இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்
|இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் குறித்த ஒரு பார்வை.
திரையரங்குகளில் வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளது. ஆனாலும், ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்'
பிரபல நடிகை நயன்தாராவும், பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு மாமல்லபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய முழு திருமண வீடியோ ஆவணப்படமாக நெட்பிளிக்ஸ் தளத்தில் நேற்று (18.11.2024) வெளியாகி உள்ளது. இவரது சிறுவயது வாழ்க்கை முதல், முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து ஒரு ஆவணப்படமாக உருவாகி உள்ளது. இதில் நயன்தாராவின் பேட்டியும், அவர் படப்பிடிப்பில் பங்கேற்கும் காட்சிகள், மேக்கப் போடுவது, விக்னேஷ் சிவனுடன் ஏற்பட்ட காதல் உள்ளிட்ட பல விசயங்களும் இடம் பெற்றுள்ளன.
ராக்கெட் டிரைவர்
ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத் வல்லப் தயாரித்துள்ள படம் "ராக்கெட் டிரைவர்". இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீராம் அனந்த சங்கர் இயக்கியுள்ளார். பேண்டசி, டிராமா-காமெடி என்டர்டெயினர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் விஷ்வந்த் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை சுனைனா, ஜெகன் நாக விஷால், காத்தாடி ராமமூர்த்தி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் நேற்று வெளியாகி உள்ளது.
கிஸ்கிந்தா காண்டம்
திஞ்சித் அய்யாதன் இயக்கத்தில் மர்ம திரில்லர் கதை களத்தில் உருவான படம் 'கிஷ்கிந்தா காண்டம்'. இப்படத்தில் ஆசிப் அலி , விஜயராகவன் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த மாதம் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் ஆசிப் அலி முன்னணி கதாபாத்திரத்தில் அதிக வசூல் செய்த படங்களில் இதுவும் ஒன்றாகம். இப்படம் 2024 -ம் ஆண்டு அதிக வசூல் செய்த 9-வது மலையாளப் படமாகும். இப்படம் இன்று (19.11.2024) டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
விவேசினி
பவன் ராஜகோபாலன் இயக்கியுள்ள படம் 'விவேசினி'. இந்தப் படத்தில் நாசர், காவ்யா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் டிரெக்கிங் சென்றவர்களுக்குள் ஏற்படும் உணர்ச்சிகரமான மோதல்களையும், ஊர் திரும்பிய பிறகு அப்பாவுக்கும் மகளுக்கும் ஏற்படும் உணர்வு மோதல்களையும் அழகாக எடுத்துக்காட்டும் படமாக உருவாகி உள்ளது. திரில்லர் கதைக்களத்தில் இருக்கும் இப்படம் இன்று ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
ஏலியன் ரோமுலஸ்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சயின்ஸ் பிக்சன் ஹாரர் படம் 'ஏலியன்: ரோமுலஸ்'. இந்த படத்தினை 'ஈவில் டெட் மற்றும் டோண்ட் ப்ரீத்' படங்களை பெடே அல்வாரெஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தினை ரிட்லி ஸ்காட் தயாரித்துள்ளார். மேலும் கெய்லி ஸ்பேனி, இசபெலா மெர்சிட், ஸ்பைக் பியர்ன் மற்றும் ஐலீன் வு உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஏலியன் சம்பந்தமாக உருவாகி அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இப்படம் வருகிற 21-ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
மார்டின்
கன்னட சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவர் ஆக்சன் கிங் அர்ஜுனின் சகோதரி மகன் துருவா சர்ஜா. இவர் மார்டின் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்திற்கான திரைக்கதையை அர்ஜூன் எழுதியுள்ளார்.மேலும் கதாநாயகியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வருகிற 22-ந் தேதி வெளியாக உள்ளது.
ஸ்பெல்பவுண்ட்
அமெரிக்க அனிமேஷன் இசை சாகச கற்பனை நகைச்சுவைத் திரைப்படமாகும். இந்த படத்தை விக்கி ஜென்சன் இயக்கியுள்ளார். லும்ப்ரியா எனப்படும் மாயாஜால உலகில் அமைக்கப்பட்ட கதை, இளவரசி எலியன் (ஜெக்லர்) தனது பெற்றோரை அரக்கர்களாக மாற்றிய மந்திரத்தை உடைத்து தனது ராஜ்யத்தை காப்பாற்றும் விதமாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் வருகிற 22-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.