ஓ.டி.டியில் வெளியாகும் 'டெட்பூல் & வோல்வரின்'
|2024-ம் ஆண்டில் வெளியான படங்களில் ஆரம்பத்திலேயே அதிக வசூலை பெற்ற படம் என்ற பெருமையை 'டெட்பூல் & வோல்வரின்' பெற்றுள்ளது.
மார்வெல் படங்களின் வரிசையில் வோல்வரின் மற்றும் டெட்பூல் கதாபாத்திரங்களை ஒன்றிணைத்து 'டெட்பூல் & வோல்வரின்' என்ற படம் உருவானது. இது இதற்கு முன்னதாக வந்த டெட்பூல் மற்றும் டெட்பூல் 2 ஆகிய படங்களின் தொடர்ச்சியாகும்.
இப்படம் கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. ரசிகர்களை இப்படம் வெகுவாக கவர்ந்து வசூலை அள்ளியது. அதன்படி, ரியான் ரெனால்ட் மற்றும் ஹக் ஜேக்மேன் நடித்துள்ள இப்படம் ரூ.8,000 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புயலை கிளப்பியது.
மேலும், இது 2024-ம் ஆண்டில் வெளியான படங்களில் ஆரம்பத்திலேயே அதிக வசூலை பெற்ற படம் என்ற பெருமையை பெற்றது. இதனையடுத்து, இப்படம் எப்போது ஓ.டி.டியில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.
தற்போது ரசிகர்கள் எதிர்பார்த்தபடி 'டெட்பூல் & வோல்வரின்' படம் ஓ.டி.டியில் வெளியாக உள்ளது. அதன்படி, வருகிற நவம்பர் மாதம் 12-ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.