ஓ.டி.டி.யில் வெளியாகும் விக்ராந்த் நடித்துள்ள 'தீபாவளி போனஸ்'
|விக்ராந்த் நடித்துள்ள 'தீபாவளி போனஸ்' திரைப்படம் கிராமத்து கதைக்களத்தில் உருவாகி உள்ளது.
சென்னை,
2005-ம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் விக்ராந்த். அதைத் தொடர்ந்து 'கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, வெண்ணிலா கபடிகுழு 2' ஆகிய படங்களில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றார். குறிப்பாக இவரது நடிப்பில் வெளியான 'பக்ரீத், லால் சலாம்' போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் எஸ்.கே 23 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விக்ராந்த்.
இவர் ஜெயபால் இயக்கத்தில் 'தீபாவளி போனஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ரித்விகா நடித்துள்ளார். ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. இந்த படத்தில் பன்னீர்செல்வம், வெங்கட்ராமன் பாலாஜி, மாலிக் ரபிக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் நாளை ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.