ஹனி பன்னி வெப் தொடரில் எனது கதாபாத்திரம் சவாலானது - நடிகை சமந்தா
|ஹனி பன்னி வெப் தொடர் தொடர்பான ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசும்போது கடந்த காலங்களில் சில படங்களில் என்னுடைய சிறந்தவற்றை வழங்கவில்லை கூறியுள்ளார்.
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையான சமந்தாவுக்கு தமிழ், தெலுங்கு திரை உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இந்நிலையில் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா. பின்னர், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதையடுத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய சமந்தா மயோடிசிஸ் என்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக சினிமாவில் இருந்து ஓய்வெடுத்த சமந்தா ஆன்மீகம், உடற்பயிற்சி யோகா ஆகியவற்றில் தீவிர ஆர்வம் காட்டினார். நோயில் இருந்து மீண்டு வந்த சமந்தா புதிய படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
ஹாலிவுட் வெப் தொடரான சிட்டாடல் தொடரில் பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் மேடன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த தொடரின் இந்தி பதிப்பான 'சிட்டாடல் ஹனி பனி'யில் சமந்தா நடித்துள்ளார். இந்த வெப் தொடருக்கு 'சிட்டாடல்: ஹனி பன்னி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொடரில் நடிகர் வருண் தவான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்தத் தொடரில் சிக்கந்தர் கெர், எம்மா கேனிங், கே கே மேனன் மற்றும் சாகிப் சலீம் ஆகியோர் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளனர். ஆக்சன் திரில்லர் நிறைந்த இந்த தொடரை இயக்குனர் ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ளர். இது இவர்களது கூட்டணியில் 2-வது முறையாக உருவாகும் தொடராகும்.
சிட்டாடல் தொடர் ரிலீஸை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அதில் சமந்தா கூறியதாவது: நான் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் என்னை நானே மிகுந்த சவாலுக்கு உள்படுத்துவேன் என எனக்கு நானே சத்யம் செய்துகொண்டேன். கடந்த காலங்களில் சில தவறுகள் செய்துவிட்டதை ஒப்புக்கொள்கிறேன். நான் நினைத்தது மாதிரி படங்கள் வெற்றியடையவில்லை. என்னுடைய கடைசி சில படங்களில் நான் என்னுடைய சிறந்தவற்றை வழங்கவில்லை. தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன். சிட்டாடல்: ஹனி பன்னி தொடரில் எனது கதாபாத்திரம் குறித்து பெருமையாக இருக்கிறது. எனது சினிமா வாழ்க்கையி ல் மிகவும் கடினமான, பல தளங்களில் அமைந்த, சவாலான ஒரு கதாபாத்திரம் என்றால் அது இந்தப் படத்தில்தான். ஆனால், அது எப்படி இருக்கிறதென நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார். நடிகை சமந்தா கடைசியாக குஷி படத்தில் நடித்திருந்தார். தற்போது, மா இன்டி பங்காரம் படத்தில் நடித்து வருகிறார். சிட்டாடல் இணையத்தொடர் ஓடிடியில் வெளியானது.கௌதம் மேனம் இயக்கும் படத்தில் மலையாளத்திலும் சமந்தா அறிமுகமாகவிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
ஜிக்ரா புரமோஷன் நிகழ்வில் ஆலியா பட் சமந்தாவை இந்தியாவின் முக்கியமான நடிகை என மிகவும் புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது. வெப் தொடரான 'சிட்டாடல் ஹனி பனி' வருகிற வரும் 7-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.