறு சவால்களை சமாளித்து ஒன்றாக இருப்பதற்கு ஒரு தம்பதியின் போராட்டத்தை சித்தரிக்கிறது. இப்படத்தில் மேதில் தேவிகா, நிகிலா விமல், பிஜு மேனன், அனுஸ்ரீ நாயர், அனு மோகன் மற்றும் ஹக்கிம் ஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் காதல், விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. இப்படம் வருகிற 13-ந் தேதி மனோரமா மேக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

'பொகெயின்வில்லா'

பகத் பாசிலின் நெருங்கிய நண்பரான அமல் நீரட் இயக்கியுள்ள திரைப்படம் 'பொகெயின்வில்லா'. இந்த படத்தில் பகத் பாசில் மற்றும் குஞ்சாக்கோ போபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுஷின் ஷியாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அதிரடி ஆக்சன் நிறைந்த கதைக்களத்தில் உருவான இப்படம் கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி வெளியானது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படம் சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வருகிற 13-ந் தேதி வெளியாக உள்ளது.

'விடுதலை பாகம் 1'

வெற்றிமாறன், இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் 'விடுதலை'. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. முதல் பாகத்தில் அதிகாரத் திமிர் எளியவர்களை எப்படி பாதிக்கிறது, விசாரணை என்ற பெயரில் மீறப்படும் மனித உரிமைகள் சட்டத்தைக் கையில் வைத்து நிகழ்த்தப்படும் என்கவுன்ட்டர்கள் பற்றி இப்படம் கூறுகிறது. இந்தநிலையில் 'விடுதலை பாகம் 1' வருகிற 13-ந் தேதி ஜீ5 தளத்தில் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்